தமிழ்ப்புத்தாண்டு |
இந்த பதிவின் மூலமாக, சங்க இலக்கியங்கள் மூலமாக சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக, நமது முன்னோர்கள் கொண்டாடினார்கள் என்பதை தெரிந்துக்கொள்ள உதவும் சில குறிப்புகளை பார்க்கலாம்.
இதற்கு முந்திய பதிவில், நமது முன்னோர்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாட காரணமாக அமைந்த இயற்கை மற்றும் அறிவியல் சார்ந்த காரணங்களை பார்த்தோம்.
பொருளடக்கம்
- தமிழ் இலக்கியங்களும், தமிழ்ப்புத்தாண்டும்
- நக்கீரரும், தமிழ்ப்புத்தாண்டும்
- அகத்தியரும், தமிழ் மாதங்களும்
- பெருங்கௌசிகனாரும், தமிழ்மாத தலைநாளும்
- நத்தத்தனாரும், தமிழ்மாத தலைநாளும்
- சீவகசிந்தாமணியும், புத்தாண்டும்
- பாரதிதாசனும், தமிழ் மாதங்களும்
- நாமக்கல் கவிஞரும், திருநாள் மலரும்
- கமலை ஞானப்பிரகாசமும், சித்திரையும்
தமிழ் இலக்கியங்களும், தமிழ் புத்தாண்டும்
நமக்கு கிடைத்த பழம்பெரும் நூல்களை கொண்டே, நமது முன்னோர்கள் எவ்வாறு வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை தெரிந்துக்கொண்டு வருகின்றோம்.
எண்ணற்ற இலக்கியங்கள் கொண்ட தமிழ் மொழியில் ஒன்றில் கூடவா? தமிழர்கள் கொண்டாடிய புத்தாண்டு குறிப்பிடாமல் இருந்திருக்கும் என்ற ஐயம் எல்லோருக்கும் இருக்கும்.
![]() |
தமிழ்ப்புத்தாண்டு |
அவ்வாறு ஐயப்பட தேவையில்லை. எண்ணற்ற இலக்கியங்களில் தமிழர்கள் முதல் மாதமாக கொண்ட குறிப்புகள் ஏராளமாக உள்ளன. அவற்றில் சிலவற்றை இந்த பதிவின் மூலமாக பார்க்கலாம்.
நக்கீரரும், தமிழ் புத்தாண்டும்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்தான் பாண்டியன் என்பது நம் அனைவரும் அறிந்ததே!.
அந்த முத்தமிழ் சங்கத்தின் தலைமை புலவராக இருந்த நக்கீரர் அவர்களையும் அனைவரும் அறிவோம். அவர் நினைவிற்கு வர வேண்டுமாயின், சிறு குறிப்பு தருகின்றேன்.
எம்பெருமான் ஈசனை எதிர்த்து, "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!" என்ற புகழ்ப்பெற்ற வரிகளை கூறிய புலவர் பெருமான்.
அப்பெரும் புகழ்ப்பெற்ற நக்கீரர், பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான "நெடுநல்வாடை" என்ற நூலில் மூலமாக,
"திண் நிலை மருப்பின் ஆடு தலையாக,
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து"
என்ற பாடல் (160-165) வரிகளில் ஆடு தலைக்கொண்ட மேஷராசியில் சூரியன் நுழையும் நாளை முதல் நாளாக குறிப்பிடுகின்றார்.
![]() |
தமிழரின் காலக்கணிப்பு முறை |
அதாவது, நமது முன்னோர்கள் சூரியன் மேஷராசியில் சூரியன் உட்புகும் நாளான சித்திரை மாதத்தை புத்தாண்டாக கொண்டாடி வந்தனர் என்று தெரியவருகிறது.
அடுத்த சான்று, அதே "நெடுநல்வாடை" நூலில்,
"விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம்
இரு கோல் குறி நிலை வழுக்காது குடக்கு ஏர்பு"
எனத் தொடங்கும் பாடல் (73-75) வரிகளில் சூரியனின் கதிர்கள் சரியாக இரவு பகல் பிரிந்து, மன்னனுக்கு அரண்மனை கட்டினார்கள் என்று குறிப்பிடுகின்றது.
இந்த பாடலின் வரிகளின் மூலமாக, தமிழர்கள் வானியலில் சிறந்து விளங்கினார்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரியும்.
அப்படியிருக்க அவர்கள் குறிப்பிட்ட சித்திரை முதல் நாள் புத்தாண்டாக இல்லாமல் போக வாய்ப்பில்லை என்று உணர்ந்துக்கொள்ளலாம்.
அகத்தியரும், தமிழ் மாதங்களும்
தமிழகத்தில் அகத்தியர் பற்றிய அறியாதவர்கள் யாருமில்லை. மாபெரும் தமிழ் மீது பற்றுக்கொண்ட முனிவர். அவர் கற்ற கலைகள் ஏராளம்.
அப்பெரும் புகழ்ப்பெற்ற முனிவர் எழுதிய "சித்தர்களின் ஜோதிட வருஷாதி" என்ற நூலில் பக்கம் 155-இல் "இன்பமுறு மேடமதிலாறு" என்று தொடங்கும் பாடலில் தமிழ் மாதங்களை வரிசைப்படுத்தியுள்ளார்.
![]() |
சூரியன் |
அந்த பாடலில் சித்திரையை முதன்மையாக கொண்டு தொடக்கி பதினொன்று மாதங்களின் பெயர்களை வரிசைப்படுத்தி, பங்குனி மாதத்திற்கு பெயர் ஏதும் குறிப்பிடாமல் கதைமாதம் என்று தெளிவாக கூறியுள்ளார்.
