வேதாளம் தனது ஐந்தாவது கதையை கூறத்தொடங்கியது.
வதனபுரி என்னும் எழில்மிகு நாட்டை ஆதித்யவர்மன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் எந்தவொரு செயலையும் ஆராய்ந்து முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டவன். இல்லையென வருவோருக்கு வாரி வழங்கும் வள்ளல் ஆவான்.
அவனது நாட்டில் எல்லா கலைகளிலும் சிறந்து விளங்கிய பாரம்பரிய குடும்பம் ஒன்று இருந்தது. அவர்களது முன்னோர்கள் அனைவரும் மிகுந்த புத்திசாலிகள், கல்வியில் சிறந்தவர்கள்.
ஆனால், அவர்களது குடும்பத்தில் மூன்று வாரிசுகள் இருந்தனர். மூவரும் தனது முன்னோர்கள் சேர்த்த சொத்தை அனுபவித்து வந்தனர்.
அவர்களுக்கு எந்த காலை மீதும் ஆர்வமில்லாததால் எதையும் படிக்காமல் சோம்பேறியாக வளர்த்தனர்.
அவர்களை எவ்வாறாவது திருத்த வேண்டும் என எண்ணிய அவர்களது தந்தை, மன்னரை சந்தித்து நமது குடும்ப பெயரை சொல்லுங்கள். மன்னர் வேலை வழங்குவார் எனக்கூறி அனுப்பி வைத்தார்.
இதை கேட்ட அவர்களும், அரசவையில் வேலை கிடைக்கும் என எண்ணி, அரசவைக்கு சென்று மன்னரிடம் குடும்ப பெயரை சொல்ல, மன்னனும் தக்க மரியாதை கொடுத்தான்.
அரண்மனை |
பின்னர் மூவரும் தங்களுக்கு வேலை கேட்க, மன்னன் என்ன செய்வது என யோசித்து, அவர்களை பார்த்து, தங்களுடைய குடும்பம் எண்ணற்ற கலைகளை கற்று தேர்ந்த குடும்பம்.
அதனால் நீங்கள் எதில் சிறந்தவர்கள் என்று என்னிடம் கூறினால், அதற்கு தகுந்த வேலையை உங்களுக்கு வழங்குவேன் என்றார்.
இதை கேட்ட மூவரும், எங்களுக்கு கல்வியில் அக்கறை இல்லாததால் நாங்கள் படிக்கவில்லை.
வீட்டிலேயே இருந்தததால் எந்த சண்டைக்கும் போனதும் இல்லை என மூவரும் உண்மையை கூறினார்கள்.
இதைக்கேட்ட மன்னன், அவர்களது உண்மையை சொல்லும் குணத்தை கண்டு வியந்தார். பின்னர், அப்படியெனில் உங்களுக்கு எது பிடிக்கும் என கேட்டார்.
மூவரில் முதல் வாலிபன், மன்னா! எனக்கு அறுசுவை உணவை உண்பது மிகவும் பிடிக்கும் என்றான்.
மன்னன் காவலாளியை அழைத்து, இவனை அறுசுவை உணவுகளை சமைக்கும் இடத்திற்கு அழைத்து சென்று, இவன் எது கேட்டாலும் சமைத்து தாருங்கள் என்றார்.
அறுசுவை உணவு |
மூவரில் இரண்டாவது வாலிபன், மன்னா எனக்கு தூங்குவது என்றால் மிகவும் பிடிக்கும் என்றான்.
மன்னன் காவலாளியை அழைத்து, இவன் உறங்குவதற்கு ஏற்ற அறையை ஒதுக்கி, எவ்வித இடையூறும் இல்லாமல் பார்த்துக்கொள் என்றார்.
மூவரில் இறுதி வாலிபன், மன்னா! எனக்கு பெண்களிடம் பேசுவது என்றால் மிகவும் பிடிக்கும் என்றான்.
மன்னன் காவலாளியை அழைத்து, தாசிப்பெண்ணை அழைத்து, அழகாக ஒரு பெண்ணை அலங்கரித்து, இவனுடன் பேச அனுப்பி வை என்றான். இரவும் வந்தது.
மறுநாள் காலைப்பொழுது புலர்ந்ததும், மன்னர்! மூவரையும் சந்திக்க அழைத்தார். அப்பொழுது முதல் வாலிபனை பார்த்து, உணவு எவ்வாறு இருந்தது எனக்கேட்டார்.
அதற்கு அந்த வாலிபன், உணவானது மிக சுவையாக இருந்தது மன்னா. ஆனால், ஒரேயொரு குறை தான். சாதத்தில் மட்டும் சுடுகாட்டு சாம்பல் மணம் வந்தது என கூறினான்.
