Ticker

6/recent/ticker-posts

பேய் கொடுத்த சாபத்தால் கிடைத்த நன்மை | நீதிக்கதைகள்

பேய்கள்
பேய்கள்

தமிழ்நாட்டில் தென்கோடிக்கரையில் முனியன் என்று ஒரு விவசாயி இருந்தான்.

தனது வாழ்நாட்கள் முழுதும் கூலிவேலைப் பார்த்து சேர்த்த பணத்தை வைத்து ஒரு நிலம் வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டுருந்தான்.

அதே ஊருக்கு பக்கத்து ஊரில் மாணிக்கம் என்ற ஒர் செல்வந்தன் இருந்தான்.

அவனுக்கு சொந்தமான ஒரு வயலில் ஒரு பேய் பல வருடங்களாக வாழ்ந்து வந்தது.

அந்த நிலத்தில் யாரையும் விவசாயம் செய்ய விடாமல் பயமுறுத்தி வந்தது.

இதனால் அந்த நிலம் இருந்தும் பயனற்று இருக்க அதனை விற்க மாணிக்கம் முடிவு செய்தான்.

அந்த நிலத்தில் உள்ள பேய்க்கு பயந்து அந்த ஊரில் யாரும் அந்த நிலத்தை வாங்கவில்லை.

இதனால் மாணிக்கம் இந்த நிலத்தை பற்றி தெரியாத பக்கத்து ஊரில் யாரிடமாவது கொடுத்துவிடலாம் என்று முடிவு எடுத்தான்.

அதிகமான நிலம், குறைவான விலைக்கு வருவதை எண்ணி முனியன், கடவுளாக பாரத்து தனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார் என எண்ணினான்.

தனது வாழ்நாள் முழுவதும் சேர்த்த பணத்தை கொண்டு அந்த நிலத்தை வாங்கினான்.

பணம்
பணம்

மாணிக்கமும் உண்மையை மறைத்து நிலத்தை விற்றான். நிலத்தை வாங்கிய மகிழ்ச்சியில், மறுநாள் தனது கலப்பையை கொண்டு அந்த நிலத்தை உழ தொடங்கினான்.

அப்பொழுது பெரும் சப்தத்துடன் அந்த நிலத்திலிருந்து பேயானது வெளிப்பட்டது.

அதனை கண்ட முனியன் பயந்து நடுங்கி, தனது கலப்பையை அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டான்.

வீட்டிற்கு சென்று தனது மனைவியிடம், நடந்ததை கூறி அழதொடங்கினான்.

முனியனின் மனைவி, தனது கணவனின் நிலையைக் கண்டு மனம் கலங்கினாள்.

பின்னர், முனியனுக்கு ஆறுதல் கூறி தைரியப்படுத்தினாள், இனிமேல் வேறு நிலம் வாங்க நம்மிடம் பணமில்லை.

அதனால் அந்த நிலத்தில் எப்படியாவது நாம் விவசாயம் செய்துவிட வேண்டும் என்று கூற, இதனை கேட்ட முனியன் பயந்தான்.

உழவு செய்தல்
உழவு செய்தல்

மறுநாள், முனியனுடன் அவனுடைய மனைவியும் வயலுக்கு சென்று நிலத்தை உழ ஆரம்பித்தனர்.

மீண்டும் பெரும் சப்தத்துடன் கோரமாக பேயானது வெளிப்பட்டது.

இதனை கண்ட முனியனும், அவனுடைய மனைவியும் பயந்து அங்கிருந்து ஓடிச் சென்றனர்.

முனியன் அவனுடைய மனைவியிடம் இனி என்ன செய்வது என கேட்டான்.

மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, இனிமேல் நடப்பதை அந்த கடவுள் பார்த்துக் கொள்வார் என கூறி, தினமும் வயலை உழுவது, பேயைப் பார்த்து ஓடிவருவதாய் போனது.

ஒரு கட்டத்தில், முனியனும் அவனுடைய மனைவியும் தைரியத்துடன், பேயைப் பார்த்து என்ன உனக்கு வேண்டும் எதற்காக இவ்வாறு செய்கிறாய் என்று கேட்டனர்.

அதற்கு, அந்த பேயோ! நான் வாழும் இடத்தில் தொல்லை செய்கிறீர்களே! நீங்கள் யார் என்றது.

