நன்னாரி சர்பத் |
Nannari Payangal | Health | Tamil
கோடைக்கால வெப்பத்தை தவிர்க்க, சிறிய மற்றும் பெரிய என அனைத்து கடைகளிலும் கிடைக்கின்ற, உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் சர்பத் என்றால், அது நன்னாரி சர்பத் தான்.
இந்த பதிவின் மூலமாக, நன்னாரியின் பல்வேறு நன்மைகளையும், பயன்களையும் தெரிந்துக்கொள்வோம்.
பொருளடக்கம்
- நன்னாரி
- நான்னாரியின் வேறுப்பெயர்கள்
- நன்னாரியின் வகைகள்
- நன்னாரியின் மருத்துவப்பயன்கள்
நன்னாரி
நமது முன்னோர்கள் தொன்றுத்தொட்டு பயன்படுத்தி வருகின்ற மூலிகைகளில் ஒன்றான நன்னாரி, பல்வேறு சிறப்புகளை கொண்டது.
இது ஒரு கொடி வகையை சார்ந்த தாவரமாகும். இந்த தாவரத்தின் வேரானது, மேற்புறம் கருமையாகவும், உட்புறம் வெண்மையாகவும் இருக்கும்.
நன்னாரியின் வேரானது நல்ல நறுமணத்தை கொண்டது. இந்த வேரானது சிறிது கசப்பு தன்மையை கொண்டது.
நன்னாரியின் விதை நாற்றுக்கள் ஆயுர்வேதத்தில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இதனை அனாதமூல என்று அழைக்கின்றனர்.
நன்னாரியின் வேரில் இருந்து தயாரிக்கப்படும் சாறிலிருந்து, நன்னாரி சர்பத் தயாரிக்கப்படுகிறது. இதை கோடைக்காலங்களில் பெரும்பாலான மக்கள் விரும்பி குடிக்கின்றனர்.
இந்த நன்னாரி சர்ப்பத்தை குடிக்கும் பொழுது உடலுக்கு இதமான உணர்வை அளிக்கும்.
நன்னாரி |
நன்னாரியின் வேறுப்பெயர்கள்
நன்னாரியின் பயன்களைப்போல, பல்வேறு பெயர்களும் உண்டு. ஒவ்வொரு பெயர்களும், இதனுடைய தன்மையை அடிப்படையாக கொண்டு அமைந்தது.
இது இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களிடமும் தனக்கென இடத்தை பிடித்துள்ளது.
- கிருஸ்ணவல்லி,
- நறுநெட்டி,
- சுங்காரிமூலி,
- பாதாளமூலி,
- பாற்கொடி,
- வாசனைக்கெடி,
- சாரிபம்,
- கோபாகு,
- சுகந்தி,
- நிருண்டி.
நன்னாரியின் கொடியில் பால் உள்ளதால், இதனை பாற்கொடி என்றும், நறுமணம் மிக்கதால் சுகந்தி என்றும், இதனுடைய வேர்த்தொகுப்பால் பாதாளமூலி என்றும் அழைக்கின்றனர்.
நன்னாரி |
நன்னாரியின் வகைகள்
நன்னாரியின் வடிவம், மற்றும் கிடைக்கப்பெறும் இடங்களைக் கொண்டு இருவகைகளாக பிரித்துள்ளனர்.
- நாட்டு நன்னாரி,
- சீமை நன்னாரி.
நன்னாரியை பற்றிய ஒரு சொலுவடை உண்டு.
"மலையில் விளைந்தால் மாகாளி, நாட்டில் விளைந்தால் நன்னாரி"
இதில் குறிப்பிடப்படும் மாகாளி மற்றும் நன்னாரி இரண்டும் ஒரே பயனை தரும். தமிழ்நாட்டின் நன்னாரி சர்ப்பத்தை போன்று, கேரளாவில் மாகாளி சர்பத் உண்டு.
நன்னாரியின் மருத்துவப்பயன்கள்
நமது முன்னோர்கள் காலத்தில் இருந்து நன்னாரி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நன்னாரியில் பல்வேறு மருத்துவக்குணங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றை இப்பொழுது பார்க்கலாம்.
நன்னாரி |
உடல் சூடு
நமது உடலின் அதிகப்படியான சூட்டால், நமது உடலுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதை சரிசெய்யும் தன்மையானது நன்னாரிக்கு உண்டு.
பச்சை நன்னாரி வேரை 5 கிராம் எடுத்து, அதை அரைத்து 200 மி.லி பாலில் கலந்து குடிக்க மூலச்சூடு, மேக அனல், மேகவெட்டை, நீர்க்கடுப்பு, மற்றும் வறட்டு இருமல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
இதுமட்டுமல்லாமல், இதை நீண்ட நாட்கள் குடித்துவர, நரையை மாற்றும்.
நீரிழிவு, மேகநோய்
தற்பொழுதிய காலத்தில் பெரும்பாலான நபர்களுக்கு, மிகப்பெரிய பிரச்சனை என்றால் நீரிழிவு நோயாகும். இந்த நோய்க்கு நன்னாரி மிகவும் பயனளிக்கவல்லது.
