அகத்திக்கீரை |
Benefits of Agathi Keerai | Health
நமது பாரம்பரியத்தில் பல வகையான கீரை வகைகளை பயன்படுத்தி வருகின்றனர் என அனைவரும் அறிவோம். கீரைகளில் பலவகையான சத்துக்கள் உள்ளது எனவும் அறிவோம்.
அந்த வகையில், இந்த பதிவின் மூலமாக அகத்திக்கீரையின் பயன்களை தெரிந்துக்கொள்வோம்.
பொருளடக்கம்
- அகத்திக்கீரை
- அகத்திக்கீரையும், பழமொழியும்
- அகத்திக்கீரையும், ஏகாதசி விரதமும்
- அகத்திக்கீரையில் உள்ள சத்துக்கள்
- அகத்திக்கீரையின் மருத்துவக்குணங்கள்
- அகத்திக்கீரையை யாரெல்லம் சாப்பிடக்கூடாது?
- அகத்திக்கீரையின் தொழில் பயன்கள்
அகத்திக்கீரை
நமது உடலில், அதாவது அகத்தில் உள்ள வெப்பத்தை(தீ) போக்கும் ஆற்றல் கொண்டதால், இந்த கீரைக்கு அகத்திக்கீரை என பெயர்வந்தது.
அகத்திக்கீரை உடலுக்கு நல்ல குளிர்ச்சியை அளிக்கும் தன்மை கொண்டது.
அகத்திக்கீரையில் இரண்டு வகை உண்டு. முதலாவது, வெள்ளைப்பூ அகத்தி, இரண்டாவது சிவப்புப்பூ அகத்தி.
இந்த கீரையானது சற்று கசப்பு தன்மையை கொண்டது. அகத்தியின் கீரை மட்டுமல்லாது பூக்களையும் சமைத்து உண்ணலாம்.
அகத்திக்கீரை மரம் |
அகத்திக்கீரையும், பழமொழியும்
அகத்திகீரையை நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும். இல்லையெனில், வயிற்றுப்போக்கு ஏற்படும். இதன் காரணமாக, "அகத்திக்கீரை வேகாமல் கெட்டது" என்பார்கள்.
"அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும், புறத்தி புறத்தியே". அகத்திக்கீரையின் இலையும், பூவும் சமையலுக்கு பயன்படும். ஆனால் காய்கள் எதற்கும் பயன்படாது.
தேவையில்லாத ஒன்று எவ்வளவு இருந்தாலும், தேவை இல்லாததே! என்பதை சுட்டிக்காட்டவே இந்த பழமொழி.
அகத்திக்கீரையும், ஏகாதசி விரதமும்
நமது பாரம்பரியத்தில் மாதம் இருமுறை அகத்திக்கீரையை உண்ணும்படி பட்டியலிட்டு பயன்படுத்தி வந்துள்ளனர்.
அதாவது ஏகாதசியில் விரதமிருந்து, துவாதசியில் அகத்திக்கீரையை சமைத்து சாப்பிடுவார்கள்.
இதை கடைப்பிடித்தால் மாதம் இருமுறை, அகத்திக்கீரையை சாப்பிடலாம்.
விரதம் இருக்கும் பொழுது, நமது உடலில் உள்ள பித்தமானது அதிகரிக்க செய்யும். விரதத்திற்கு மறுநாள் அகத்திக்கீரையை சாப்பிடும் பொழுது அதிகரித்த பித்தம் சமநிலையடையும். இதனால் உடலில் உள்ள நச்சுகள் நீங்கும்.
அகத்திக்கீரை |
அகத்திக்கீரையில் உள்ள சத்துக்கள்
நமது சித்தமருத்துவத்தில் அகத்திக்கீரையை பயன்படுத்தி பல மருந்துக்கள் தயாரிக்கின்றனர்.
நமது சித்தர்கள் 63 வகையான சத்துக்கள் அகத்திக்கீரையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
- புரதம்,
- கொழுப்பு,
- தாது உப்புக்கள்,
- மாவுச்சத்து,
- வைட்டமின் ஏ,
- இரும்புச்சத்து,
- சுண்ணாம்பு சத்து.
அகத்திக்கீரையின் மருத்துவக்குணங்கள்
அகத்திக்கீரை பல்வேறு மருத்துவக்குணங்களை கொண்டது. அதில் சிலவற்றை இந்த பதிவில் காணலாம்.
வயிறு
பெரும்பாலான நபர்களுக்கு, தகுந்த நேரத்தில் உணவு உட்கொள்ளாத காரணத்தால் வயிற்றில் புண் ஏற்பட்டு, வேதனை அளிக்கிறது.
அகத்திக்கீரை வயிற்றுப்புண்ணை ஆற்றும் தன்மைக்கொண்டது. சின்னவெங்காயம், மிளகு மற்றும் சீரகம் சேர்த்து அகத்திக்கீரை சூப் செய்து பருக, வயிற்றுப்புண் சரியாகும்.
சிலர் எவ்வளவு உணவு உண்டாலும், அவர்களது எடையானது அதிகரிக்காது. இதற்கு காரணம், வயிற்றில் உள்ள வயிற்றுப்பூச்சிகளே.
அவர்கள் அகத்திக்கீரையை சாப்பிடுவதல் வயிற்றில் உள்ள பூச்சிகள் நீங்கும்.
