வேதாளமும், விக்ரமாதித்தனும் |
Vikramathithan Kathaikal | Pojarajan Kathaikal | Part 6
காலைப்பொழுதும் புலர்ந்தது. மன்னனும், மக்களும் இன்று பதுமை என்ன சொல்ல போகிறது என்று கேட்க ஆர்வத்துடன் அரசவையில் கூடினர்.
மன்னன் போஜராஜன்! அந்த பதுமைகள் நிறைந்த அழகிய சிம்மாசனத்தில் அடியெடுத்து வைத்தான்.
முதல் மூன்று பதுமைகள் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தன. நேற்று பேசிய பதுமை, இப்பொழுதும் பேசும் என எண்ணி நான்காவது படியில் அடியெடுத்து வைத்தான்.
ஆனால் அந்த பதுமையோ அமைதியாக இருந்தது. மன்னன் அதிர்ச்சியடைந்தான். ஐந்தாவது படியில் அடியெடுத்து வைத்தான்.
அந்த பதுமையானது பேசத்தொடங்கியது. முதலில் தனது பெயரினை கூறி, மன்னா! எம்மன்னனை கண்டு மயங்காதவர், இந்த அகிலத்தில் இல்லை.
நீயும், இந்த நாட்டு மக்களும் ஆர்வமாக இருப்பது இயல்பு தான். வேதாளம் கூறிய முதல் கதையினை கூறுகிறேன் கேளுங்கள் என்றது.
எம்மன்னன் விக்கிரமாதித்யன், வேதாளத்தினை கட்டி தூக்கி தோளில் சுமந்து செல்லும் பொழுது, வேதாளமானது தனது முதல் கதையினை கூற தொடங்கியது.
எங்கு பார்த்தாலும் பசுமை நிறைந்த அடர்ந்த காடுகளின் நடுவில் இயற்கை சூழல்கள் நிறைந்த சந்திரபுரி என்னும் ஒரு அழகிய ஊர் இருந்தது.
அழகிய ஊர் |
அந்த ஊரில் பூவிழி என்று ஒரு அழகான பெண் இருந்தாள். அவள் எவ்வளவு அழகு என்றால் அழகே அவளது அழகைக் கண்டு பொறாமை கொள்ளும் அளவிற்கு அழகு படைத்தவள்.
அவளுக்கு திருமணம் செய்து வைக்க அவளது அண்ணனும், தந்தையும் முடிவு எடுத்தனர். ஆனால், அந்த ஊரில் அவளை ஒருவரும் திருமணம் செய்வதற்கு பெண் கேட்டு வரவில்லை.
காரணம், அவளது அண்ணனும், தந்தையும் அவளை திருமணம் செய்ய வேண்டுமெனில், அதற்காக ஒரு நிபந்தனை விதித்தனர். அந்த நிபந்தனை காரணமாக யாரும் பெண் கேட்டு வரவில்லை.
அந்த நிபந்தனை யாதெனில், இந்த உலகில் உள்ள மனிதர்களில் வித்தியாசமான சக்தியை உடைய நபருக்கே திருமணம் செய்து வைப்பேன் என அறிவித்திருந்ததே காரணம்.
இந்த நிபந்தனை அறியாமல் அவளை பெண் கேட்டு, வெவ்வேறு இடங்களில் இருந்து நான்கு நபர்கள் வந்து இருந்தனர். அவளது அழகினை கண்டு வியந்து போயினர்.
அந்த பெண்ணின் அண்ணனும், தந்தையும் அவள் திருமணத்திற்கு விதித்த நிபந்தனையினை கேட்டு அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அதில் முதலாவதாக வந்தவன் எப்படியும், அவளை திருமணம் செய்வேன் என எடுத்தான்.
பின்னர், ஒரு வருடத்தில் திரும்பி வருவேன். அதுவரையில் காத்திருங்கள் என்று கூறி புறப்பட்டு சென்றான்.
திருமணம் |
இதனை கேட்ட மற்ற மூவரும் அவ்வாறே நாங்களும் ஒரு வருடத்தில் திரும்பி வருவோம் காத்திருங்கள் என சபதம் எடுத்து திரும்பி சென்றனர். அந்த நால்வரும், வெவ்வெறு திசைகளில் சென்று வெவ்வேறான கலைகளில் சிறந்தவர்களாக மாறினார்.
ஒரு வருடத்திற்க்கு பிறகு, அவர்கள் அனைவரும் சந்திரபுரிக்கு, அதே நாளில் வந்து சேர்ந்தனர். ஆவலாக வந்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது.
ஏனென்றால் பூவிழி அங்கு இல்லை. பூவிழியின் தந்தையும், அண்ணனும் மிகுந்த கவலையில் இருந்தனர்.
எங்கே பூவிழி? என நால்வரும் கேட்டனர். அதற்கு அவர்கள் இருவரும், பூவிழி இங்கிருந்து மேற்கு திசையில் உள்ள குளத்திற்கு தண்ணீர் எடுக்க சென்றாள்.
அப்பொழுது எங்கிருந்தோ வந்த, மிகவும் பலம் வாய்ந்த கொடிய குணம் கொண்ட அரக்கன் ஒருவன், அவளை தூக்கி சென்றான். அவன் சென்ற திசையை அறியாமல் உள்ளோம் என கவலையுடன் கூறினார்கள்.
அதற்கு நால்வரில் ஒருவன்! எனக்கு ஒருவர் பயன்படுத்திய பொருளை கொண்டு அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை, எனது ஞானதிருஷ்டியால் எளிதாக கண்டறிந்து விடுவேன் என்று கூறினான்.
இதனை கேட்ட அவளது அண்ணண், பூவிழியின் கைவளையலை கொண்டு வந்து அவனிடம் கொடுத்தான்.
கைவளையல் |
அவனும், அவனது ஞானதிருஷ்டியால் பூவிழி உள்ள இடத்தை கண்டறிந்து கூறினான். இங்கிருந்து மேற்கு திசையில், ஏழு மைல் தொலைவில் மிக உயர்ந்த சிகரம் உள்ளது.
அதன் உச்சியில் உள்ள குகையில் பூவிழி அழுதுக்கொண்டு இருக்கிறாள். மேலும், அந்த மலையில் ஏறுவது என்பது மிகவும் ஆபத்தானது, மற்றும் இயலாத காரியமும் கூட என்றான்.
இதனை கேட்ட மீதமுள்ள மூவரில் ஒருவன், அது எவ்வளவு உயரமான இடமானாலும் சரி, என்னால் எளிதாக அங்கு கொண்டு செல்ல இயலும் என்றான்.
எவ்வாறு என பூவிழியின் அண்ணன் கேட்க, அவனோ! எந்த ஒரு பொருளினையும் என்னால் எளிதாக பறக்க வைக்க முடியும் என்றான். உடனே ஒரு கம்பளத்தை எடுத்து பறக்க வைத்தும் காட்டினான்.
இதனை கண்ட அனைவரும் ஆச்சரியமடைந்தனர். பின்னர்! அந்த அரக்கனோ மிகவும் பலசாலி ஆவான். அவனிடம் சண்டை போட்டு வெல்வது என்பது இயலாத காரியம் என்று பூவிழியின் தந்தை கூறினார்.
சண்டை |
அதற்கு மீதமுள்ள இருவரில் ஒருவன் எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும், என்னால் அவனை எளிதாக வெல்ல இயலும். அதற்கான பலத்தினை நான் கொண்டுள்ளேன் என்றான். எந்த பொருளையும் பறக்க வைக்கும் ஆற்றலை உடையவன் ஒரு கம்பளத்தை பறக்க செய்தான்.
வழிகாட்டுபவன் சொல்லிய வழியில், அந்த கம்பளத்தில் ஏறி பலசாலி அந்த சிகரத்தின் உச்சியை அடைந்தான். அந்த கொடூரமான அரக்கனிடம், பலசாலியானவன் கடுமையாக போரிட்டான்.
அந்த அரக்கன்! பலசாலியிடம் போரிட முடியாமல், பூவிழியை யாரும் அடைய கூடாது என எண்ணி அவளை கொன்றான். பூவிழி இறந்ததை தாங்கி கொள்ள இயலாமல் துடித்துப் போன பலசாலி, மிகுந்த கோபத்தில் அந்த அரக்கனை கொன்றான்.
பின்னர், அந்த கம்பளத்தில் பூவிழியின் உடலினை தூக்கிக்கொண்டு சந்திரபுரியை அடைந்தான். பூவிழி இறந்ததை எண்ணி அனைவரும் துடித்துப்போக அந்த நால்வரில், இறுதியானவன் என்னிடம் இறந்தவர்களை உயிர்பிக்கும் ஆற்றல் உள்ளது.
அதனால் பூவிழியை உயிர் பெற்று எழ செய்வேன் என கூறி, உயிர் பெற செய்தான். பூவிழியும் உயிர் பெற்று எழுந்தாள். பூவிழி எழுந்ததும் அனைவரும் மகிழிச்சியில் துள்ளிக் குதித்தனர்.
பெண் |
இதன் பிறகே, பெரும் குழப்பமானது ஏற்பட்டது. அது என்ன குழப்பம் என்றால் பூவிழியை யார் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது தான்.
ஞானதிருஷ்டி கொண்டவன், நான் பூவிழி இருக்கும் இடத்தை எனது ஞானதிருஷ்டியால் கண்டறிந்ததால் தான் அவளை காப்பாற்ற முடிந்தது. ஆகையால் எனக்கு தான் பூவிழியை திருமணம் செய்து தர வேண்டும் என்றான்.
பறக்கவைக்கும் சக்தி கொண்டவன், நான் இந்த கம்பளத்தை பறக்க செய்ததால் தான், உங்களால் அந்த மலை சிகரத்தினை அடைய முடிந்தது. அதனால் பூவிழியை எனக்கு தான் திருமணம் செய்து தர வேண்டும் என்றான்.