பச்சை நன்னாரியின் வேர் 20 கிராம் எடுத்து, அதை நசுக்கி 200 மி.லி தண்ணீரியில் ஊறவைத்து, பத்தியம் இருந்து காலை 100 மி.லி மற்றும் மாலை 100 மி.லி குடிக்க, நீரிழிவு நோய், கிரந்தி, வெட்டைச்சூடு, சொறிச்சிரங்கு, மேகநோய், தாகம், மற்றும் அதிகப்பசி போன்றவை சரியாகும்.
சரும ஆரோக்கியம் |
வாதம், தோல்நோய்
நமது உடலில் வாதம் மற்றும் பித்தம் அதிகரிக்கும் பொழுது, உடலில் பல்வேறு நோய்கள் குடிக்கொள்கின்றன. அவற்றை சரிசெய்யும் தன்மை நன்னாரிக்கு உண்டு.
நன்னாரி வேர் 20 கிராமை, 500 மி.லி நீரில் போட்டு, 200 மி.லி ஆக மாறும் வரை, நன்றாக கொதிக்க வைத்து காலை 100 மி.லி மற்றும் மாலை 100 மி.லி என குடித்துவர நாள்பட்ட வாதம், பாசிச வாதம், தோல்நோய்கள், பித்தம் மற்றும் செரிமான பிரச்சனைகள் தீரும்.
ஆண்மை அதிகரிக்க
தினந்தோறும் குடிக்கின்ற குடிநீரில், ஆண்கள் நன்னாரி வேரை போட்டு குடித்துவர, அவர்களின் ஆண்மையானது அதிகரிக்கும். ஆண்மைக்குறைவு பிரச்சனைகள் இருந்தால் தீரும்.
வியர்வை |
வியர்வை நாற்றம்
சிலருடைய உடலில் இருந்து வெளியேறும் வியர்வையானது நாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் அவர்கள் அனைவரிடத்திலிருந்தும் சற்று விலகி இருக்க நேரிடும்.
அவர்கள், நன்னாரியின் இலைகள், பூ, காய், கொடி, வேர், சிறிதளவு உப்பு, மிளகு மற்றும் புளி ஆகியவற்றை சேர்த்து நெய்யில் வதக்கி 90 நாட்கள் சாப்பிட்டு வர, வியர்வை நாற்றம் நீங்கும்.
சிறுநீரகம்
கோடைக்காலங்களில் ஏற்படும் உடல் வெப்பத்தால் உடல் நலனில் தொய்வு ஏற்படும். இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.
நன்னாரியின் சர்ப்பத்தை குடிக்க, உடலானது குளிர்ச்சியடையும். அதுமட்டுமல்லாமல், சிறுநீரை பிரிக்கும், அதிகரிக்க செய்யும். இதனால் நீர்க்கடுப்பு ஏற்படாமல் காக்கும்.
நன்னாரியின் வேரை, வாழை இலையில் கட்டி, அதை எரித்து சாம்பலுடன் தேவையான அளவு சீரகம் மற்றும் சர்க்கரை கலந்து பருக சிறுநீரக நோய்கள் அனைத்தும் அகலும்.
தலைவலி |
இரத்தம், ஒற்றை தலைவலி
நமது உடலில் உள்ள இரத்தத்தில் சுத்தத்தன்மை குறையும் பொழுது, உடலில் பல்வேறு நோய்கள் உண்டாகும். நன்னாரி சர்ப்பத்தை குடித்துவர, இரத்தமானது சுத்தமடையும்.
அதுமட்டுமல்லாமல், ஒற்றை தலைவலியையும் சரி செய்யும் தன்மைக்கொண்டது.
குழந்தை நலன்
நன்னாரியின் வேரை, நீரில் ஊறவைத்து பாலுடன், சர்க்கரை கலந்து குழந்தைக்கு கொடுத்துவர, உடலானது தேறும். அதுமட்டுமல்லாமல், நாள்ப்பட்ட இருமல் மற்றும் கழிச்சல் போன்ற பிரச்சனைகளும் தீரும்.
வயிறு ஆரோக்கியம் |
வயிறு
நன்னாரியின் வேர்ப்பொடியை, கற்றாழை சோற்றுடன் கலந்து சாப்பிட, பக்கவிளைவுகளால் ஏற்படும் நோய்கள், விஷக்கடி, வயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் என அனைத்தும் தீரும்.
அதுமற்றுமின்றி, இந்த நன்னாரி வேர்ப்பொடியை தேனில் கலந்து சாப்பிட மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
குஷ்டம் தீர
நன்னாரியின் வேரை சூரணம் செய்து, அதை வெண்ணெயுடன் சாப்பிட்டு வர ஆரம்ப குஷ்டம் ஆனது சரியாகும்.
முடிவுரை
நன்னாரியின் பற்றிய பல பயனுள்ள தகவல்களையும், அதன் மருத்துவக் குணநலன்களையும் தெரிந்துக்கொண்டு இருப்பீர்கள். பாரம்பரியத்தை போற்றி உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வையுங்கள்.
0 Comments