Ticker

6/recent/ticker-posts

இந்திரலோகத்தில் விக்ரமாதித்தன் | பகுதி 3 | க்ரமாதித்தன் கதைகள்

அரண்மனை (Palace)
அரண்மனை

Vikramathithan Kathaikal | Pojarajan Kathaikal | Part 3

போஜராஜன், முதல் நாள் சிம்மாசனத்தில் அமர முடியாததை எண்ணி கவலைக் கொண்டான்.

அதனால் இரண்டாவது நாளான இன்று எப்படியும் சிம்மாசனத்தில் அமர்ந்து விடலாம் என எண்ணி சென்றான்.

ஊர் மக்கள் அனைவரும் ஆவலுடன் பார்க்க, மன்னன் சற்று பயத்துடன் முதல் படியில் காலெடுத்து வைத்தான்.

முதல் நாள் பேசிய பதுமை அமைதியாக இருந்தது. இதை கண்ட மகிழ்ச்சியில், இரண்டாவது படியில் காலெடுத்து வைத்தான்.

சிரிப்பு சப்தம் செவிகளுக்கு கேட்க, அதிர்ச்சியுடன் முதல் பதுமையை பார்த்தான் மன்னன். ஆனால் முதல் பதுமையானது அமைதியாக இருந்தது.

வேறு எங்கிருந்து சப்தம் கேட்கின்றது என்று மன்னன் பார்க்க, இரண்டாவது படியில் இருந்த பதுமையானது சிரித்துக் கொண்டு இருந்தது.

மன்னன் பதுமையை பார்த்து, ஏன் இவ்வாறு சிரிக்கின்றாய் என்று கேட்க, இரண்டாவது பதுமை பேசத் தொடங்கியது.

முதலில் தனது பெயரைக் கூறிவிட்டு, மன்னா! எம்மன்னன் அமர்ந்த இந்த சிம்மாசனத்தில் அமர முயற்சி செய்கிறாய். எம்மன்னன் அளவிற்கு நீ அறிவில் வல்லவனா! என்றது.

போஜராஜன், உம்மன்னன் அறிவில் வல்லவனா! எவ்வகையில், வல்லவன் சொல் கேட்கின்றேன் என்றான்.

பதுமை கூறத்தொடங்கியது. எம்மன்னனும், அவரது தம்பியுமான பட்டியும், சிறப்பாக ஆட்சி நடத்தி வந்தனர்.

அதனால், இவர்களின் புகழ் தரணியில் மட்டுமல்லாது, இந்திரலோகத்திலும் பரவியிருந்தது.

ஒரு நாள்! இந்திரலோகத்தில் ஒரு குழப்பம் ஏற்பட்டது. அந்த குழப்பம் நாட்டியக்கலையில் சிறந்தவர் இரம்பையா? அல்லது ஊர்வசியா? என்பது தான்.

நடனம்
நடனம்

எவ்வளவு முயற்சி செய்தும், இந்திரலோகத்தில் எவராலும் இந்த குழப்பத்தை தீர்த்து வைக்க இயலவில்லை.

இந்திரன் இதனை எவ்வாறு தீர்ப்பது என்று யோசிக்க, விக்கிரமாதித்யன் நினைவிற்கு வந்தான்.

காளி தேவி எதற்காக விக்கிரமாதித்யன் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிறாள்.

அதற்கு விக்கிரமாதித்யனுக்கு உண்மையில் தகுதி உள்ளதா? என சோதிப்பதற்கும் இது தான் சரியான வழி என முடிவு செய்தனர்.

எனவே, இந்த குழப்பதினை தீர்க்க விக்ரமாதித்யனுக்கு அழைப்பு விடுக்கப் பட்டது.

விக்கிரமாதித்யனின் சபைக்கு, ஒரு பறக்கும் அரியாசனம் வந்தது. அனைவரும் அதனைக் கண்டு வியக்க, அசரீரியானது பேசத் தொடங்கியது.

முதலில் மன்னனை புகழ்ந்து, பிறகு மன்னா! இந்திரலோகத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை தீர்க்க, தாம் இந்திரலோகம் வர வேண்டும் என்று கூறியது.

இதனைக்கேட்ட விக்கிரமாதித்யன் பட்டியிடம், நாட்டை ஓப்படைத்து விட்டு அந்த பறக்கும் அரியாசனத்தில் ஏறி இந்திரலோகம் புறப்பட்டான்.

தேவர்களில் சிலரோ விக்ரமாதித்தனால் இந்த குழப்பத்தை தீர்க்க இயலாது என்று சொல்லிக்கொண்டு இருக்க, விக்கிரமாதித்தனும் இந்திரலோகம் வந்து சேர்ந்தான்.

நகரம்
நகரம்

விக்கிரமாதித்தனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், மன்னனிடம் ஏற்ப்பட்டு இருக்கும் குழப்பத்தை தீர்த்து வைக்கக்கோரி இந்திரன் கேட்டுக்கொண்டான்.

விக்கிரமாதித்யனும் ஒப்புக்கொண்டான். இந்திரலோகத்தில் இரம்பை மற்றும் ஊர்வசியின் நடனம் தொடங்கியது.

இருவரும் சிறிதும் பிழையில்லாமல் நாட்டியத்தை ஆடி முடித்தனர்.

விக்கிரமாதித்யன், இந்திரனைப் பார்த்து நாளை இன்னொரு முறை இந்த நாட்டியத்தை நான் பார்க்க வேண்டும்.