தமிழ் மொழியில் மாபெரும் புலமைக்கொண்ட அகத்தியர் சித்திரையை முதன்மையாக கொண்டுள்ளார் என்பது இதன் மூலமாக அறிந்துக்கொள்ளலாம்.
பெருங்கௌசிகனாரும், தமிழ்மாத தலைநாளும்
புலவர் பெருங்கௌசிகனார் எழுதிய "மலைபடுகடாம்" என்ற நூலில் பாடல் 305-இல் "தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்முலமாக, வேங்கை மலர்கள் பூக்கும் சித்திரை மாதத்தை தலைநாளாக, அதாவது முதல் நாளாக குறிப்பிட்டுள்ளார் என்பது தெளிவாக புரியும்.
நத்தத்தனாரும், தமிழ்மாத தலைநாளும்
பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான, சிறுபாணாற்றுப்படையில் பாடல் (145-149) -இல் "தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்" என குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலமாக புலவர் நத்தத்தனார், இளவேனில் காலங்களில் மலரும் செருந்தி மலரை பற்றியும், அதை தலைநாள் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
இதன் மூலமாக, இளவேனில் காலமான சித்திரை மாதத்தை தமிழர்கள் முதல் மாதமாக கொண்டுள்ளனர் என்பது மிக தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம்.
![]() |
பூக்கள் |
சீவகசிந்தாமணியும், புத்தாண்டும்
சமணத்துறவியான திருத்தக்கதேவர் 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
இவர் இயற்றிய ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்றாக விளங்கும் சீவகசிந்தாமணியில் ,
"தீயுமிழ் திங்கள் நான்கு, வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்''
என குறிப்பிட்டுள்ளர். இதன் மூலமாக பருவங்களை நான்காகவும், அதில் இளவேனிற்கலாமான சித்திரையை முதல் பருவமாக கொண்டு வரிசைப்படுத்தியுள்ளார் என்பது தெளிவாக தெரியவருகிறது.
தமிழர்களுக்கும், சைவம் மற்றும் சமணம் சமயங்களுக்கு இடையே உள்ள தொடர்பானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
பாரதிதாசனும், தமிழ் மாதங்களும்
பாவேந்தர் பாரதிதாசனை, தமிழ்நாட்டில் அறியாதவர் யாருமில்லை. இவர் இயற்றிய இளைஞர் இலக்கியம் என்ற நூலில் பன்னிரண்டு திங்கள் என்று பாடல் ஒன்றை இயற்றியுள்ளார்.
சித்திரைவை காசிஆனி ஆடி ஆவணி
புரட்டாசி ஐப்பசிகார்த் திகைமார்கழி
ஒத்துவரும் தைமாசி பங்குனிஎல்லாம்-இவை
ஓராண்டின் பனிரண்டு திங்களின் பெயர்.
இந்த பாடல் வரிகளின் மூலமாக சித்திரை மாதத்தை முதல் மாதமாக தமிழர்களாகிய நாம் கொண்டுள்ளோம் என்பது தெளிவாக தெரியவரும்.
கொத்துக் கொத்தாய்ப் பாவிருக்கும் சித்திரையிலே
கூவும்குயில் மழை பெய்யும் கார்த்திகையிலே
மெத்தக்குளி ராயிருக்கும் மார்கழியிலே-மிக
வெப்பக்கதிர் காட்சிதரும் தைப்பிறப்பிலே.
அதே பாடலில் சித்திரை, மற்றும் தை மதங்களின் சிறப்பையும் கூறியுள்ளார்.
இதன் மூலமாக, தை மாதம் புத்தாண்டாக கொண்டாடவில்லை என்பதும் தெளிவாக தெரியும்.
அவர் இயற்றிய வாரம் பற்றிய பாடலில், "வாரமுதல் நாள் ஞாயிறு" எனத்தொடங்கி வாரத்தையும் வரிசைப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் கவிஞரும், திருநாள் மலரும்
நாமக்கல் கவிஞர் இயற்றிய திருநாள் மலர் என்ற நூலில் புத்தாண்டு வணக்கம் (154)-இல்,
சித்திரை மாதத்தில் புத்தாண்டு தமிழ்த்
தெய்வம் திகழும் திருநாட்டில்,
இத்தினம் அந்தத் திருநாள் ஆதலின்
ஈசனைப் போற்றி வரம்கேட்போம்.
என்று மிக தெளிவாக சித்திரை மாதத்தை தமிழர்களின் புத்தாண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.
கமலை ஞானப்பிரகாசமும், சித்திரையும்
திருவாரூரில் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கமலை ஞானப்பிரகாசம் அவர்கள் இயற்றிய நூலில், "சித்திரை முதலாக கொள்க சிறந்திடு மாதபுட்பம்" என குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலமாக, சித்திரை மாதத்தை முதல் மாதமாக கருதினார்கள் என்பது தெளிவாக தெரியவரும்.
![]() |
விநாயகர் |
முடிவுரை
மேற்ககூறிய நூல்களில் அனைத்திலும், சித்திரை மாதத்தை தமிழர்கள் முதல் மாதமாக கொண்டு வாழ்ந்து வந்தனர் என்பது தெளிவாக தெரியவரும்.
அடுத்த பதிவின் மூலமாக, சில கல்வெட்டு சான்றுகளையும், புத்தாண்டு மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளையும் தெரிந்துக்கொள்ளலாம்.
மூலங்களின் ஆதாரம்:
மேற்கூறிய நூல்கள் அனைத்தும், புத்தகம் மற்றும் இணையவழி நுலகங்கள் மூலமாக பெறப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments