Ticker

6/recent/ticker-posts

அயோக்கியனும், சித்திரகுப்தனும் | நீதிக்கதைகள்

புத்தகம்
புத்தகம்

சந்திரகிரி என்னும் ஒரு அழகான ஊரியில் காலிங்கன் என்ற ஒரு அயோக்கியன் இருந்தான்.

அவனுக்கு நல்லவர்களை கண்டாலே பிடிக்காது. எப்பொழுதும் மற்றவர்களுக்கு தீங்கு செய்வதே அவனது தினசரி வேலையாக இருந்தது.

மற்றவர்களை ஏமாற்றி ஏராளமான சொத்துக்களை சேர்த்தான். இதனால் பெரும் செல்வந்தனாக வாழ்ந்து வந்தான்.

அவனுக்கு கடவுள் நம்பிக்கை என்பது சிறிதும் இல்லை என்பதால், நாளுக்கு நாள் அவன் மற்றவர்களை ஏமாற்றுவதை வாடிக்கையாக கொண்டிருந்தான்.

இப்படியிருக்க ஒரு நாள் அவனுக்கு விசித்திரமான கனவு ஒன்று வந்தது.

அந்த கனவில் அவன் கொடுமைகள் பல அனுபவிப்பது போலவும், அவனால் அந்த கொடுமைகள் தாங்க இயலாமல் துடிதுடிப்பதை போலவும் காட்சிகள் வந்தன.

அலறியெழுந்த அவன், தான் செய்த பாவங்களால் தான் இவ்வாறு கனவு கண்டதாக எண்ணினான்.

மறுநாள் பொழுது புலர்ந்ததும் அந்த ஊருக்கு அருகில் உள்ள ஒரு முனிவரை சந்தித்து தன்னை பற்றியும், தான் கண்ட கனவை பற்றியும் எடுத்துரைத்தான்.

காலைப்பொழுது
காலைப்பொழுது

இதை கேட்ட முனிவர், நீ கண்ட கனவு எதிர்காலத்தில், நீ இறந்த பின்பு நடக்கப்போவதை உணர்த்தியுள்ளது என்றார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவன், முனிவரிடம் அதை தடுக்க வழிகேட்டான்.

அதற்கு அந்த முனிவர், உனது உயிர் பிரிய போகும் காலத்தை எமன் முடிவு செய்துவிட்டான்.

சித்திரகுப்தன் உனது பாவப்புண்ணியத்தை கணக்கு பார்க்க வேண்டியது தான் மீதமுள்ளது என்றார்.

காலிங்கன் முனிவரை பார்த்து, நான் தப்பிக்க வழி ஏதுமில்லையா? என்றான்.

அதற்கு அந்த முனிவர், சித்திரகுப்தன் உனது பாவத்தை குறிக்காமல் விட்டாலொழிய வேறு வழியில்லை என்றார்.

காலிங்கன், இதைக்கேட்டு மிகுந்த வருத்தத்துடன், என்ன செய்வது என அறியாமல் குழம்பிப்போய் இருக்க, அந்த சமயத்தில் அவனது மனைவியிடம் நடந்ததை கூறினான்.

இதை கேட்ட அவனது மனைவி, கவலை படாதீர்கள் எனக் கூறி, பின்னர் ஒரு ஆலோசனை ஒன்றையும் கூறினாள்.

அது என்னவென்றால், நீங்கள் சித்திரகுப்தனை எண்ணி தவமிருங்கள் அப்பொழுது அவரே உங்களுக்கு உதவலாம் என்றாள்.

இதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த காலிங்கன், அருகில் இருந்த காட்டிற்கு சென்று சித்திரகுப்தனை எண்ணி தவமிருக்க தொடங்கினான்.

சித்திரகுப்தன்
சித்திரகுப்தன்

அவனது தவத்திற்கு மகிழ்ந்த சித்திரகுப்தன் அவனுக்கு காட்சி கொடுத்தார்.

சித்திரகுப்தன் அவனை பார்த்து காலிங்கா, அதீத சக்திகள் கொண்ட இறைவனை எண்ணி தவம் புரியாமல், எவ்விதமான அருளும் புரியக்கூடிய வல்லமை இல்லாத என்னை நோக்கி தவமிருக்க என்ன காரணம் எனக்கேட்டார்.

அதற்கு காலிங்கன், நான் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கள் அறியாமல் இருக்க இயலாது. நான் மனம் திருந்தி விட்டேன்.

நான் செய்த பாவங்களுக்கு, பரிகாரம் செய்ய ஆசைப்படுகிறேன். அதற்கு நீங்கள் தான் வழி கூற இயலும் என்றான்.

பலபாவங்கள் செய்தாலும், இறுதியாக மனம் திருந்தி, என்னை எண்ணி தவமிருந்து என்னை மகிழ்வித்த உனக்கு கட்டாயம் உதவி செய்கிறேன்.

ஒருவர் உயிரிழந்த பிறகு வாழக்கூடிய வாழ்க்கையை என்னால் கண்டிப்பாக மாற்ற இயலும் என்று கூறி, காலிங்கனின் ஆயுள் காலத்தை பார்த்தார்.

