கடல் உப்பான கதை |
அந்த காலத்தில் கடல் தண்ணீர் நாம் குடிக்கின்ற போன்ற நல்ல தண்ணீராகவே இருந்தது.
இந்த தண்ணீர் உப்பானதற்கு காரணம் ஒரு சாதாரணமான விஷயத்தால் என்றால் நம்புவீர்களா!
சீன நாட்டில், மிக பெரிய செல்வந்தன் இருந்தான். அவனுக்கு இருமகன்கள் இருந்தனர்.
அந்த செல்வந்தன் இறக்க போகும் நேரத்தில், தனது இரு மகன்களையும் அழைத்தான்.
பெரியவனின் பெயர் சான். இளையவனின் பெயர் சுவிங். இருவரையும் பார்த்து, எனது உயிர் போக போகிறது.
இதுவரை நான் உங்களுக்கு தெரியாமல் இரண்டு பொக்கிஷங்களை மறைத்து வைத்திருந்தேன்.
அது தான் நம்முடைய குடும்பம் காலங்காலமாக, இந்த உலகத்தில் உள்ள அனைவர்க்கும் தெரியும் படியான, பெரும் செல்வந்தனாக இருக்க காரணம்.
இனி நீங்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள் என்றார். சானிடம், ஒரு சிறிய கப்பலை கொடுத்தார்.
கப்பல் |
சுவிங்கிடம் ஒரு சிறிய இயந்திரத்தை கொடுத்தார். இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று கேட்டான் சான்.
சுவிங் தந்தை எது கொடுத்தாலும், அதில் ஏதேனும் நன்மை இருக்கும் என எண்ணி அமைதியாக இருந்தான்.
அதற்கு, அவர்களுடைய தந்தை இவற்றின் உருவத்தை வைத்து எடை போடாதே என்றார்.
அந்த குட்டி கப்பலை கடலில் போட்டால் பெரிய கப்பலாக மாறிவிடும். அது மட்டுமில்லாமல், நினைத்த இடத்திற்கு தானாகவே கொண்டு சேர்த்து விடும்.
நீ கப்பலை மூன்று முறை தட்டினால், மறுபடியும் சாதாரணமாக மாறிவிடும் என்றார்.
சுவிங்கை பார்த்து, உனக்கு தேவைப்படும் உணவை நினைத்து, இந்த இயந்திரத்தை வலப்புறமாக சுற்றினால், அந்த உணவானது வந்து கொண்டே இருக்கும்.
உனது தேவை தீர்ந்ததும், இடப்புறமாக சுற்றினால் நின்று விடும் என்று சொல்லிவிட்டு இறந்து விட்டார்.
சான் பேராசை கொண்டவன். தனது தந்தை காலத்திற்கும், உட்கார்ந்து சாப்பிடுவதற்கு தேவையான உணவை தரும் பொக்கிஷத்தை தம்பிக்கு கொடுத்து விட்டார்.
உணவு |
தனக்கு உழைத்து சாப்பிட வேண்டி இந்த கப்பலை கொடுத்தார் என கோபப்பட்டான்.
சுவிங் தனக்கு கிடைத்த பொக்கிஷத்தை எண்ணி மகிழாமல், தனது தந்தை இறந்ததை எண்ணி கவலைப்பட்டான்.
சான், சுவிக்கிடம் இருந்து எப்படியாவது அந்த இயந்திரத்தை அபகரிக்க வேண்டும் என முடிவு செய்தான்.
நாட்கள் ஓடின. சான் ஒரு நாள் சுவிங்கை பார்க்க வந்தான். தனது அண்ணன் வருவதை கண்டு மகிழ்ச்சி அடைந்தான்.
தந்தை கொடுத்த இயந்திரத்தால் சுவைமிகு உணவு பொருட்களை வர வழைத்து கொடுத்தான்.
சான், அந்த உணவை சாப்பிட்டு மெய்மறந்து போனான். உடனே அந்த இயந்திரத்தை அபகரிக்க திட்டத்தை தீட்டினான்.
