தில்லை நடராஜர் |
சிதம்பரம் என்றதும் அனைவருக்கும் நினைவிற்கு வருவது, தில்லை நடராஜனும், அவனது நாட்டியமும் தான். இந்த உலகிற்கு ஒப்பற்ற நடனத்தை வழங்க எம்பெருமான் ஈசன் மனிதனாக அவதரித்த முதல் தலம் சிதம்பரம் ஆகும்.
இந்த பதிவின் மூலமாகவும், இனி வருகின்ற பதிவின் மூலமாகவும், தில்லை நடராஜரை பற்றியும், அவன் வீற்றிருக்கும் திருக்கோவில் பற்றியும் பல்வேறு அதிசய தகவல்களை தெரிந்துக்கொள்ளலாம்.
பொருளடக்கம்
- திருச்சிற்றம்பலம்
- சிதம்பரம்
- தலத்தின் சிறப்பு
- திருக்கோவிலின் அமைப்பு
திருசிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம் என்பது எம்பெருமான் ஈசன் குடிக்கொண்டிருக்கும், திருக்கோவிலின் பெயராகும். திருச்சிற்றம்பலம் என்கின்ற பெயரே காலப்போக்கில் மருவி, சிதம்பரம் ஆனது.
இந்த சிதம்பரத்தில் தான் எம்பெருமான் ஈசன் மனித உருவத்தில் காட்சி தருகிறான். மற்ற கோவில்களில் அனைத்திலும், லிங்க வடிவத்தில் மட்டுமே காட்சித்தருகின்றான்.
ஆதியும், அந்தமும் இல்லாத எம்பெருமான். உருவம் அற்றவன். அவன், அவனது பக்கதர்களின் ஆசையை தீர்த்து வைக்கும் பொருட்டு மனிதனாக காட்சியளித்தான் என்பது வரலாறு ஆகும்.
மற்ற கோவில்களில் உள்ள நடராஜர் வடிவங்கள் அனைத்தும், தில்லையில், எம்பெருமான் ஈசன், நடராஜராக அவதரித்து ஆடிய, நடனங்களின் சொரூபங்கள் ஆகும்.
தில்லை ரதம் (Photos Thanks to Elephant Studios) |
சிதம்பரம்
தில்லை மரங்கள் நிறைந்த பகுதி என்பதால், இவ்விடத்தை தில்லை என அழைத்து வந்தனர்.
பிற்காலத்தில், கோவிலின் பெயரான திருச்சிற்றம்பலமானது, அவ்வூரின் பெயராக மாறியது. அந்த பெயரானது, தற்சமயத்தில் மருவி, சிதம்பரம் ஆனது.
சிதம்பரம் கோவில் சைவ மக்களுக்கும் முதன்மையானது ஆகும். இக்கோவில், இவ்வாறு போற்றப்பட காரணம், இக்கோவிலில் உள்ள மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் என அனைத்திலும் சிறப்புற்று விளங்குவதே ஆகும்.
தலத்தின் சிறப்பு
இந்த தலமானது பிரணவத்தின் வடிவாக நின்று, நாதாந்தக் கூத்தாடும் நடராஜப்பெருமான், நமசிவாய என்கின்ற ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளல் என ஐந்தொழில்களையும் உணர்த்தும் விதமாக நடனம் புரிகின்றார்.
தில்லை தலமானது உலகத்திற்கு இதயம் ஆக விளங்கும் பொருட்டு, அதனது அமைப்பானது மனித உடலை ஒற்று அமைக்கப்பெற்றுள்ளது. அதில் ஸ்ரீ நடராஜப்பெருமான் இருதயத்தில் வாசம் செய்கிறார்.
அடியார்களின் ஆசையை தீர்க்கும் பொருட்டு, எம்பெருமான் ஈசன் மனித உருக்கொண்டு, அடியார்களுக்கு ஆனந்தத்தாண்டவத்தை அருளினார்.
தில்லை ரதம் (Photos Thanks to Elephant Studios) |
திருக்கோவிலின் அமைப்பு
தில்லை நடராஜரின் திருக்கோவில் ஆனது 41 ஏக்கர் நிலப்பரப்பில் நான்கு திசைகளிலும் கம்பீரமான கோபுரங்களுடன், அழகுடன் காட்சியளிக்கிறது. அதில் எம்பெருமான் ஈசன், சிவகாமி தாயாருடன் அருள்புரிகின்றான்.