அப்பொழுது இருவரில், யார் சிறந்தவர் என்று அறிவிக்கிறேன் என்று கூறினான்.

இந்திரனும் சரியெனக் கூற சபைக் கலைந்தது. விக்கிரமாதித்யனை பிரம்மாண்டமான அறையில் தங்கவைத்தனர்.

இரவில் விக்கிரமாதித்யனுக்கு உறக்கம் வராமல் பக்கத்தில் உள்ள நந்தவனத்தில் பூக்களை இரசித்துக்கொண்டிருந்தான்.

காலைப்பொழுதும் புலர்ந்தது. சபையும் கூடியது. விக்கிரமாதித்யன் கையில் பூக்களால் ஆன இரண்டு குடங்களை எடுத்து வந்து, இரம்பை மற்றும் ஊர்வசியின் கைகளில் கொடுத்து, இதை வைத்துக்கொண்டு நடனமாடுங்கள் என்று சொன்னான்.

பூக்கூடை
பூக்கூடை

இருவரும் நடனமாடத் தொடங்கினர். இருவரும் ஒன்றாகவே ஆடிக்கொண்டு இருக்க, சிறது நேரத்தில் ஊர்வசி நடனமாடுவதை விட்டு மயங்கி விழுந்தாள்.

சபையில் இருந்தவர் அனைவரும் அதிர்ச்சியில் இருக்க, விக்ரமாதித்யன் இரம்பை வென்றதாக அறிவித்தான்.

சபையில் இருந்தவர் அனைவரும் குழப்பத்தில் இருக்க, ஊர்வசி கண்விழித்து எழுந்தாள்.

அப்பொழுது விக்ரமாதித்யன் பேசத் தொடங்கினான். நடனம் என்பது வெறும் ஆட்டத்தை சார்ந்தது மட்டுமல்ல.

அது குணத்தின் வெளிப்பாடு. ஒரு பெண்ணானவள் அமைதி மற்றும் மென்மை தன்மையின் மறு உருவம்.

நடனத்தில் எப்பொழுதும் மென்மையான போக்கினை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும். ஊர்வசி மென்மையாக நடனமாட தவறினாள்.

இரம்பையோ மென்மையானப் போக்கினைக் கடைப்பிடித்தாள். இதன் காரணமாகவே வெல்லவும் செய்தாள் என்றான்.

இதனைக் கேட்ட இந்திரன், விக்ரமாதித்யா எவ்வாறு இவர்களின் மென்மை தன்மையை கண்டறிந்தாய் என்று கேட்டான்.

அதற்கு விக்ரமாதித்யன், இந்திரரே! நான் கொடுத்த பூக்குடங்களை பிரித்து பாருங்கள் என்றான்.

இந்திரனும் அதனைப் பிரிக்க, அதனுள்ளே இருந்து தேள்கள் வெளிவர தொடங்கின.

தேள்
தேள்

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த இந்திரன். இது என்ன விக்ரமாதித்தன் என்று கேட்டான்.

அதற்கு விக்ரமாதித்தன், இந்திரரே! தேவர்களுக்கு விஷத்தினால் எந்த பாதிப்பும் வராது.

அந்த விஷத்தினால் அவர்களுக்கு மயக்கம் தான் வரும் என்று எனக்கு தெரியும்.

அதனால் தான் இந்த பரீட்சையினை வைத்தேன். பூக்குடத்தில் இருந்த தேளானது அதற்கு அழுத்தம் கொடுக்கும் பொழுது மட்டுமே கொட்டும்.

ஊர்வசி அந்த குடத்தினை அழுத்த, அழுத்த அந்த தேள்கள் கொட்ட தொடங்கின.

இரம்பையோ குடத்தினை மென்மையாக பிடித்து நாட்டியத்தினை ஆடியதால் அவளுக்கு தேளினால் எந்த பாதிப்பும் வரவில்லை என்றான்.

இதை கேட்ட தேவர்கள் அனைவரும் விக்ரமாதித்தனை பாராட்ட ஆரம்பித்தனர்.

இந்திரன் விக்ரமாதித்தனுக்கு இரு பக்கங்களிலும் சிங்கத்தினை கொண்ட, 32 படிகளை உடைய, படிக்கு ஒரு பதுமையென, தங்கமும், இரத்தினமும் பதித்த அழகிய சிம்மாசனத்தை பரிசாக அளித்தான்.

அதுமட்டுமில்லாமல், இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி புரிவாய் என்று வரமும் கொடுத்தார்.

விக்ரமாதித்தன் தேவர்களிடம் நன்றி கூறி, தேவலோகத்தில் இருந்து அழகிய சிம்மாசனத்துடன் நாடு திரும்பினான்.

விக்ரமாதித்தனையும், சிம்மாசனத்தையும் பார்த்த மக்கள் விக்ரமாதித்தனை புகழ்ந்தனர் என்று கூறி முடித்தது.

மன்னர் போஜராஜனே! எம்மன்னனின் அறிவினை பார்த்தீர்களா? என்ன நினைக்கிறீர்கள்? எம்மன்னனை பற்றி என்றது இரண்டாவது பதுமை.

இதனை கேட்ட போஜராஜன்! உம்மன்னர் மிக சிறந்த அறிவாளி, அவருக்கு நிகர் இந்த அகிலத்தில் இல்லை என்றார்.

மாலைப்பொழுதும் வந்தது, இன்றும் சிம்மாசனத்தில் அமர இயலாமல் மன்னர் தனது அறைக்கு சென்றார்.


Post a Comment

0 Comments