காளியம்மன் |
Vikramathithan Kathaikal | Pojarajan Kathaikal | Part 2
மன்னனை பார்த்து, முதல் பதுமை கதை சொல்ல தொடங்கியது.
நீங்கள் இன்று அரசாட்சி செய்து வரும் இந்த உஜ்ஜயினி எவ்வாறு உருவானது என்று உங்களுக்கு தெரியுமா?
ஒரு மன்னன், இந்த உஜ்ஜயினியை இரண்டாயிரம் ஆண்டுகள் ஆண்டான் என்றால் நம்புவீர்களா? என கேட்டது.
அதற்கு போஜராஜன், அது எவ்வாறு ஒரு மன்னன் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆள முடியும் என்று கேட்டான்.
எம்மன்னன் விக்ரமாதித்தன், அவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் சீறும், சிறப்புமாக எவ்வித குறைகளும் இன்றி மக்களுக்கு ஓர் பொற்கால ஆட்சியை வழங்கினார்.
எம்மன்னன் பெயர் விக்ரமாதித்தன். அவர்தான், இந்த உஜ்ஜயினியை தலைநகரமாக கொண்டு அரசாட்சி செய்தவர்.
அழகிலும், அறிவிலும், வீரத்திலும் எவ்வித குறைகளும் இல்லாதவர் எம்மன்னர். அவருக்கு நிகர் அவரே தான் என்றது.
அதற்கு போஜராஜன், மன்னர் விக்ரமாதித்தன் பற்றி கதைகளில் கேள்வி பட்டுள்ளேன்.
அது உண்மை என்றும், என்னுடைய நாட்டை ஆண்டவர் என்றும் நீ சொல்லும் பொழுது வியப்பாக உள்ளது என்றார்.
இதைக்கேட்ட பதுமை மீண்டும் சிரித்தது. உமது நாடா? இந்த உஜ்ஜயினி ஒரு காலத்தில் எப்படி இருந்தது என்று உனக்கு தெரியுமா? என கேட்டது.
அதற்கு போஜராஜன் சொல் பதுமையே! தெரிந்துக்கொள்ள ஆர்வமாக உள்ளேன் என்றான்.
இந்த உஜ்ஜயினி மாகாளிப்பட்டினம், ஒரு காலத்தில் பகலிலும், இரவினைப் போல பார்த்தாலே பயம் கொள்ளக்கூடிய அளவிற்கு அடர்ந்த காடாக இருந்தது.
காடு |
இந்த காட்டை கண்டு மக்கள் யாரும் இவ்விடம் வருவதற்கு அஞ்சி நடுங்குவார்கள் என்றது.
அப்பொழுது போஜராஜன்! அப்படியெனில், இந்த உஜ்ஜயினி மாகாளிப்பட்டினம், எவ்வாறு எழில்மிகு நகரமாக மாறியது என்று கேள்வி கேட்டான்.
அதற்கு பதுமையானது சிரித்துக்கொண்டே, மன்னர் போஜராஜரே! உங்களது ஆர்வம் சரியானதே! என்னுடைய மன்னன் விக்ரமாதித்தன் பற்றி கேள்வி படுவோர் அனைவரும் ஆச்சரியத்திலும், ஆர்வத்திலும் சிக்கிக்கொள்வார்கள். அனைத்தையும் சொல்கிறேன் கேளுங்கள் என்றது.
தற்பொழுது நீ வணங்கும் காளி தேவி தான். அன்று எம்மன்னன் வணங்கிய தேவியும் கூட. எம்மன்னன் ஒரு சிறந்த காளி பக்தன்.
அந்த அம்மனோ! எம்மன்னன் மீது அளவுகடந்த அன்பு கொண்டவள். எம்மன்னனை செல்லப்பிள்ளையாகவே கருதினாள். அவன் விரும்பிய பொழுதெல்லாம் அவன் முன்னே வருவாள்.
ஆனால், இது எவ்வாறு நடந்தது என்பது ஒரு சுவாரசியமான சம்பவத்தால் தான். இந்த காளி தேவியை எப்படி எம்மன்னன் சந்தித்தான் என்று சொல்கிறேன் கேள்.
எம்மன்னனின் தம்பியின் பெயர் பட்டி, அறிவில் சிறந்தவன், அனைத்து கலைகளிலும் வல்லவன். அதுமட்டுமில்லாமல், தனது அண்ணன் மீது அளவற்ற அன்பினைக் கொண்டவன்.
அப்படிப்பட்ட பட்டி ஒரு நாள் இந்த உஜ்ஜயினி அடர்ந்த வனமாக இருந்தப் பொழுது தனியாக காட்டிற்கு வேட்டைக்கு சென்றான்.