இந்த இராஜ கோபுரங்கள் ஒவ்வொன்றும் ஏழு தளங்களை கொண்டது. ஒவ்வொரு கோபுரத்தின் உச்சியிலும் 13 பெரிய செப்புக்கலசங்கள் இருக்கின்றன.
இந்த இராஜகோபுரங்கள் 90 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டவை. இதில் 36 அடி உயரம் வரை, நேராக கருங்கல்லினால் கட்டப்பட்டவை. இந்த இராஜ கோபுரத்தின் வாயில்கள் 40 ஆதி உயரம் கொண்டவையாகும்.
நான்கு இராஜகோபுரங்களை சுற்றியும் 30 அடி உயரம் கொண்ட கருங்கல்லினால் ஆன மதிற்சுவர் அமைந்துள்ளது. இது வீரப்ப நாயகர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டவை என்பதால், வீரப்ப நாயகர் மதில் என அழைக்கப்படுகிறது.
கோவில் அமைந்துள்ள இடம்
தென்னாற்காடு என அழைக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், வடக்கே வெள்ளாறும், கிழக்கே வங்கக்கடலும், மேற்கே வீராணமும், தெற்கே காவேரி நதியான கொள்ளிட ஆறும் இருக்கும்படியாக, மத்தியில் அமைந்துள்ளது.
திருக்கோவிலும், மனித உடலும்
இந்த கோவிலானது மனித உடலை பிரதிபலிக்கும் வண்ணம் அமைந்துள்ளது, அதாவது மனித உடலில் உள்ள ஒன்பது வாயில்களை பிரதிபலிக்கும் வகையில் ஒன்பது வாயில்களை கொண்டுள்ளது.
எம்பெருமான் ஈசன் குடிக்கொண்டிருக்கும் பொன்னம்பலத்தின் மேற்க்கூரையில் 21,600 தங்கத்தகடுகள் பதிக்கப்பட்டு இருக்கின்றன. இவைகள் மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக சுவாசிக்கும் சுவாசத்தின் அளவாகும்.
அந்த தங்கத்தகடுகளை இணைக்க 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை மனித உடலில் உள்ள நாடிகளின் எண்ணிக்கை ஆகும்.
தில்லை ரத வடம் (Photos Thanks to Elephant Studios) |
நமது முன்னோர்கள், முனிவர்கள் என பலரும், இவ்வுலகம் ஆனது மனித உடலை போன்றது என்று கூறிவந்தனர்.
அந்த பெரியோர்களின் வாக்குப்படி, இமய மலை பிங்கள நாடி எனவும், இலங்கையை இட நாடி என்றும், இவ்விரு நாடிகளுக்கு மத்தியில் உள்ள சிதம்பரத்தை சூட்சும நாடி என கூறுகின்றனர்.
சித்சபையும், நியதிகளும்
எம்பெருமான் ஈசன் குடிக்கொண்டிருக்கும், சித்சபையானது ஐந்து வெள்ளி படிக்கட்டுக்களை கொண்டது. இது நமசிவாய என்னும் பஞ்சாட்சரத்தை குறிப்பதாகும்.
பஞ்சாட்சரத்தை படிக்கலாகக் கொண்டு, எம்பெருமான் ஈசனை அடையலாம் என்பது நியதி ஆகும்.
அதுப்போல, இவைகள் ஈசனின் ஐந்து அவதாரங்களை குறிப்பதாக கூறப்படுகிறது. அதுமற்றுமின்றி, இங்குள்ள ஐந்து பீடங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
எம்பெருமானும், தேவியும் |
முதல் பீடம்: பிரம்ம பீடம் - இதில் மரத்திலான 28 தூண்கள் உள்ளன. இந்த தூண்கள், 28 ஆகம நெறிகளையும், ஈசனை வழிபடும் 64 முறைகள்யும் உணர்த்துகின்றன.
இந்த தூண்களை இணைக்கும் 64 மரவேலைப்பாடுகளுடடைய பலகைகள் உள்ளன. இவையனைத்தும் 64 கலைகளை குறிக்கும் விதமாக அமைந்துள்ளது.
இரண்டாவது பீடம்: விஷ்ணுபீடம் - இதில் ஐந்து தூண்கள் உள்ளன. இவைகள் பஞ்சப்பூதங்கள் ஆன, நீர், நீலம், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயத்தை குறிக்கின்றன.
