தமிழ்ப்புத்தாண்டு |
இன்றைய காலத்தில் தமிழ்ப்புத்தாண்டை பற்றிய தேவையில்லாத பல குழப்பங்கள் நிலவி வருகிறது. தமிழ்ப்புத்தாண்டு சித்திரை முதல் நாளா? அல்லது தை முதல் நாளா? என்பது தான்.
இந்த பதிவின் மூலமாக தமிழ்ப்புத்தாண்டை பற்றிய குழப்பம் எதனால் ஏற்பட்டது. தமிழ்ப்புத்தாண்டு எது என்பதை பற்றிய சில தகவல்களை பார்க்கலாம்.
பொருளடக்கம்
- தமிழ்ப்புத்தாண்டு சர்ச்சைக்கான காரணங்கள்
- முன்னோர்களின் தமிழ்ப்புத்தாண்டு
- தமிழரின் பெரும்பொழுதுகள்
- இயற்கையும், தமிழ்ப்புத்தாண்டும்
- வானியலும், தமிழ்ப்புத்தாண்டும்
தமிழ்ப்புத்தாண்டு சர்ச்சைக்கான காரணம்
முகலாயர் மற்றும் ஐரோப்பியர் ஆண்ட காலத்தில் கூட, நமது கலாசாரங்களை மக்கள் விட்டுக்கொடுக்காமல் பின்பற்றினர்.
மக்களின் வாழ்க்கையில் அரசியல் பிணைந்த பொழுது, அரசியலால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
சர்ச்சைகள் இன்றி அரசியல் செய்ய இயலாத காரணத்தால் தேவையில்லாத பலவற்றில் அரசியல் நாடகம் ஆடினர்.
நமது தாய் தமிழை ஆழமாக நேசித்து வளர்த்தவர்களில் பரிதிமாற்கலைஞரும், மறைமலை அடிகளாரும் மிகப்பெரிய தூண்கள் எனலாம்.
இவர்கள் தமிழ்மொழியில் உள்ள பல நூல்களை சேகரித்து தொகுத்து வழங்கிய மகான்கள்.
இதில் மறைமலை அடிகளார் அவர்கள் திருவள்ளுவர் தினமாக வைகாசி மானுடம் நட்சத்திர நாளை குறிப்பிட்டு இருந்தார்.
நட்சத்திரம் |
அன்றைய காலத்தில் மக்கள் நட்சத்திரம் மற்றும் திதியைக்கொண்டே மாதத்தை கணக்கிட்டனர்.
1981 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் திருவள்ளுவர் தினமாக தை மாதத்தை ஏற்றுக்கொள்ளப்பட்டதே முதல் சர்ச்சைக்கு காரணம்.
இதனால் தை மாதத்தை அரசியல் தலைவர்கள் பலர் தமிழ் வருடப்பிறப்பாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
பின்னர் பல புலவர்கள் பரிந்துரைத்த காரணத்தால் திரு. மு. கருணாநிதி தலைமையிலான திமுக அரசு 2008 ஆம் ஆண்டு தை மாதம் 23 ஆம் நாள் தை முதல் தேதியை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்து அரசாணை வெளியிட்டது.
ஆம். 2008 ஆம் ஆண்டு வரை மக்கள் கொண்டாடிய தமிழ்ப்புத்தாண்டான, சித்திரை முதல் நாளை தை முதல் நாளாக மாற்றியது.
இதனால் மக்கள் இடையில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது. ஆனால் பெரும்பாலான மக்கள் சித்திரை முதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டாக சிறப்பித்தனர்.
இதனால் தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக மாற்ற பல்வேறு விளம்பரங்களை அரசு செய்தது. இருப்பினும், பல்வேறு மக்கள் இடையில் இதற்கு எதிர்ப்பு எழுந்த வண்ணம் இருந்தது.
ஜே. ஜெயலலிதா |
பின்னர் 2011 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற திருமதி. ஜே. ஜெயலலிதா அம்மையாரால் திமுக அரசு வெளியிட்ட அரசாணையை இரத்து செய்து தமிழ்ப்புத்தாண்டு சித்திரை 1 தான் என்று பல்வேறு கருத்துக்களை முன்னிட்டு திருத்தினார்.
இருப்பினும், திமுக அரசால் தை 1 புத்தாண்டு என வாழ்த்துக்கள் வெளிவந்த வண்ணம் இருக்க, மக்கள் இடையில் குழப்பமும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
திராவிட முற்போக்கு கழகத்தை தவறாக விமர்சிப்பதாக எண்ண வேண்டாம். திமுகவினால் பல்வேறு நல்ல திட்டங்களும் மக்களுக்கு கிடைத்துள்ளது.
எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், மக்களுக்கு நன்மை அளித்தால், அது சிறந்த கட்சியே ஆகும்.
பல புலவர்கள் பரிந்துரைத்த தை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? அல்லது பலநூறு ஆண்டுகளாக கொண்டாடி வந்த சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டா? என்ற குழப்பம் தோன்றும்.
அதற்கு சில தகவல்களை தெரிந்துக்கொள்வதன் மூலமாக எது தமிழ்ப்புத்தாண்டு என்று ஒரு முடிவுக்கு வரலாம்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது எல்லாம் உண்மை தான். செல்வம் வரும் என்கிற காரணத்தால் மட்டுமே, தமிழ்ப்புத்தாண்டு மாற்றப்பட வேண்டாம்.
நம் முன்னோர்கள் சித்திரைக்கும் முக்கியத்துவம் எதனால் கொடுத்தனர் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.
முன்னோர்களின் தமிழ் புத்தாண்டு
இன்று எண்ணற்ற பாடங்களை படித்து, நான் பெரியவன், நீ பெரியவன் என்று போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றோம்.
ஆனால், அன்று வாழ்ந்த நமது முன்னோர்கள் ஏட்டுக்கல்வியில் சிறந்து விளங்கவில்லை. ஆனால், அதை விட சிறந்த அனுபவக்கல்வியில் சிறந்து விளங்கினார்கள்.
அவர்கள், அனைவரும் தங்களுடைய அனுபவத்தின் பெயரால் எண்ணற்ற சாதனைகளை புரிந்து வைத்துள்ளனர் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று.
அப்படியிருக்க அவர்கள் தைமாதத்தில் புத்தாண்டை கொண்டாடி இருந்தால், அது எவ்வாறு சித்திரை முதல் நாளிற்கு சென்று இருக்க முடியும்.
நாட்காட்டி |
இன்றுப்போல், அன்று அனைவரின் வீட்டிலும் நாட்காட்டி பயன்படுத்தவில்லை. மாறாக, அனைவரும் இயற்கையுடன் இணைத்தே வாழ்ந்தனர்.
நாட்காட்டியை பயன்படுத்தவில்லை என்றாலும், சரியாக மாதங்கள், நாட்கள் என சரியாக வகைப்படுத்தி வைத்திருந்தனர்.
இன்று ஐரோப்பிய, அரேபிய நாடுகளில் கூட சரியாக சொல்ல இயலாத பல தகவல்களை சரியாக கூறிவந்துள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே!.
நமது முன்னோர்கள் வானியல் சாஸ்திரத்தில் சிறந்து விளங்கினார்கள். அதன் பயனாகவே சித்திரையை அவர்கள் தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடினார்கள்.
இந்த புத்தாண்டு தமிழர்களாகிய, நமது முன்னோர்கள் கொண்டாடியதால் தான் தமிழ்ப்புத்தாண்டே தவிர, இது மொழி மற்றும் மதத்தை சார்ந்து கொண்டாடவில்லை.
மேற்கத்திய நாடுகளை போல, ஒரு மதத்தை சார்ந்து தமிழர்கள் புத்தாண்டை கொண்டாடவில்லை.
தமிழர்கள் கொண்டாடிய புத்தாண்டானது மதம் மற்றும் மொழியை சாராமல், அது இயற்கை மற்றும் அறிவியலை சார்ந்து இருந்தது.
இது முழுமையாக அறிவியல் மற்றும் வானியல் சாஸ்திரத்தை அடிப்படையாக கொண்டே கொண்டாடப்பட்டது.
அதற்கான சான்றுகளையும், நமது முன்னோர்கள் குறித்து வைத்த புத்தாண்டு எது என்பதையும் இப்பொழுது பார்க்கலாம்.
வானியல் |
தமிழரின் பெரும்பொழுதுகள்
தமிழர்களாகிய, நமது முன்னோர்கள் சித்திரை முதல் நாளையே புத்தாண்டாக கொண்டாடி வந்தனர். அதற்கான பல்வேறு அறிவியல் மற்றும் வானியல் மாற்றத்தின் காரணங்களை இப்பொழுது பார்க்கலாம்.
தமிழர்கள், இயற்கை பருவங்களை ஆறாக பிரித்து வகைப்படுத்தினார்கள். அந்த ஆறு பருவத்தில் முதல் பருவமாக இளவேனில் காலத்தை குறிப்பிட்டு வந்துள்ளனர்.
அதாவது, ஒரு வருடத்தை ஆறு பெரும் பொழுதுகளாவும், ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாவும் பிரித்து வாழ்ந்து வந்தனர்.
தமிழரின் பெரும்பொழுதுகள் |
அந்த பெரும்பொழுதுகளில் இளவேனிற்காலத்தை முதன்மையாக கொண்டே வகைப்படுத்தி உள்ளனர்.
ஓர் ஆண்டின் ஆறு பருவங்கள். (கார்-மழை, கூதிர் - குளிர்)
- இளவேனில் (சித்திரை, வைகாசி),
- முதுவேனில் (ஆனி, ஆடி),
- கார்காலம் (ஆவணி, புரட்டாசி),
- குளிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை),
- முன்பனி (மார்கழி, தை),
- பின்பனி (மாசி, பங்குனி).
அதுப்போல, ஒரு நாள் தொடங்குவதை சூரியன் உதிர்ப்பதில் தொடக்கி, மறுநாள் உதிர்ப்பது வரை எனக்கொண்டு வாழ்ந்தனர்.
ஒரு நாளின் ஆறு சிறு பொழுதுகள்
- காலை (மணி 6-10),
- நண்பகல் (10-2),
- எற்பாடு (2-6),
- மாலை (6-10),
- யாமம் (10-2),
- வைகறை (2-6).
இதிலிருந்து, நாம் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். தமிழர்களாகிய நமது முன்னோர்கள், தை மாதப்பிறப்பை புத்தாண்டாக கொண்டிருந்தால் பின்பனி காலத்தை தான் குறிப்பிட்டு வரிசைப்படுத்தி இருக்க வேண்டும்.
இயற்கை |
இயற்கையும், தமிழரின் புத்தாண்டும்
பொதுவாக பனிக்காலங்களில் உயிர்கள் வாழ்வதற்கான வெப்பமானது சரியாக கிடைக்கப்பெறாமல் உறக்கத்திற்கு சென்று விடும்.
அதற்கு, அடுத்து பிறக்கும் இளவேனிற்க்காலத்தில், உறங்கிய உயிர்கள் மீண்டும் பிறக்கும். இது அனைத்து ஜீவன்களும் பொருந்தும்.
அதாவது பனிக்காலங்களில் இயற்கையானது, தங்களுடைய வளர்ச்சிக்கு தேவையான வெப்பத்தை கிடைக்கப்பெறாமல் வளர்ச்சியை குறைத்துக்கொள்ளும்.
இந்த சமயத்தில் மற்ற ஜீவன்களுக்கு உயிரூட்டக்கூடிய எந்தவொரு பொருளும் அதிகமாக கிடைக்கப்பெறாது.
இதற்கு, அடுத்து பிறக்கும், இளவேனிற்க்காலத்தில், பனியானது விலகி அனைத்து தாவரங்களும் தங்களுடைய வளச்சியை மேற்கொள்ளும்.
புதிய மலர்கள் பூக்கும், மகரந்த சேர்க்கை நடக்கும், காய்களும், கனிகளும் உண்டாகும். இதன் விளைவாக, அனைத்து ஜீவன்களுக்கும் உயிர் சத்துக்கள் கிடைக்கும்.
இதன்காரணமாகவே, இளவேனில் காலம் தொடங்கும் சித்திரையை தமிழர்களாகிய, நமது முன்னோர்கள் புத்தாண்டாக கொண்டாடினார்கள்.
வானியல் |
வானியலும், தமிழரின் புத்தாண்டும்
நமது முன்னோர்கள், மதம் மற்றும் மொழியை சார்ந்து வருடப்பிறப்பை கொண்டாடவில்லை என்பது முக்கியமாக மனதில் கொள்ளவேண்டும்.
அதாவது, சூரியன் ஆனது சரியாக கிழக்கு திசையில் சித்திரை மாதத்தில் உதிக்கும். அந்த மாதத்தில், இரவும், பகலும் சரிசமமாக இருக்கும். மற்ற ஏனைய மாதங்களில் அவ்வாறு இருப்பதில்லை.
தற்பொழுது சூரியன் கிழக்கு திசையில் உதிக்கும் என்று மேற்கத்திய நாடுகள் பின்பற்றிய வழிகளை நாம் பின்பற்றுகின்றோம்.
ஆனால், நம்மை விட சிறந்து விளங்கிய நமது முன்னோர்கள் அவ்வாறு கருதவில்லை.
சூரியன் சித்திரையில் சரியாக கிழக்கு திசையில் உதிக்க தொடக்கி, வடக்கு நோக்கி நகர்ந்து சரியாக ஆடி மாத முதல் நாளில் வடகிழக்கில் உதயமாகிறது.
பின்னர், கிழக்கு நோக்கி நகர்ந்து, சரியாக ஐப்பசி முதல் நாளில் கிழக்கில் உதயமாகிறது.
அதன் பின்னர், தெற்கு நோக்கி நகர்ந்து சரியாக தை மாத முதல் நாளில் தென்கிழக்கில் உதயமாகிறது.
பின்னர் மீண்டும், கிழக்கில் பயணித்து சித்திரை முதல் நாளில் சரியாக சூரியன் கிழக்கு திசையில் உதயமாகிறது.
இந்த நிகழ்வுகளை குறிக்கும் வண்ணம், தமிழர்களாகிய நமது முன்னோர்கள், அந்த மாதங்களில் பண்டிகைகளை உருவாக்கி கொண்டாடினார்கள்.
அறிவியல் சார்ந்த தமிழர் பண்டிகைகள் |
இப்பொழுது ஒரு சந்தேகம் வரலாம். சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில் சூரியன் கிழக்கில் உதிர்கிறது. பின்னர் எதனால் சித்திரை முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடினார்கள்?
இதற்கு முன்பே கூறியது தான். சித்திரையில் மட்டுமே, சமமான இரவு மற்றும் பகல் பொழுதானது கிடைக்கும். ஐப்பசி மாதமானது மழைக்காலம் என்பதால் சூரியனானது பெருவாரியாக தெரியாது.
இதில் உங்களுக்கு ஐயமிருந்தால், சூரியன் எப்பொழுதும் சரியாக கிழக்கில் உதிர்கிறதா? என்று சோதித்து பாருங்கள். காரணம் புரியும்.
மேற்கத்திய நாடுகளை விட தமிழர்கள் சிறந்தவர்கள் என்று எதனால் அனைவரும் கூறுகின்றனர் என்பதும் புரியும்.
முடிவுரை
இந்த பதிவில் தமிழர்கள் புத்தாண்டாக சித்திரை கொண்டாட காரணமாக இருந்த வானியல் மற்றும் இயற்கை சார்ந்த சில தகவல்களை பார்த்தோம்.
அடுத்த பகுதியில், நமது தமிழ் புலவர்கள், மன்னர்கள் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவற்றில் உள்ள பல தகவல்களை கொண்டு சித்திரை மாதம் புத்தாண்டு கொண்டாடினார்களா? அல்லது தை மாதத்தில் புத்தாண்டு கொண்டாடினார்களா? என்று பார்க்கலாம்.
0 Comments