அதற்கு முனியனும், அவனுடைய மனைவியும், அந்த நிலம் எங்களுடையது என்றனர்.

விவசாயி
விவசாயி

அந்த பேய், பயங்கரமாக சிரித்து இது நான் வாழும் இடம், தொந்தரவு செய்தால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியது.

அதற்கு முனியன், இந்த நிலம் இல்லை என்றால் நாங்கள் இறக்க தான் வேண்டும். அதற்கு நீயே கொன்று விடு என்றான்.

பேய், இவர்கள் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தது. பின்னர், இவர்கள் தினமும் நிலத்தில் ஏதாவது செய்வதும், பேய் இடையூறு செய்வதாகவும் பல நாட்கள் சென்றன.

ஒரு கட்டத்தில், பேய் அவர்களை தடுக்காமல் தக்க சமயத்திற்காக காத்திருந்தது.

பேயின் தொந்தரவு இல்லாததால் முனியனும், அவனுடைய மனைவியும் விவசாயம் செய்து அதிகமான விளைச்சலுடன் வயலும் செழித்தது.

அறுவடை நாளும் வந்தது. மிகுந்த மகிழ்ச்சியுடன் முனியனும், அவனது மனைவியும் அறுவடை செய்ய ஆரம்பிக்கும் பொழுது, மிகுந்த கோபத்துடனும் பேயானது வெளிப்பட்டது.

இதனை பார்த்து பயந்த முனியனும், அவனது மனைவியும் திகைத்து நின்றனர்.

அந்த பேயானது, இருவரையும் பார்த்து நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், எனக்கு இடையூறு கொடுத்தீர்கள்.

இப்பொழுது மகிழ்ச்சியுடன் அறுவடைக்கு தயாராக உள்ளீர்களா? உங்களுடைய மகிழ்ச்சியை இல்லாமல் செய்கிறேன் என்றது.

பின்னர், அவர்களை பார்த்து இனி இந்த நிலத்தில், நீங்கள் அடிக்கும் ஒவ்வொரு நெற்கட்டுகளுக்கும், ஒரு படி நெல் தான் கிடைக்கும் என்று சாபம் கொடுத்தது.

நெல்மணிகள்
நெல்மணிகள்

பின்னர் சாபம் கொடுத்த மகிழ்ச்சியில் பேயானது அங்கிருந்து போய்விட்டது.

முனியனும், அவனது மனைவியும் இவ்வளவு காலம் கஷ்ட பட்டதையெல்லாம், நொடி பொழுதில் அழித்துவிட்டு பேயானது போய்விட்டதே என்று அழுதனர்.

பின்னர் முனியன், கடவுளே எங்களுக்கு எதற்காக இந்த சோதனை என்று முறையிட்டான்.

அப்பொழுது, அவனுடைய மனைவிக்கு ஓரு யோசனை வந்தது. முனியனுக்கு ஆறுதல் சொல்லி விட்டு, அவளது யோசனையை சொன்னாள்.

பின்னர், பேயானது ஒரு கட்டு நெற்கதிருக்கு, ஒரு படி நெல்மணி தான் கிடைக்கும் என்று சொல்லியது.

நாம் நெல்கதிரை கட்டிற்கு அதிகமாக வைத்து கட்டாமல் ஒரேயொரு கதிரை கட்டி அடித்து பார்க்கலாம் என்றாள்.

மனைவியின் யோசனை தான் சரி என்று முனியனும் அவளது சொற்படியே செய்தான். ஒரு கதிருக்கு ஒரு படி நெல் வந்தது.

இதனை பார்த்த முனியன் சந்தோஷத்தில் ஆடினான். மனைவியை எண்ணி பெருமையடைந்தான்.

ஒவ்வொரு முறையும், நிலத்தில் அதிகப்படியான விளைச்சலை பெற்று பெரும் செல்வந்தனாக மாறினான்.

கதையின் நீதி!

"தொடர் முயற்சிகளால், வேதனைகள் பல பட்டாலும், இறுதியில் நன்மையே வந்து சேரும்."

"இறைவன் எவ்வளவு சோதனைகள் கொடுத்தாலும், கைவிடமாட்டான்."

Post a Comment

0 Comments