சுவிங்கை பார்த்து, தம்பி நான் ஒரு வேலை விஷயமாக என்னுடைய கப்பலில் வெளிநாடு செல்கிறேன்.
அந்த நாட்டிற்கு கப்பலில் செல்வதற்கு பல மாதங்கள் ஆகலாம். அதனால் எனக்கு உணவிற்கு பஞ்சம் வரலாம்.
நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்று கூறினான். அண்ணன் தன்னிடம் உதவி கேட்டவுடன், எதுவாயினும் செய்கிறேன் அண்ணா சொல்லுங்கள் என்றான் சுவிங்.
இயந்திரம் |
இது தான் சமயம் என்று எண்ணிய சான் சுவிங்கை பார்த்து, உனக்கு நமது தந்தை கொடுத்த இயந்திரத்தை, எனக்கு கொடு நான் திரும்பி வந்ததும் தந்து விடுகிறேன் என்றான்.
நல்லவனான சுவிங் தாராளமாக எடுத்து செல்லுங்கள் அண்ணா என்று கூறி, அவரது கையில் அந்த இயந்திரத்தை கொடுத்தான்.
பின்னர் அவனுக்கு தந்தை சொன்ன வார்த்தைகளையும், நினைவூட்டினான்.
ஆனால் அவன் கையில் இயந்திரம் வந்த சந்தோஷத்தில், சுவிங் சொன்னதை எதையும், காதில் வாங்கி கொள்ளவில்லை.
தம்பியை ஏமாற்றிவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் தனது கப்பலில் ஏறி கடலில் பயணித்தான்.
நடுக்கடலில் கப்பல் சென்று கொண்டு இருக்கும் பொழுது, சாப்பிடலாம் என்று முடிவு செய்து கையில் வைத்திருந்த உணவை சாப்பிட தொடங்கினான்.
அப்பொழுது அந்த உணவில் உப்பு இல்லை. உடனே என்ன செய்வது என்று யோசித்தான்.
தம்பி கொடுத்த இயந்திரம் நினைவுக்கு வர அதனை எடுத்து உப்பை நினைத்து வலப்புறமாக சுற்றினான்.
உப்பும் வந்தது. உப்பு வருவதை நிறுத்த தெரியாமல், மறுபடியும் வலப்புறமாக சுற்றினான். இதனால் உப்பானது அதிகமாக வர தொடங்கியது.
இடதுபுறமாக சுற்ற வேண்டும் என்பதை முற்றிலும் மறந்தான். உப்பானது, கப்பலில் நிறைய தொடங்கியது.
உப்பு |
ஒரு கட்டத்தில் என்ன செய்வது என அறியாமல் கோபத்தில் கப்பலை தட்ட மூன்றாவது முறையில் கப்பல் சிறியதானது.
இயந்திரத்தில் இருந்து உப்பு வந்து கொண்டிருக்கும் பொழுதே, இயந்திரம் கடலில் மூழ்கியது.
அவனுடைய சிறிய கப்பலும் அவனது கையை விட்டு பறிபோனது. சான், கடலில் தத்தளித்து கொண்டிருக்க, அப்பொழுது அங்கு வந்த ஒரு கப்பலில் ஏறி தனது வீட்டிற்கே சென்றான்.
பின்னர், தம்பியை பார்த்து நடந்ததை கூறினான். தம்பியோ போனது போகட்டும் விடுங்கள் அண்ணா, நீங்கள் நலமுடன் வந்ததே மகிழ்ச்சி என்றான்.
தம்பியின் நல்ல மனதை எண்ணி அண்ணன் மனம் கலங்கினான். பின்னர் திருந்தினான்.
அதன் பிறகு, இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்தனர்.
கடலில் விழுந்த அந்த இயந்திரத்தால் தான் இப்படி கடல் தண்ணீர் உப்பாக உள்ளதாக சில நாடுகளில் கதைகள் உண்டு.
கதையின் நீதி!
அளவுக்கு மீறி ஆசை கொண்டால் இருப்பதும் இல்லாமல் போய்விடும்.
எல்லாம் நன்மைக்கே என்று எடுத்து கொண்டால் எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் பனிபோல விலகும்.
0 Comments