அகத்திக்கீரையை சாப்பிடுவதால் உணவானது விரைவில் ஜீரணமாகும். அதுமட்டுமின்றி, மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
கண்பார்வை
அகத்திக்கீரையை சாப்பிட்டு வரும் பொழுது கண்பார்வை துல்லியமாக தெரியும். அதுப்போல, மாலைக்கண் பிரச்சனை உள்ளவர்கள், அகத்திக்கீரையை சாப்பிட்டு வர விரைவில் சரியாகும்.
அகத்திக்கீரையை சாப்பிடுவதால் கண்கள் குளிர்ச்சியடையும். அகத்திக்கீரையின் பூக்களை பொரியல் செய்து சாப்பிட கண்ணெரிச்சல் சரியாகும்.
அதுபோல, உடல்சூட்டினால் கண்பொங்குவதை தடுக்கும். உடல் சூடு குறையும்.
அகத்திக்கீரை |
சருமம்
பெரும்பாலானோர் தேமல் பிரச்சனையை சரி செய்ய பல்வேறு மருந்துகளையும், சோப்புகளையும் பயன்படுத்தி வருவீர்கள்.
அவற்றை பயன்படுத்தாமல் விடும்பொழுது, தேமல் மீண்டும் வர செய்யும்.
அகத்திக்கீரையை, தேங்காய் எண்ணெய்யில் வதக்கி, அதை அரைத்து தேமல் வந்த இடத்தில் தடவ தேமல் விரைவில் சரியாகும்.
அகத்திக்கீரை சாறை சேற்றுப்புண்ணில் தடவ விரைவில் சரியாகும். அதுமட்டுமில்லாமல், இந்த சாற்றுடன், கடல் சங்கை இழைத்து மருவில் தடவ, மருவானது காய்ந்து விழுந்து விடும்.
இதயம்
இதயபடப்படப்பு உள்ளவர்கள் அகத்திக்கீரையின் பூக்களோடு, மிளகு, சீரகம், ஓமம், பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து சாப்பிட்டு வர சீராகும்.
தலைவலி, தலைசுற்றல்
அகத்திக்கீரையை இடித்து சாறு பிழிந்து மூக்கில் விட சைனஸ் தலைவலி தீரும். அதுமட்டுமின்றி, மூக்கில் உண்டாகும் சதைவளர்ச்சியையும் தடுக்கும்.
அதுபோல, நீர்க்கோவையால் ஏற்படும் தலைவலிக்கு இரண்டு தேக்கரண்டி அகத்திக்கீரை சாற்றுடன், தேன் கலந்து சாப்பிட சரியாகும்.
அகத்திக்கீரையின் பூவை பொரியல் செய்து சாப்பிட தலைசுற்றல் நிக்கும். அதுமட்டுமின்றி, சிறுநீர் மஞ்சளாக போவது போன்ற பிரச்னையும் தீரும்.
அகத்திக்கீரை |
பெண்கள்
பாலூட்டும் தாய்மார்கள், அகத்திக்கீரை சாப்பிடும் பொழுது பால் சுரக்கும் தன்மை அதிகரிக்கும். அதுபோல, பெண்களின் எலும்புகள் வலுவடையும்.
அகத்திக்கீரையை யாரெல்லம் சாப்பிடக்கூடாது?
அகத்திக்கீரையை சில உணவுகளுடன் எடுத்துக்கொள்ள கூடாது. அவ்வாறு எடுத்துக்கொள்ளும் பொழுது, அகத்திக்கீரையின் நற்பண்புகள் அனைத்தும் தீமையாக மாறிவிடும்.
அகத்திக்கீரையை மருந்து, மாத்திரைகள் சாப்பிடும் பொழுது எடுத்துக்கொள்ள கூடாது. அவ்வாறு எடுத்துக்கொண்டால், மருந்து மாத்திரைகளின் தன்மையானது அற்றுப்போய்விடும்.
மது அருந்திவிட்டு, அகத்திக்கீரையை சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால், மாரடைப்பு போன்ற இதயநோய்கள் வரும்.
அதுப்போல, கோழிக்கறிகளுடன் அகத்திக்கீரையை எடுத்துக்கொள்ள கூடாது.
வாயுத்தொல்லை உள்ளவர்கள், அகத்திக்கீரையை தவிர்ப்பது நல்லது.
அகத்திக்கீரையை தொடர்ந்து சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிடும் பொழுது, அகத்திக்கீரையின் நற்பண்புகள் மாறி, இரத்தம் அசுத்தமாகும். இதனால் சொறி, சிரங்கு போன்ற பிரச்சனைகள் வரும்.
அகத்திக்கீரையின் தொழில் பயன்கள்
- அகத்திக்கீரை ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
- அகத்திக்கீரையின் இலையிலிருந்து தைலமும், பட்டையில் இருந்து மருந்தும் தயாரிக்கப்படுகிறது.
- அகத்திக்கீரையின் பட்டை மற்றும் மிலார்களில் இருந்து பெறப்படும் நார்கள் மூலமாக மீன் வலை தயாரிக்க பயன்படுகிறது.
- வெள்ளை அகத்தி மரம் பொம்மைகள் தயாரிக்க பயன்படுகிறது.
0 Comments