சாதம் |
அவனை அனுப்பி வைத்து விட்டு, மன்னர் சமையல் காரனை அழைத்தார். உணவில் குறை உள்ளது என்றும், சாதத்தில் சுடுகாட்டு சாம்பல் மணம் வந்ததாக கூறுகிறான். உண்மைசொல் என்ன நடந்தது என கேட்டார்.
அதற்கு அந்த சமையல் காரன், மன்னா! சாதத்தில் எவ்விதமான குறையும் இல்லை. ஆனால் அந்த சாதம் சமைக்க பயன்படுத்திய விறகுகள் சுடுகாட்டு சாம்பல் போட்டு விளைந்தவை என்றான்.
மன்னன், முதல் வாலிபனின் திறமையை கண்டு வியந்துப்போனார்.
பின்னர், இரண்டாவது வாலிபனை பார்த்து, நன்றாக உறங்கினீரா? என கேட்க, அவன் இல்லை மன்னா, மஞ்சத்தில் எதோ குறையுள்ளது. அதனால் சரியாக உறங்கவில்லை என்றான்.
அவனை, அனுப்பி வைத்து விட்டு மன்னர், காவலாளியை அழைத்து, மஞ்சத்தில் குறையுள்ளது என கூறுகின்றான். என்ன குறை செய்தீர்? எனக்கேட்க, காவலாளி மன்னா, எனக்கு ஏதும் தெரியாது மன்னா என கூறினான்.
அதற்கு மன்னர், சரி சென்று மஞ்சத்தில் என்ன குறை எனக்கண்டு வா என கூறி அனுப்பி வைத்தார்.
காவலாளியும், பார்த்துவிட்டு வந்து மன்னா, எல்லாம் சரியாக தான் உள்ளது. மஞ்சத்தில் போடப்பட்ட மலர்களில் ஒரு மலரில் மட்டும் காம்பினை அகற்றாமல் விட்டு விட்டோம். மன்னியுங்கள் மன்னா! எனக்கூறினான்.
மலர் |
மன்னன், இரண்டாவது வாலிபனின் திறமையை கண்டு வியந்துப்போனார். பின்னர், மூன்றாவது வாலிபனை அழைத்து, இரவு அந்த பெண் நன்றாக பேசினாரா? எனக் கேட்டார்.
அதற்கு அவன், அவள் ஒரு நல்ல பெண்மணி மன்னா. ஆனால், அவளிடம் இருந்து பாலின் மணமானது வந்துக்கொண்டே இருந்தது தான் ஒரு குறை மன்னா! எனக்கூறினான்.
அவனை அனுப்பி வைத்த பின்னர், மன்னர் தாசியை அழைத்தார். இவ்வாறு, அந்த பெண்ணிடமிருந்து பாலின் மணமானது வந்துக்கொண்டே இருந்தது என கூறுகிறான். என்ன காரணம் என கேட்டான்.
அதற்கு அதிர்ச்சியடைந்த தாசி. மன்னா! அந்த பெண்ணின் முன்னோர்கள் ஆயர்குலத்தை சார்ந்தவர்கள். ஆனால், அவள் மீது இருந்து, எங்களுக்கு எவ்விதமான மணமும் வரவில்லை மன்னா எனக்கூறினாள்.
மூன்றாவது வாலிபனின் திறமையை கண்டு அதிர்ச்சியடைந்தார் மன்னர். பின்னர் வேதாளம், விக்ரமாதித்யனை பார்த்து, மன்னா! இக்கதையில் மூவரில் யாருக்கு மிகுந்த திறமை உள்ளது? எனக்கேட்டது.
விக்ரமாதித்யன் பதில் சொல்ல தொடங்கினான்.
இக்கதையில் மூவருக்கும் அதிசய திறமைகள் உள்ளது என்பது உண்மை தான். ஆனால், அந்த மூவரில் ஒரேவொரு மலர் காம்பு நீக்காததால், தனது உறக்கத்தை தொலைத்தவனுக்கு தான் திறமை அதிகம்.
உறக்கம் |
ஏனென்றால், ஒருவன் தூங்கும் பொழுது தன்னிலை மறப்பான். அதை அவன் வென்று விட்டான். மற்றவர்கள், தன்னிலையில் இருந்தே மற்றவற்றை அறிந்து இருந்தனர் என்றான்.
விக்ரமாதித்யன் சொன்ன சரியான பதிலை கேட்டு, வேதாளம் கட்டிலிருந்து விடுபட்டு மீண்டும் முருங்கை மரம் ஏறிக்கொண்டது.
விக்ரமாதித்யன், வேதாளத்தை மறுபடியும் பிடித்து கட்டி தோளில் சுமந்து செல்ல தொடங்கினான்.
0 Comments