Ticker

6/recent/ticker-posts

போஜராஜனுக்கு கிடைத்த சிம்மாசனம் | பகுதி 1 | விக்ரமாதித்தன் கதைகள்

மாமன்னர்
மாமன்னர்

Vikramathithan Kathaikal | Pojarajan Kathaikal | Part 1

நமது பாரத திருநாட்டில், மாமன்னர் விக்ரமாதித்தனை பற்றியும், அவரது வீரதீர செயல்கள் பற்றியும் அறியாதவர்கள் இருக்க இயலாது.

விக்ரமாதித்தன் கதைகள் உண்மையோ! அல்லது பொய்யோ! என்று யோசிப்பதை விடுத்து கதையை அனுபவித்து மகிழுங்கள்.

உஜ்ஜயினி மாகாளிப்பட்டினத்தை தலைநகரமாக கொண்டு போஜராஜன் என்ற மன்னன் சீறும் சிறப்புமாக ஆண்டு வந்தான்.

அவன் ஒருசமயம், தனது படைகளுடன் போரில் வென்று நாடு திரும்பிக் கொண்டிருக்க அனைவருக்கும் கடுமையான பசி ஏற்பட்டது. 

உடன் வைத்திருந்த அனைத்து உணவுப்பொருட்களும் தீர்ந்துப்போக உணவு ஏதும் கிடைக்காமல், அனைவரும் சோர்வாக இருந்தனர்.

இதை பார்த்த போஜராஜன் கவலைப்பட்டான். அந்தசமயம், அங்கிருந்த மிகப்பெரிய சோளக்காட்டை மன்னன் பார்த்தான்.

அந்த சோளக்காட்டில் மத்தியில் மிக உயரமான மண்மேட்டில் ஒரு பரண் அமைத்து இளைஞன் ஒருவன் காவல் காத்துக்கொண்டு இருந்தான்.

மன்னர் போஜராஜன், அமைச்சரை பார்த்து சோளத்தை படைவீரர்கள் சாப்பிட அனுமதி கேக்க கூறினான். அதற்கு ஈடான சன்மானத்தை அரசவையில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூற சொன்னான்.

அமைச்சரும், அந்த இளைஞனை பார்த்து சோளத்தை படைவீரர்கள் சாப்பிட அனுமதி கேட்டார்.

சோளம் (Corn)
சோளம்

அந்த இளைஞன், பரண்மீது நின்றவாறே! மன்னனை புகழ்ந்து, சன்மானம் ஏதும் தரவேண்டாம் எனக்கூறி சோளத்தை சாப்பிட சொன்னான்.

மன்னர் போஜராஜன், அவனது கொடையை கண்டு வியந்து போனார். பின்னர் மன்னனும், தனது படைவீரர்களை சோளத்தை சாப்பிட கூறினார்.

மன்னர் சொன்ன அடுத்த நொடியே, படைவீரர்களும் சோளத்தை சாப்பிட தொடங்கினர். அவர்களின் பசிக்கு சோளக்காடானது கால் பங்கு தீர்ந்து போனது.

அந்த இளைஞன் பரண்மீதிலிருந்து இறங்கி மன்னனை பார்த்து, சோளத்தை சாப்பிட அனுமதி கொடுத்தேன் என்பதற்காக முற்றிலும் அழித்து விடுவீர்களா? இது தான் ஏழை மக்களுக்கு நீங்கள் செய்யும் நன்மையா? என பலவாறு வசைப்பாடினான்.

மன்னன், அந்த இளைஞனின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போனார். பின்னர், அவனுக்கு தேவையான பொற்காசுகளை அரண்மனை காவலாளிகள் மூலமாக அனுப்பி வைக்கின்றேன் என்று கூறி புறப்பட தயாரானார்.

அரண்மனை காவலாளி
அரண்மனை காவலாளி

அப்பொழுது அந்த இளைஞன், மீண்டும் பரண்மீது சென்று, என்ன மன்னா! அனைவருக்கும் பசியானது அடங்கிவிட்டதா? ஏன் அனைவரும் அதற்குள் புறப்பட்டு விட்டீர்கள் என பணிவுடன் கேட்டான். இதைக்கேட்டு அனைவரும் குழப்பம் அடைந்தனர்.

இந்த பேச்சு மாற்றத்திற்கு என்ன காரணமாக இருக்கும் என அமைச்சரிடம் மன்னன் கேட்டான்.

அமைச்சரும், மன்னா! எனக்கு அவன் நிற்கும் பரண் அமைந்துள்ள இடத்தின் மீது தான் சந்தேகம் உள்ளது. 