மூன்றாவது பீடம்: ருத்ரபீடம் - இதில் ஆறு தூண்கள் உள்ளன. இவைகள், இந்த உலகத்திற்கு தேவையான ஆறு சாஸ்திரங்களை குறிக்கின்றன.
நான்காவது பீடம்: மகேஸ்வர பீடம் - இது ஆறு ஸ்தம்பங்கள், மற்றும் ஐந்து தத்துவங்களை குறிக்கின்றன.
ஐந்தாவது பீடம்: சதாசிவ பீடம் - இந்த பீடமானது பொன்னால் ஆன நான்கு தூண்களை கொண்டது. இது நான்கு வேதங்களை குறிக்கிறது.
இதுமற்றுமின்றி, அர்த்த மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிப்பதாக உள்ளது.
தில்லை ஆனித்திருமஞ்சனம் (Photos Thanks to Elephant Studios) |
நடராஜரின் மேற்கூரை
இந்த மேற்கூரையானது மனித உடலில் உள்ள பல்வேறு அம்சங்களை உதாரணமாகவும், மனித உடலில் ஆற்றலை கொடுக்கும், இதயமாக ஈசன் உள்ளே ஆனந்த தாண்டவத்தை, சர்வேஸ்வரியான சிவகாமி அம்மையுடன் நில்லாமல் ஆடிக்கொண்டு இருக்கின்றான் என்பதையும் மேலே பார்த்தோம்.
இந்த மேற்கூரையின் மற்றொரு சிறப்பு, இந்த மேற்கூரையில் நவசக்தியின் அம்சங்களை குறிக்கும் விதமாக ஒன்பது கலசங்கள் உள்ளன.
தீர்த்தங்கள்
சைவர்களுக்கெல்லாம் முதன்மையாக விளங்கும் தில்லை தளமானது, பத்து விசேடத்தீர்த்தங்களை கொண்டது. அதில் சிவகங்கை தீர்த்தமானது, சிவ வடிவமாக அமைந்து விளங்குவதாக சிதம்பர மான்மியம் கூறுகிறது.
மன்றங்கள்
தில்லை தலமானது சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்தச்சபை மற்றும் இராசசபை என்னும் ஐந்து மன்றங்களை கொண்டது.
தில்லை தேரோட்டம் (Photos Thanks to Elephant Studios) |
பஞ்சபூதத்தலம்
தில்லை நடராஜர் கோவில் ஆனது பஞ்சப்பூதங்களில் ஆகாயத்தை குறிக்கும் தலமாகும். ஆகாயம் என்பதற்கு வெற்றிடம் என்று பொருள். இந்த தலத்தில் இறைவன் மூலப்பொருளாகவும், ஆதாரப்பொருளாகவும் இருந்து உயிர்களை காத்து வருகின்றான்.
இக்கோவிலில் சிவன் மற்றும் விஷ்ணு என இருவருக்கும் தனித்தனி சந்நிதிகளை கொண்டுள்ளதும், பிரம்மா, விஷ்ணு மற்றும் உருத்திரன் (ஈசன்) ஆகிய மும்மூர்த்திகளும் கோவில் கொண்டுள்ள திருத்தலம் என்பது கூடுதல் சிறப்பாகும்.
தலவிருட்சம்
இத்தலத்தின் புனித மரமாக தில்லை மரம் விளங்குகின்றது. நமது முன்னோர்களான, தமிழ் மக்கள் ஒவ்வொரு கோவில்களிலும், ஒவ்வொரு மரங்களை தலவிருட்சமாக அமைத்து, அதன் சிறப்பையும், அதன் முக்கியத்துவத்தையும் உலகிற்கு வழங்கி வாழ்ந்துள்ளனர் என்பது போற்றத்தக்க ஒன்று.
முடிவுரை
இந்த பதிவின் மூலமாக எம்பெருமான் ஈசன் குடிக்கொண்டிருக்கும், தில்லையின் கோவில் அமைப்பை பற்றி சிலவற்றை பார்த்தோம். அடுத்தஅடுத்த பதிவின் மூலமாக, தில்லை நடராஜர் கோவிலில் அமைந்துள்ள பிற சந்நிதிகளையும், சிறப்புகளையும் தெரிந்துக்கொள்ளலாம்.
0 Comments