நீண்ட நேரமாக வேட்டையாட அலைந்து திரிந்தும், எந்தவொரு விலங்கும் அவனது கண்ணில் தென்படவில்லை. அவனது உடலும் சோர்வடைந்து போனது.
கோவில் |
அந்த சமயம், அருகில் ஏதோ ஒரு கட்டிடம் தென்படுவதை கண்டான். அதன் அருகில் சென்று பார்த்தபொழுது, அது ஒரு காளி கோவில் என்று தெரிந்துக்கொண்டான்.
மிகவும் பழமையான கோவிலை கண்டவன். காளிதேவியை வணங்கிய பின்னர், கோவிலை சுற்றி பார்த்தான். அப்பொழுது அருகில் குளம் இருப்பதை கண்டு தாகத்திற்கு நீர் அருந்தினான்.
அந்த சமயம் குளக்கரையில், ஏதோ ஒரு கல்வெட்டு இருப்பதை கண்டான். அந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்ட வார்த்தைகளை கண்டு ஆச்சரியமடைந்தான்.
பின்னர் அரண்மனையை நோக்கி வேகமாக புறப்பட்டான்.விக்கிரமாதித்தன், பட்டி பரபரப்பாக வருவதைக் கண்டான்.
எதற்காக இவ்வளவு பரப்பரப்புடன் வருகிறாய் தம்பி எனக் கேட்க, பட்டியோ! அண்ணா என்னுடன் வாருங்கள் என்று சொன்னான்.
இதனை கேட்ட விக்கிரமாதித்தன், ஏன் என்று கூட கேட்காமல் தம்பியுடன் புறப்பட்டான்.
விக்ரமாதித்தனிடம் பட்டி தான் கண்ட கோவிலையும், கல்வெட்டையும் போகும் வழியில் கூறினான். விக்ரமாதித்தன், அதைக்கேட்டு ஆச்சரியமடைந்தான்.
முதலில் இருவரும் காளிகோவிலுக்கு சென்று, அம்மனை வணங்கினர். பின்னர் கல்வெட்டை பட்டி, விக்ரமாதித்தனிடம் காண்பித்தான்.
இருவரும் ஆச்சரியம் அடையும் அளவிற்கு அந்த கல்வெட்டில் என்ன இருந்தது என்று தெரியுமா? என பதுமை போஜராஜனிடம் கேட்டது.
கல்வெட்டு |
மன்னர் போஜராஜன், சொல் பதுமையே! அதை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக உள்ளேன் என்றார்.
பதுமையும் சொல்லத்தொடங்கியது. அந்த குளத்திற்கு அருகாமையில், ஒரு பழமைவாய்ந்த, மிகப்பெரிய ஆலமரம் உள்ளது.
அந்த மரத்தின் ஒரு கிளையில் ஏழு விழுதுகள் குளத்தின் மையப்பகுதியை நோக்கி இருக்கிறது. அந்த விழுதுகளை வாளால் ஒரு வீச்சில் வெட்டி, குளத்தின் மையத்தில் இருக்கும் சூலத்தின் மீது தலை படுமாறு விழவேண்டும்.
அதுவும், வெட்டுப்பட்ட அவ்விழுதுகள் தண்ணீரில் விழும் முன்பாக என்று பொறிக்கப்பட்டு இருந்தது.
மன்னன் போஜராஜன், ஓ! அப்படியா? சரி அவ்வாறு செய்வதால் என்ன பலன் என்று பதுமையை பார்த்து கேட்டான்.
அதற்கு பதுமை, பொறுங்கள் மன்னா சொல்கிறேன் என்று, கூறத்தொடங்கியது.
கல்வெட்டில் பொறிக்கப்பட்டு இருப்பது போல் சரியாக செய்தால், காளி தேவி காட்சியளித்து, வேண்டிய வரத்தை தருவாள் என்று பொறிக்கப்பட்டு இருந்தது.
சரி பதுமையே! அவ்வாறு ஏழு விழுதுகளையும், ஒரே வீச்சில் வெட்டி வீழ்த்துவது என்பது அரிதான செயல், அவ்வாறு செய்தாலும் சூலத்தின் மீது விழுந்தால் உயிர் பிரிந்துவிடும்.
பின்னர், எவ்வாறு காளிதேவியை காண்பது வரத்தை வாங்குவது என்று வினவினான்.
இதைக்கேட்ட பதுமை சிரித்தது. இது தான் மன்னா, மற்றவருக்கும், எம்மன்னனுக்கும் இருக்கும் வித்தியாசம் என்றது. பின்னர் நடந்ததை கூறத்தொடங்கியது.