பலசாலி, நான் அசுரனிடன் போரிட்டு அவனை கொன்று பூவிழியை கொண்டு வந்ததால், எனக்கு தான் பூவிழியை திருமணம் செய்து தர வேண்டும் என்றான். உயிர் கொடுக்கும் சக்தி கொண்டவன், நான் பூவிழிக்கு உயிர் கொடுத்ததால் பூவிழியை எனக்கு தான் திருமணம் செய்து தர வேண்டும் என்றான்.
பூவிழியின் அண்ணன் மற்றும் தந்தை பூவிழியை யாருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று புரியாமல் குழம்பிப் போயினர்.
வேதாளம் தனது முதல் கேள்வியினை கேட்க தொடங்கியது.
மன்னா விக்ரமாதித்யா! அந்த நால்வரில் யாருக்கு பூவிழியை திருமணம் செய்து வைக்க வேண்டும்? பதில் கூறு, இல்லையேல், உனது தலையினை கடித்து தின்று விடுவேன் என கூறியது.
திருமணம் |
விக்ரமாதித்யன் பதில் கூற தொடங்கினான்.
ஞானதிருஷ்டி கொண்டவன், செய்த உதவியோ ஒரு பெண்ணினை காலம் முழுவதும் கண்கலங்காமல் வைத்து காப்பாற்றுவதற்கான உதவியல்ல. இந்த உதவியானது, மகான்களிடம் இருந்து கேட்டு தெரிந்துகொள்ளும் உதவியை போன்றது.
இதனால் அவனுக்கு பூவிழியினை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பறக்கவைக்கும் சக்தி கொண்டவன், செய்த உதவியானது மற்றவர்களிடம் இருந்து எளிதில் கிடைக்க கூடிய உதவியல்ல.
இருந்தாலும் இந்த உதவிக்கு பூவிழியினை திருமணம் செய்து வைக்க வேண்டுமா? என கேட்டால் தேவையில்லை என தான் கூறுவேன்.
இந்த உதவியானது, ஒரு பெண்ணினை தனது வாழ்நாள் முழுவதும் காப்பாற்ற கூடிய உதவியல்ல. பலசாலி செய்த உதவியானது, ஞானதிருஷ்டி கொண்டவன் மற்றும் பறக்கவைக்கும் சக்தி கொண்டவன் உதவியை காட்டிலும் மகத்தானது.
ஒரு பெண்ணை காப்பாற்ற தனது உயிரினை கருத்தில் கொள்ளாமல், அந்த கம்பளத்தை நம்பி, அந்த உயர்ந்த சிகரத்தை அடைந்து அந்த கொடிய அரக்கனிடம் இருந்து பூவிழியை காப்பாற்ற கடுமையாக போராடினான்.
இதுவே ஒரு பெண்ணை வாழ்நாள் முழுவதும் கண்கலங்காமல் வைத்து காப்பற்றுவதற்கான தகுதியாகும். மற்றவர்கள் உதவியை செய்தாலும், யாரும் தனது உயிரை பணையம் வைக்க விரும்பவில்லை.
பலசாலி |
ஆகையால் தான் யாரும் பலசாலியுடன் அரக்கனை சந்திக்க செல்லும் பொழுது உடன் செல்லவில்லை. ஆகையால், பலசாலிக்கு தான் பூவிழியை திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று கூறினான் விக்ரமாதித்யன்.
இதனை கேட்ட வேதாளம், அப்படியானால் இறந்த பூவிழியை திரும்ப உயிர்ப்பிக்க செய்தவனை, எதற்காக நிராகரிக்கிறாய் என கேட்டது.
அதற்கு விக்ரமாதித்யன் பூவிழிக்கு உயிரினை அளித்ததால், அவன் பூவிழியின் தந்தை ஸ்தானதிற்கு உயர்ந்து விட்டான்.
ஒரு தந்தை தனது மகளினை திருமணம் செய்வது என்பது தர்மத்திற்கு உரியது அல்ல. ஆகையால் அவனும் பூவிழியினை திருமணம் செய்ய தகுதி இல்லாதவன் என்றான்.
இதனை கேட்ட வேதாளமானது, அற்புதம் விக்ரமாதித்யா! எவரும் சரியாக பதில் சொல்லாத கேள்விக்கு அற்புதமான பதிலினை கூறிவிட்டாய் என்று கூறி, விக்ரமாதித்யன் கட்டிய கட்டுகளில் இருந்து அவிழ்த்துக் கொண்டு பறக்க ஆரம்பித்தது.
வேதாளத்தினை பின்தொடர்ந்து கொண்டே விக்ரமாதித்யனும் ஓடினான். வேதாளமானது மீண்டும் முருங்கைமரத்தில் ஏறிக்கொண்டது.
விக்ரமாதித்யன் மீண்டும் இடுகாட்டிற்கு சென்று முருங்கை மரத்தில் இருந்த வேதாளத்தை பிடித்து கட்டி தூக்கி தோளில் சுமந்து நடக்க ஆரம்பித்தான்.
0 Comments