விக்ரமாதித்தன் கதைகள் |
Vikramathithan Kathaikal | Pojarajan Kathaikal | Part 25
வேதாளம், தனது பத்தொன்பதாவது கதையை சொல்லத்தொடங்கியது. இராஜசேகரப்பட்டினம் என்னும் நாட்டை குலசேகரன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான்.
பொதுவாக, குலசேகரன் மிகுந்த இரக்கக்குணம் கொண்டவன். இதனால், அவனிடம் அனைத்து விதமான பறவைகளும், விலங்குகளும் மிகவும் அன்புடன் பழகி வந்தன.
அவனுக்கு விலங்குகளும், பறவைகளும் பேசும் மொழியும் தெரியும் என்பதால் அவனது நாட்டில் மக்கள் மட்டுமல்லாது பறவைகளும், விலங்குகளும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன.
இவனது நாட்டிற்கு மிக அருகில் மிகப்பெரிய காடு ஒன்று இருந்தது. அந்த காட்டிற்கு எப்பொழுதும் தனியாக சென்று வருவது இவனது வழக்கம்.
அப்பொழுது அங்கு இருக்கும் விலங்குகளுடன் பழகுவதை விரும்பி வந்தான். அவ்வாறு, ஒருமுறை தனியாக காட்டிற்கு, தன்னுடைய குதிரையில் சென்றான்.
அப்பொழுது, காட்டின் நடுவே ஒரு மரத்திற்கு அடியில் வயதான நல்லபாம்பு ஒன்று அழுதுக்கொண்டு இருந்தது. இதைப்பார்த்த மன்னன், அந்த பாம்பிடம் எதற்காக அழுகிறாய்? என்றுக் கேட்டான்.
பாம்பு |
அதற்கு அந்த பாம்பானது, மன்னா! இன்று என்னுடைய ஒரு மகனை, நான் இழக்கப்போகின்றேன்.
எனக்கென்று இருக்கும் ஒரு மகனையும் இழந்து நான் என்ன செய்யப்போகின்றேன் என தெரியவில்லை என்று அழுதது.
ஏன் அவ்வாறு சொல்கிறாய்? என்று சொல் என்று அந்த பாம்பிடம் மன்னன் கேட்டான்.
அதற்கு அந்த பாம்பு, மன்னா! இந்தக்காட்டில் ஒரு கருடன் வசித்து வருகிறது.
அந்த கருடன் தினமும் எங்களுடைய இனத்தில் யாரையாவது வேட்டையாடி உண்ணும். இதனால் எங்களுடைய இனமானது வெகுவாக அழிந்து வந்தது.
இதனால், நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு முடிவொன்றை எடுத்தோம்.
அந்த முடிவானது, நாங்கள் எங்களுடைய இனத்தில் ஒருவரை தேர்ந்தெடுத்து, அவர் அந்த கருடனுக்கு உணவாக வேண்டும்.
கருடன் |
அதற்கு, அந்த கருடனும் சம்மதம் தெரிவித்தது. அந்த வகையில் என்னுடைய ஒரே மகனை இன்று நான் பறிகொடுக்க போகின்றேன்.
இனி நான் எவ்வாறு வாழப்போகிறேன் என்று தெரியவில்லை என்று அழுதுக்கொண்டு இருக்கிறேன் என்றுக்கூறி, அந்த வயதானப்பாம்பு அழத்தொடங்கியது.
இதைப்பார்த்த மன்னன், அந்த பாம்பிற்கு உனது மகனுக்கு அந்த கருடனால் ஏதும் நிகழாது என வாக்கு ஒன்றை கொடுத்தான்.
இதைக்கேட்ட பாம்பு மகிழ்ச்சியில் மன்னனுக்கு நன்றி தெரிவித்தது.
அந்த நேரத்தில், அந்த கருடன் அங்கு வந்தது. முதலில் மன்னனை பார்த்து வணங்கியது.
பின்னர் பாம்பிடம், தன்னுடைய உணவு எங்கே? எனக் கேட்டது.
அதற்கு மன்னன், கருடனே! நான் அந்த பாம்பிற்கு தன்னுடைய மகனை காப்பாற்றுவதாக வாக்கு கொடுத்துள்ளேன்.
ஆகையால், அந்த பாம்பின் மகனை விடுத்து என்னை உணவாக ஏற்றுக்கொள் என்றான்.
பாம்பு |
இதைக்கேட்ட கருடன் அதிர்ச்சியானது. மன்னா! என்ன வார்த்தை கூறினீர்கள்? நீங்கள் எனக்கு உணவாவதா? இது என்ன கொடுமை? எனக்கேட்டது.
பின்னர் மன்னனை பார்த்து, ஒரு பாம்பிற்காக தங்களுடைய உயிரை கொடுக்க வந்த உங்களுடைய குணத்தை கண்டு வியந்துப்போனேன்.
இன்று! உங்களுடைய செயலால், நானும் கருணைமிக்கவனாக மாறினேன். இனிமேல், எந்த பாம்பையும் நான் உண்ண மாட்டேன்.
அதற்கு பதிலாக இறந்த பாம்பையே உணவாக ஏற்பேன். என்னை மன்னியுங்கள் மன்னா! எனக்கூறி அங்கிருந்து பறந்து சென்றது.
பின்னர், பாம்பும் மன்னனிடம் நன்றிக்கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
மன்னனும் நாடு திரும்பினான் என்று வேதாளம், கதையை கூறி முடித்தது.
பின்னர், விக்ரமாதித்யனை பார்த்து, மன்னா! இக்கதையில் உண்மையில் பாராட்டிற்குரியவர் யார்? கருணைக்குணம் கொண்டவர் யார்? எனக்கேட்டது.
விக்ரமாதித்யனும் பதில் கூற தொடங்கினன்.
சந்தேகமே வேண்டாம்! ஒரு கருடன், தன்னுடைய பிறவிக்குணத்தை விடுத்து மன்னனையும் வேண்டாம், பாம்பும் வேண்டாம் என்றது.
கருடன் |
ஆகையால், அந்த கருடனுக்கு தான் இரக்ககுணம் அதிகம். அதை தான் பாராட்ட வேண்டும் என கூறினான்.
விக்ரமாதித்யன் சொன்ன சரியான பதிலைக்கேட்டு, கட்டுகளில் இருந்து விடுபட்டு சென்று மயானத்தை அடைந்தது.
பின்னர், முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்க தொடங்கியது.
விக்ரமாதித்யன், தன்னுடைய விட முயற்சியால் வேதாளத்தை மீண்டும் பிடித்து கட்டி தூக்கிக்கொண்டு நடக்க தொடங்கினான்.
0 Comments