மந்திரவாதி |
Vikramathithan Kathaikal | Pojarajan Kathaikal | Part 5
போஜராஜனும், அவனது ஊர் மக்களும் விக்கிரமாதித்யன் மற்றும் பட்டியினைப் பற்றி தெரிந்துக் கொள்ள மிகவும் ஆர்வம் கொண்டவர்களாக மாறினர்.
இதனால் போஜராஜன் இன்று பதுமை என்ன சொல்லப் போகின்றது என தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில், அரசவை நோக்கிப் புறப்பட்டான்.
சிம்மாசனத்தில் முதல் மூன்று படிகளில் அடியெடுத்து வைக்க பதுமையானது அமைதியாக இருந்தது.
நான்காவது படியில் அடியெடுத்து வைக்க, பதுமையானது சிரித்தது.
மன்னனை பார்த்து, எம்மன்னனை பற்றித் தெரிந்துக்கொள்ளும் ஆர்வமானது உங்கள் கண்களில் தெரிகிறதே! உண்மை தானே மன்னா!
ஆம் பதுமையே! மாமன்னர் விக்கிரமாதித்யனை பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வமாக உள்ளேன். சொல் பதுமையே என்றான்.
இதனைக் கேட்ட பதுமை! கட்டாயமாக சொல்கிறேன். எம்மன்னனைப் பற்றி தெரிந்துக்கொள்ள எல்லோர்க்கும் ஆர்வம் வருவது இயல்பு தான் என்று கூறி விக்ரமாதித்யனை பற்றி கூறத் தொடங்கியது.
மன்னா! எம்மன்னருக்கு வந்த பல்வேறு சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றி உள்ளார். அதனைப்பற்றி சொல்கிறேன் கேள் என்றது.
மன்னனும் சொல் என்றார். எம்மன்னின் புகழினைக் கண்டு மயங்கியவர் பலர். ஆனால் ஒரு சிலரோ எப்படியும் மன்னனை வீழ்த்த வேண்டும் என நினைத்தனர்.
அதில் முதன்மையானவன் தீய எண்ணங்களை உடைய மாபெரும் சக்தியினை தனதாக கொண்ட ஓரு கெட்ட மந்திரவாதி.
மந்திரவாதி |
எம்மன்னனின் புகழினை கண்டு, எப்படியும் அவரை அழித்தாக வேண்டும் என வைராக்கியம் கொண்டு அலைந்தான்.
அதுமட்டுமல்லாது, மாய சக்திகள் நிறைந்த, எதனையும் எளிதில் வெல்லக்கூடிய வேதாளத்தை அடிமையாக்க எண்ணி தொள்ளாயிரத்து தொண்ணுற்று ஒன்பது மன்னர்களை ஏமாற்றி பலியிடவும் செய்தான்.
ஆயிரமாவது மன்னனாக விக்கிரமாதித்யனை பலியிட திட்டம் தீட்டினான்.
தனது சக்தியினைக் கொண்டு விக்கிரமாதித்தனை ஏதாவது செய்ய நேர்ந்தால், எப்படியும் காளி தேவி தடுத்துவிடுவாள்.
ஆகையால், தனது உருவத்தினை முனிவரின் உருவத்திற்க்கு மாற்றி அரசவையில் நுழைந்தான்.
அவனை முனிவரென கருதி விக்கிரமாதித்யன் சிறப்பாக உபசரித்தான்.
அந்த மந்திரவாதி! விக்கிரமாதித்யனைப் பார்த்து, விக்கிரமாதித்யா! நான் இந்த அகிலத்தின் நலனைக் கருத்தில் கொண்டு மாபெரும் யாகத்தினை நடத்த இருக்கின்றோம்.
அதற்கு உன்னுடைய உதவியானது எனக்கு தேவை என்றான்.
இதனைக்கேட்ட விக்கிரமாதித்யன், முனிவரே! எவ்வகையில் உதவ வேண்டும் எனக் கட்டளையிடுங்கள் காத்திருக்கிறேன் என்றான்.
அதற்கு மந்திரவாதி! விக்கிரமாதித்யா இங்கிருந்து பதினாறு மைல் தொலைவில் ஒரு காளி கோவில் உள்ளது.
மைல்கல் |
அங்கு தான் நான் சொன்ன யாகத்தினை அமாவசை தினத்தன்று வளர்க்க வேண்டும்.
அதற்கு இடையூறு வராமல் இருக்க, நீ என்னுடன் வர வேண்டும் என்றான்.
விக்கிரமாதித்யன் சற்றும் யோசிக்காமல், மந்திரவாதியை முனிவர் என நினைத்து சம்மதம் தெரிவிக்க, பட்டி இடைமறித்து தானும் வருவதாக சொன்னான்.
இதனைக் கேட்ட மந்திரவாதி, பட்டி விக்கிரமாதித்தனுடன் வந்தால் காரியம் கெட்டுவிடும் என்றான்.
விக்கிரமாதித்யன் வரும்வரை நாட்டை பார்த்துக்கொள்ள நீ இங்கே இருக்க வேண்டும் என்றான்.
விக்கிரமாதித்யனும், பட்டியை நாட்டை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு மந்திரவாதியுடன் புறப்பட்டு சென்றான்.
இருவரும் யாகம் செய்யும் இடத்தை அடைந்தனர். மந்திரவாதி யாகத்தினை ஆரம்பித்தான்.
சிறிது நேரம் சென்றவுடன், மன்னா! நீங்கள் யாகத்திற்காக ஒன்றை செய்ய வேண்டும் என கூற, விக்கிரமாதித்தனும் சொல்லுங்கள் முனிவரே என்றான்.
தாம் இங்கிருந்து மேற்கு நோக்கி சென்றால், ஒர் பழமையான இடுகாடு வரும்.
