இளைஞன் |
எங்கு பார்த்தாலும் பூத்துக்குலுங்கும் மலர்கள், பசுமையான சோலைகள், வற்றாத ஆறுகள் என இயற்கை அழகுகளால் நிறைந்த இந்திரதேசம் என்னும் ஒரு நாடு இருந்தது.
இவ்வளவு அழகு நாட்டில் மன்னர் என சொல்லிக்கொள்ள யாருமில்லை. காரணம், அந்த நாட்டில் விசித்திரமான ஒரு பழக்கமும் இருந்தது.
அந்த நாட்டை மக்களால் தேர்ந்துதெடுக்கப்படும் ஒருவர் தான் மன்னராக இருக்க முடியும்.
அதுவும் மன்னராக வெறும் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும் தான் இருக்கமுடியும்.
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, அந்த மன்னனை, அந்த நாட்டின் எல்லையில் அமைந்திருக்கும் நதியின், மறுக்கரையில் இருக்கும் கொடிய விலங்குகள் நிறைந்த அடர்ந்த காட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
அடர்ந்த காடு |
இந்த விசித்திரமான வழக்கத்தினால் அந்த நாட்டிற்கு யாரும் மன்னனாக வர விரும்பவில்லை.
இதுவரை ஆண்ட மன்னர்களில் யாரும் அந்த காட்டிற்கு சென்று உயிருடன் திரும்பவில்லை.
இதனாலயே! அந்த நாட்டிற்கு மன்னன் என்று யாருமில்லை. இப்படி இருக்க புத்திசாலியான, குறும்புத்தனம் கொண்ட மார்க்கண்டேயன் எனும் ஒரு இளைஞன் அரசனாக வேண்டுமென முடிவெடுத்தான்.
இதை அந்த ஊர் மக்களிடம் தெரிவிக்க, அந்த ஊர் மக்களும் தங்களுடைய நடைமுறை பழக்கவழக்கத்தினையும் அவனிடம் தெரிவித்தனர்.
அவனும் சம்மதம் தெரிவிக்க கோலாகலமாக மார்க்கண்டேயனுக்கு முடிசூட்டு விழா நடந்தது.
மார்க்கண்டேயன் ஐந்து வருடங்களுக்கு மிகவும் சந்தோஷமாகவும், எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி நாட்களை கழித்தான்.
அந்த ஐந்து ஆண்டுகளில் ஒருவரைக் கூட எவ்வித அதிகாரமும் செய்யவில்லை.
காலண்டர் |
ஐந்து ஆண்டுகளும் முடிந்தது. மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மார்க்கண்டேயனை அந்த கொடிய வனத்திற்கு அனுப்ப அவனை சந்தித்தனர்.
அப்பொழுது மார்க்கண்டேயன் மக்களை பார்த்து "இதுவரையில் மன்னனாக உங்கள் யாரையும் நான் அதிகாரம் செய்யவில்லை.
ஆதலால் என்னை காட்டிற்கு அனுப்புவதற்கு முன்னால் பெரும் விழாவை ஏற்பாடு செய்து மேளதாளங்கள் உடன் வழி அனுப்பவேண்டும்" எனக் கோரினான்.
அதற்கு அந்த நாட்டு மக்களும் அவ்வாறே செய்கிறோம் என்று விழாவினை ஏற்பாடு செய்தனர்.
மேளதாளங்கள் முழங்க அந்த நதிக்கரைக்கு மார்க்கண்டேயனை அழைத்துச் சென்றனர்.
மார்க்கண்டேயனும், மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து நதியில் அலங்கரிக்கப்பட்ட படகில் ஏறி அமர்ந்தான்.
படகு |
இவனது மகிழ்ச்சினை கண்டு ஊர் மக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
மார்க்கண்டேயனை பார்த்து மக்கள் "இது நாள்வரையில் மன்னனாக இருந்த யாரும் இவ்வளவு மகிழ்ச்சியாக காட்டிற்க்கு சென்றதில்லை.