அதனால் தான் அங்கு இருக்கும் பொழுது கனிவாகவும், கீழே இருக்கும் பொழுது தரக்குறைவாகவும் பேசுகிறான் என்றார்.

இவ்வாறு விவாதித்துக்கொண்டே அரண்மனை வந்து சேர்ந்தனர். பின்னர் மன்னர், அந்த நிலத்தை அதிகப்படியான பொற்காசுகள் கொடுத்து வாங்க முடிவு செய்தார்.

அதன் படியே அந்த சோளக்காட்டையும், அந்த பரண் அமைந்த இடத்தையும், அதிகமான பொற்காசுகள் கொடுத்து வாங்கினார்.

மன்னர் சந்தேகப்பட்டு வாங்கிய அந்த பரண் அமைந்திருந்த மண்மேட்டை தோண்ட ஆணையிட்டார்.

வீரர்களும் மண்மேட்டை தோண்ட ஆரம்பித்தனர். ஊர் மக்கள் அனைவரும், அந்த நிலத்தில் என்ன இருக்கின்றது என பார்க்க ஆவலுடன் அங்கு கூடியிருந்தனர். அப்பொழுது, டங்! டங்! என ஏதோவொரு சப்தம் கேட்டது.

மக்கள்
மக்கள்


அப்பொழுது மண்ணுக்கு அடியில் 32 படிகளைக் கொண்ட தங்கத்தால் ஆன, இரத்தினங்கள் பதிக்கப்பட்ட, ஒவ்வொரு படிகளிலும் ஒரு பதுமை என 32 பதுமைகளைக் கொண்ட மிக பெரிய சிம்மாசனம் வெளிப்பட்டது.

கண்களைப் பறிக்கும், ஒப்பற்ற அழகைக் கொண்ட அந்த சிம்மாசனத்தை பார்த்த மன்னர், நான் அமர்ந்து ஆட்சி செய்ய அழகான சிம்மாசனம் கிடைத்திருக்கிறது எனக்கூறி, அரியாசனமாக மாற்ற முடிவு செய்தான்.

அதன்படி, அந்த சிம்மாசனம் அரசவையில் வைக்கப்பட்டு, அதில் அமர்ந்து ஆட்சி செய்ய நல்ல நாளும் குறிக்கப்பட்டது. இதன் காரணமாக நாடே திருவிழாக்கோலம் பூண்டது.

நாட்டு மக்கள் அனைவரும், அந்த சிம்மாசனத்தில் மன்னன் உட்கார்ந்து ஆட்சி செய்வதை பார்க்க அரசவையில் கூடியிருந்தனர்.

மேளத்தாளங்கள் முழங்க, யாகங்கள் நடத்தி செங்கோலை ஏந்தி மன்னன் சிம்மாசனத்தில் ஏற முதல் படியில் அடி எடுத்து வைக்க பயங்கரமான சிரிப்பு சப்தம் கேட்டது.

பூஜை
பூஜை

மன்னரும், மக்களும் பயந்து எங்கிருந்து சப்தம் கேட்கிறது என்று தெரியாமல் அதிர்ந்து போயினர். 

அப்பொழுது முதல் படியில் இருந்த பதுமையானது பெண்ணாக மாறி முன்னால் வந்தது.

இதை பார்த்து மன்னனும், மக்களும் வியப்பில் ஆழ்ந்தனர். மன்னன், அந்த பதுமையை பார்த்து ஏன் இவ்வாறு சிரிக்கின்றாய் என்று கேட்டார்.

அதற்கு, அந்த முதல் பதுமை தன்னுடைய பெயரைக்கூறி, மன்னனைப் பார்த்து, இது யார் அமர்ந்து ஆட்சி செய்த சிம்மாசனம் என்று உங்களுக்கு தெரியுமா?

இதில் ஏற உங்களுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது? இந்த சிம்மாசனத்தின் உரிமையாளரின் அருமை, பெருமைப்பற்றி உங்களுக்கு தெரியுமா? என பல கேள்விகள் கேட்டது.

இதை கேட்ட மன்னர், எனக்கு தெரியாது! ஆனால் உனக்கு தெரியும் அல்லவா! நீ சொல் நாங்கள் தெரிந்துக் கொள்கிறோம் என்றார்.

அந்த பதுமையும், சொல்கிறேன் நன்றாக கேளுங்கள் என்று கூறி கதையை கூறத்தொடங்கியது.


Post a Comment

0 Comments