விக்ரமாதித்தன், தம்பி! ஏழு விழுதுகளும் தனிதனியாக இருக்க, எவ்வாறு அதை ஒரு வீச்சில் வெட்டுவது என்றான். அதற்கு பட்டி, அண்ணா! முதல் விழுதை பிடித்து மற்ற விழுதுகளுடன் சுற்றுங்கள்.
ஏழு விழுதுகளும், ஒரே விழுதுகளாக மாறிப்போகும். பின்னர் வெட்டி எறியுங்கள் என்றான்.
விக்கிரமாதித்தனும், காளிதேவியின் மீது நம்பிக்கை கொண்டு, உயிருக்கு துணிந்து, பட்டி சொன்னதை போல செய்து விழுதுகளை வெட்டினான்.
ஆலமரம் |
விக்ரமாதித்தன் சற்றும் தாமதிக்காது, விழுதுகள் கீழே விழும் முன்பாக சூலத்தை நோக்கி தலை படுமாறு குதித்தான்.
விக்ரமாதித்தனின் தலையானது சூலத்தில் படும் ஒரு நொடிக்கு முன்பாக சூலம் மறைந்து, காளியம்மன் விக்ரமாதித்தனை கையில் தங்கினாள்.
விக்கிரமாதித்யனும், பட்டியும் பணிவுடன் அம்மனை வணங்க, காளியம்மன் விக்கிரமாதித்யனை பார்த்து, நீ என்மீது துளியும் சந்தேகம் கொள்ளாமல், நீ துணிச்சலுடன் செய்த செயலைக் கண்டு வியந்தேன்.
உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் தருகிறேன் என்றாள். விக்கிரமாதித்தனும், காளியம்மனை பார்த்து, தாயே! கிடைப்பதற்கு அரிய உன் சொரூபத்தை நேரில் பார்த்தது, நாங்கள் செய்த பெரும் பாக்கியம்.
உன் புகழை இவ்வகிலத்தில் பரப்ப, நான் மிக பெரிய ராஜ்ஜியத்தை ஆளவேண்டும். அதற்கு நீ குடியிருக்கும் இவ்விடமானது எனக்கு தலைநகரமாக மாறவேண்டும் என்றான்.
இதை கேட்டு ஆனந்தமடைந்த காளியம்மன், விக்ரமாதித்தன் கேட்டதை வரமாக அளித்தாள்.
அடுத்த நொடியே! மாபெரும் காடானது மறைந்து, பிரமாண்டமான அரண்மனையும், அதை தொடர்ந்து பல அடுக்கு மாளிகைகள், தெருக்கள் என பெரும் ராஜ்யமானது உருவானது.
நகரம் |
பின்னர் காளிதேவி பட்டியை பார்த்து, உன்னுடைய அறிவாற்றலை கண்டு வியந்தேன். அதுபோல சுயநலமில்லாத சகோதர பாசத்தைக் கண்டு மகிழ்ந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்? என்று கேட்டாள்.
அதற்கு பட்டி, தாயே! உன்னால் வாழ்த்தப்பெற்றது நான் செய்த புண்ணியம். நான் உன் முன்பு வந்து உன்னை நினைத்து எப்பொழுது அழைத்தாலும், தாம் என் முன்பு காட்சியளிக்க வேண்டும். இதை வரமாக அளிப்பீர்களா? என்றான்.
அதற்கு காளி தேவி, நீ அறிவில் வல்லவன் என்பதை நிருபித்து விட்டாய். அவ்வாறே வரம் தருகின்றோம் என்று கூறி மறைந்தாள்.
பின்னர் விக்கிரமாதித்யன், மேளதாளங்கள் முழங்க, சீரும் சிறப்புமாக மன்னன் ஆக முடிசூடினான். பட்டியும் அமைச்சராக பொறுப்பேற்றான்.
பின்னர், யாரும் எதிர்பார்க்காத வகையில், இருவரும் மக்களுக்கு நல்லாட்சி வழங்கினார்கள் என்று கூறி முதல் பதுமை கதையை முடித்தது.
போஜராஜனைப் பார்த்து, எம்மன்னனின் வீரத்தினை பார்த்தீரா? மன்னா, என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டது.
போஜராஜன், விக்கிரமாதித்யனின் வீரமும், அவரது துணிச்சலையும் கண்டு வியக்கிறேன் என்றார். அடுத்த நொடியே! புதுமையானது மீண்டும் சிலையாக மாறியது.
மாலைப்பொழுதும் வந்தது. நேரம் தவறியதால் நாளை சிம்மாசனத்தில் ஏறலாம் என்று நினைத்து மன்னனும், மக்களும் அங்கிருந்து புறப்பட்டானர்.
0 Comments