நீங்கள் ஒருவரே! மகிழ்ச்சியாக செல்கிறீர்கள். உங்கள் மகிழ்ச்சியின் காரணம் யாது?" என கேட்டனர்.
அதற்கு மார்க்கண்டேயன், "நீங்கள் கேட்பது சரியான கேள்வி தான்.
இதுநாள் வரையில் உங்களை ஆண்ட மன்னர்கள் யாரும் செய்யாத செயலை நான் செய்திருக்கிறேன்.
அதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை" என்றான்.
அதற்கு அந்த ஊர் மக்கள், அவ்வாறு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? என கேட்டனர்.
அதற்கு மார்க்கண்டேயன், "மக்களே! நான் இந்த ஐந்து ஆண்டுகள் உங்களை எவ்வித ஆட்சியும், அதிகாரமும் செய்யவில்லை.
அதற்கு காரணம் இருக்கிறது. இந்த நாடானது எனக்கு எவ்விதமான சொந்தமும் இல்லாதது.
ஆகையால் தான் உங்களை நான் ஏதும் செய்யவில்லை" என்றான்.
அதற்கு அந்த ஊர் மக்கள், அப்படியானால் உங்களுக்கு சொந்தமான நாடு எங்கே உள்ளது என கேட்டனர்.
உலக வரைபடம் |
அதற்கு மார்க்கண்டேயன், " நான் எனது நாட்டினை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறேன்" என்றான்.
அந்த ஊர் மக்கள் அனைவரும் அங்கு காடு தான் இருக்கிறது. அதனை நாடு என கூறுகிறீர்கள்.
உங்களுக்கு பயத்தில் பைத்தியம் பிடித்துவிட்டது என கிண்டல் செய்தனர்.
அதற்கு மார்க்கண்டேயன், "மக்களே! நான் கடந்த ஐந்து ஆண்டுகளில் வெறுமென பொழுதினை போக்கவில்லை.
முதல் ஆண்டில் வேட்டையாடுவதில் மிக சிறந்த வேட்டைக்காரர்களை நான் செல்லவிருக்கும் காட்டிற்கு அனுப்பி அங்கிருக்கும் கொடிய விலங்குகளை வேட்டையாட செய்தேன்."
இரண்டாம் ஆண்டில், "மரம் வெட்டுவதில் வல்லவர்களை அனுப்பி காட்டினை ஒழுங்கு படுத்தினேன்."
மூன்றாம் ஆண்டில் "கட்டிடக்கலையில் சிறந்து விளங்கும் நபர்களை தேர்ந்தெடுத்து வண்ணமயமான அழகிய கட்டிடங்களை கட்டி முடித்தேன்."
அரண்மனை |
நான்காம் ஆண்டில் "உண்மையில் சிறந்த எனக்கு விசுவாசமான நல்ல மனிதர்களை தேர்ந்தெடுத்து அவர்களை அங்கு அனுப்பி வாழச்செய்தேன்."
இப்பொழுது அங்கு எனக்கான நாடானது உருவாகிவிட்டது. அந்த நாட்டில் நான் முடிசூடி மன்னனாக போகிறேன்.
என் நாடும், என் மக்களும் எனக்காக காத்திருக்கின்றனர். நான் வருகிறேன் எனக் கூறி படகில் பயணித்து சென்றான்.
இதனை கேட்ட அந்த ஊர்மக்கள் அதிர்ச்சியில் வாயடைத்துப் போயினர்.
தமது முட்டாள்தனமான வழக்கத்தினால் ஒரு நல்ல மன்னனை இழந்ததை எண்ணி வருத்தப்பட்டு நாடு திரும்பினார்.
மார்க்கண்டேயன் அவனது நாட்டிற்கு சென்று முடிசூடி நல்லாட்சியினை செய்தான்.
கதையின் நீதி!
எதிர்காலத்தை எண்ணி பயந்து வாழுவதை காட்டிலும், நமக்கான எதிர்காலத்தை நாமே உருவாக்குவது சிறந்தது. நமது எதிர்காலம் நமது கையில் தான் உள்ளது.
0 Comments