அமைதியாக காலிங்கா! உனது ஆயுள் காலம் இன்னும் இருநாட்கள் தான் உள்ளது. உன்னால் அதற்குள் நீ செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்ய இயலாது.

ஆனால் உனக்கு ஒரு வழி சொல்கிறேன். அதுப்போல நடந்துக்கொண்டால், நீ நரகத்திற்கு செல்லாமல் தப்பிக்கலாம் என்றார்.

காலிங்கன், நீங்கள் சொல்வது எனக்கு வேத வாக்கு நீங்கள் எது சொன்னாலும், அதைக்கேட்டு நடந்துக்கொள்கிறேன் என்றான்.

இந்த இருநாட்களுக்குள் எப்படியாவது ஒரு குளத்தை வெட்டிவிட்டு, அதில் ஒரு பசு தண்ணீர் குடித்தால், அதனால் உனது புண்ணிய கணக்கில் இரண்டரை நாழிகை கிடைக்கும்.

குளம்
குளம்

நீ இறந்த பின்னர் எமதர்மராஜன் உன்னிடம் நீ செய்த பாவப்புண்ணியங்களுக்கு ஏற்ப முதலில் சொர்க்கம், செல்கிறாயா அல்லது நரகம் செல்கிறாயா எனக்கேட்பார்.

நீ அதற்கு சொர்க்கம் செல்கிறேன் எனக்கூறி சென்றுவிடு, அந்த இரண்டரை நாழிகைக்குள் வேறு பசுக்கள் தண்ணீர் அந்த குளத்தில் அருந்தினால் உனக்கு இன்னும் இரண்டரை நாழிகை கிடைக்கும்.

இதுப்போல உனக்கு சொர்க்கத்தில் நிரந்தரமாக வாழ வழி கிடைக்கலாம் என்றார்.

இதைக்கேட்ட காலிங்கன் சித்திரகுப்தனுக்கு நன்றி தெரிவித்து, தன்னிடம் இருந்த செல்வங்கள் அனைத்தையும் செலவழித்து இருநாட்களுக்குள் குளத்தை வெட்டினான்.

தண்ணீர் பெருக்கெடுத்து குளம் முழுவதும் நிறைந்தது.

ஏதேனும் ஒரு பசு ஆவது தண்ணீர் குடிக்க வருமா என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் ஒரு பாம்பு தீண்டி காலிங்கன் இறந்து போனான்.

பாம்பு
பாம்பு

காலிங்கன் இவ்வளவு கஷ்டப்பட்டும் அனைத்தும் வீணானதே என எண்ணிக்கொண்டிருக்க, எமதர்மன் அவனை அழைத்து இவனை நரகத்தில் போடுங்கள் என்று சொன்னான்.

சித்திரகுப்தன் இடைமறித்து, எமதர்மரே! அங்கே பாருங்கள் ஒரு பசுவானது அவன் வெட்டிய குளத்தில் தண்ணீர் அருந்திக்கொண்டு இருக்கிறது.

இதனால் இவனது கணக்கில் புண்ணியம் சேர்த்துள்ளது. அதனால் அவனிடம் அவனது விருப்பத்தை கேளுங்கள் என்றார்.

எமதர்மன்! வெறும் இரண்டரை நாழிகை தானே, கேட்கிறேன் என கூறி அவனிடம் இரண்டரைநாழிகை சொர்க்கம் செல்கிறாயா, அல்லது உனது பாவங்கள் முடிந்தபின்னர் சொர்க்கம் செல்கிறாயா? எனக்கேட்டார்.

காலிங்கன் மகிழ்ச்சியுடன் நான் சொர்க்கம் செல்கிறேன் எமதர்மரே என்றான்.

இரண்டரை நாழிகை பின்பு உனது வாழ்க்கையில் செய்த பாவங்களுக்கு சரியான தண்டனை தருகிறேன் சென்று வா எனக்கூறி சொர்க்கம் அனுப்பி வைத்தார்.

இரண்டரை நாழிகை முடிந்த பின்னர் நரகத்திற்கு அழைத்து வர அப்பொழுது ஒரு பசு அவன் வெட்டிய குளத்தில் தண்ணீர் அருந்த மறுபடியும் சொர்க்கம் சென்றான்.

பசு
பசு

மறுபடியும் இரண்டரை நாழிகை முடிந்த பின்னர் நரகத்திற்கு அழைத்து வர ஒரு கூட்டமாக பசுக்கள் தண்ணீர் அருந்த அவன் மறுபடியும் சொர்க்கம் சென்றான்.

இவ்வாறாக அவன் சொர்க்கத்திலேயே இருக்கும்படி நடந்துவிட்டது.

கதையின் நீதி!

நாம் ஆயிரம் தவறுகள் செய்து இருந்தாலும், உண்மையில் மனம் திருந்தி நல்லது செய்ய தொடங்கினால் போதும் அனைத்தும் நன்மையாக நடக்கும்.

இந்த கதை சித்திரகுப்தனின் பெருமையை விளக்கும் ஒரு உண்மை கதையாகும். சித்திரகுப்தனை முழுமனதுடன் வணக்க மறுமையிரும் நன்மை செய்வார்.

Post a Comment

0 Comments