இடுகாடு |
அந்த இடுகாட்டின் மையத்தில் ஓரு பழமையான முருங்கை மரம் இருக்கும்.
அதில், ஒரு பழமையான வேதாளம் இருக்கும் அதனை யாகத்திற்கு நீ கொண்டு வர வேண்டும் என்றான்.
இதனைக் கேட்ட விக்கிரமாதித்யன், வேதாளத்தினை எப்படி கொண்டு வருவது எனக் கேட்டான்.
அதற்கு அந்த மந்திரவாதி, இந்த யாகத்திற்கு வேதாளமானது மிகவும் முக்கியமானது. அதனால் எவ்வகையிலாவது, அதனை நீ கொண்டு வர வேண்டும்.
உன்னை தவிர வேறு எவராலும், இதை செய்ய முடியாது. ஆகையால், நீ துணிந்து செல் என்றான்.
விக்கிரமாதித்யன், உலக நன்மைக்காக, தான் இதனை செய்ய வேண்டும் என்று மனதினுள் நினைத்து துணிந்து சென்றான்.
நீண்ட தொலைவிற்கு பிறகு, அந்த இடுகாட்டினை அடைந்தான். அங்கு பார்ப்பதற்கு பயங்கரமாக அமானுஷ்யமான சிலவற்றை கண்டான்.
அங்கு பேய்களும், பிசாசுகளும் அங்குமிங்கும் அலைந்து திரிந்துக் கொண்டிருந்தது.
பேய் |
அந்த பேய்களும், பிசாசுகளும் விக்கிரமாதித்யனை நெருங்க, அவனது குதிரை அவைகளை பார்த்து பயந்து ஓடி மறைந்தது.
ஆனால் விக்கிரமாதித்யனோ! அதனை கண்டு பயம் கொள்ளாமல் துணிந்து முன்னேறி சென்றான்.
விக்கிரமாதித்யனின் துணிச்சலை கண்டு, பேய்களும், பிசாசுகளும் விலகிச் சென்றன.
ஒருவழியாக வேதாளம் இருக்கும், முருங்கை மரத்தினைப் பார்த்தான்.
வேதாளமானது அந்த முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்கி கொண்டிருந்தது.
விக்கிரமாதித்யன்! வேதாளத்தினை நெருங்கி அதன் முகத்தினைப் பார்த்தான்.
அகோரமான முகத்துடன் கூர்மையான பற்களை கொண்டு, கால்கள் இல்லாமல் நீண்ட வாலைக் கொண்டு மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.
இதனைக் கண்ட விக்கிரமாதித்யன், ஆச்சரியப்பட்டான். பின்னர், தொங்கிக் கொண்டிருந்த வேதாளத்தை பிடித்து கட்டி தூக்கி தோளில் சுமந்து நடக்க ஆரம்பித்தான்.
வேதாளமானது, தனது கூர்மையான பற்களுடன் கோரமாக சிரித்தது.
விக்கிரமாதித்யன், வேதாளமே! எதற்காக என்னைப் பார்த்து இப்படி சிரிக்கின்றாய் எனக் கேட்டான்.
அதற்கு அந்த வேதாளம், என்னை பற்றி முழுமையாக தெரியாமல் பிடித்து விட்டாய். இனி உனது நிலமையை நினைத்தேன் சிரித்தேன் என்றது.
பூசணி |
அதற்கு விக்கிரமாதித்யன், அப்படியென்ன, என் நிலைமை ஆகுமென நினைத்து சிரிக்கிறாய் என்று கேட்டான்.
அதற்கு அந்த வேதாளம், இதற்கு முன்பு பலர் என்னை பிடிக்க முயற்சித்து உயிரை விட்டு உள்ளனர். அவ்வாறு உனது உயிரும் பிரிய போவதை எண்ணி சிரித்தேன் என்றது.
அதற்கு விக்கிரமாதித்யன், எதனால் எனது உயிர் பிரிய போகிறது என்று கேட்டான்.
அதற்கு அந்த வேதாளம், என்னை பிடிக்க வேண்டுமானால், நான் சொல்லும் கதையை கேட்டு, அந்த கதையில் இருந்து நான் கேட்கும் கேள்விகளுக்கு நீ சரியான பதிலை சொல்ல வேண்டும்.
அவ்வாறு நீ பதில் சொல்லவில்லை எனில் உன் தலையை கடித்து தின்று விடுவேன் என்றது.
அதற்கு விக்கிரமாதித்யன், அதற்கு நான் தவறான பதிலை சொன்னால் தானே எனது உயிர் போகும். நான் சரியான பதிலை சொல்லி விட்டால் என்ன செய்வாய் என கேட்டான்.
அதற்கு அந்த வேதாளம், மறுபடியும் சிரித்தது.
ஏன் மறுபடியும் சிரிக்கின்றாய்? என வேதாளத்தை பார்த்து விக்கிரமாதித்யன் கேட்டான்.
அதற்கு அந்த வேதாளம், நீ என்னை தூக்கி செல்லும் பொழுது, நீ வாய் திறந்து பேசினால், நீ கட்டிய கட்டிலிருந்து விடுபட்டு மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்வேன் என்றது.
சரி என்று கூறி விக்கிரமாதித்யன் வேதாளத்தை பிடித்துக்கொண்டு நடக்க தொடங்கினான்.
பதுமை போஜராஜனை பார்த்து, மன்னா! எம்மன்னனின் கதையை கேட்டு மாலைப்பொழுதாகியதைக் கூட அறியாமல் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். செல்லுங்கள் மன்னா! நாளை வாருங்கள் என்றது.
மன்னனும், மக்களும் விடியல் எப்பொழுது வரும் என எண்ணி திரும்பி சென்றனர்.
0 Comments