Ticker

6/recent/ticker-posts

ஆடி மாதமும், சிறப்புகளும் | பகுதி 1 | தமிழர் வாழ்வியல்

அம்மன் கோவில்
அம்மன் கோவில்

ஆடி மாதம் என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது, அம்மன் கோவில்களும், அங்கு ஊற்றப்படும் கூழும் தான். உண்மையில், இதற்கு பின்னால் மிகப்பெரிய அறிவியல் ஒளிந்துள்ளது.

அந்த அறிவியல் பின்னணியும், ஆடி மாதம் ஏன் மற்ற மாதங்களை போல அல்லாமல் தனி சிறப்பு கொடுத்து தமிழ் மக்கள் கொண்டாடினர் என்பதையும், இந்த பதிவின் மூலமாக தெரிந்துக்கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • ஆடி மாதம்
  • ஆடி மாதமும், அம்மன் கோவில்களும்
  • ஆடி மாத சிறப்புகள்

ஆடி மாதம்

தமிழ் மாதங்களில் நான்காவதாக வருகின்ற ஆடி மாதத்தில், வாயு பகவானின் சக்தியானது அதிகரித்து காணப்படும். அதாவது, காற்றின் வேகமானது அதிகமாக இருக்கும்.

இதை உறுதிப்படுத்தவே, ஆடி காற்றில் அம்மியும் நகரும் என்பார்கள். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இந்த பழமொழியானது சரியானது அல்ல.

ஆடி காற்று
ஆடி காற்று

ஆடிக்காற்றில் அம்மையும் நகரும் என்பதே உண்மையான பழமொழியாகும். ஆடி மாதத்தில் காற்றின் வேகமானது அதிகமாக இருப்பதால், காற்றின் மூலமாக நோய்கள் எளிதில் பரவும்.

இந்த நாட்களில் வீட்டின் வாசல்களில், வேப்பிலை இலைகளை கட்டி வைக்க, வேப்பிலை கிருமி நாசினியாக செயல்பட்டு, காற்றை சுத்திகரித்து, நோய் பரவலை தடுக்கும்.

ஆடி மாதமும், அம்மன் கோவில்களும்

ஆடி மாதம், உண்மையில் ஒரு மங்களகரமான மாதம் ஆகும். இந்த மாதத்தில் சுத்தமாக இருந்து கோவில்களுக்கு செல்வதும், நம்மை வரும் நோய்களில் இருந்து காக்கவே ஆகும்.

இதன் காரணமாக தான், ஆடி மாதங்களில் வீட்டில் சுபகாரியங்களை நடத்தாமல், நமது முன்னோர்கள் தள்ளி வைத்தனர். சுபகாரியங்களுக்காக கூட்டமாக சேரும் பொழுது, ஏதேனும் நோய்த்தொற்று ஏற்படக்கூடும் என அவர்கள் எண்ணினார்கள்.

கோவிலுக்கு செல்வதென்றால் சுத்தமாக செல்வோம் என்பதால் கோவில்களில் பல்வேறு விசேஷங்களை ஏற்படுத்தினார். கோவில்களில் ஊற்றப்படும் கூழானது, மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, அவர்களை ஆரோக்கியமாக வைக்க செய்யும்.

சிவகாமி அம்மன் ஆலயலம், சிதம்பரம்
சிவகாமி அம்மன் ஆலயம், சிதம்பரம்

வீட்டில் மஞ்சள் கலந்த தண்ணீர் தெளிப்பதும், கிருமி நாசினியாக நம்மை காக்கும் பொருட்டே ஆகும். மனிதன் விளைவுகளை சொன்னால் கேக்காமல், தன்னுடைய போக்கிற்கு செல்வான்.

அவனை ஒழுங்குப்படுத்தவே, நமது முன்னோர்கள் தெய்வங்களை துணைக்கு எடுத்துக்கொண்டனர்.

அதுமட்டுமில்லாமல், தன்னைக்காக்கும் தெய்வங்களை போற்றும் விதமாக, தமிழ் மாதங்களில் ஒன்றை தேர்வு செய்து, இறை சிந்தனையை ஒங்க செய்தனர்.

அதுமட்டுமல்லாமல், ஆடி மாதம் என்பது தேவர்களுக்கு உகந்த மாதம் ஆகும். பிறகு  ஏன் நம் முன்னோர்கள், ஆடி மாதத்தில் சுபகாரியங்கள் நடத்தக்கூடாது என்று கூறினார்கள் என மறுபடியும் எண்ண தோன்றுகிறது அல்லவா!.

பரமேஸ்வரன் குடும்பம்
பரமேஸ்வரன் குடும்பம்

இம்மாதம் தெய்வங்களை நினைத்து வழிபடக்கூடிய ஒரு  மாதம் ஆகும். இந்த மாதத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களோ, அல்லது வேறு விசேஷங்களோ செய்தால், நம்முடைய கவனம் சிதைந்து போகும் என்பதாலே நம் முன்னோர்கள் அவ்வாறு செய்துள்ளனர்.

இம்மாதத்தில் வரக்கூடிய செவ்வாய் வெள்ளி  ஞாயிறு போன்ற எல்லா நாட்களும் அம்பிகையை வணங்கினால் மிகவும் நல்லது.

ஆடி மாத சிறப்புகள்

தமிழ் மாதமான ஆடி மாதத்தில், பல்வேறு திருவிழாக்கள் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. அவற்றின் ஒவ்வொற்றின் சிறப்புகளையும் பார்க்கலாம்.

ஆடி மாதம், ஒரு அற்புதமான பக்தி நிறைந்த மாதம் ஆகும். இந்த மாதமே, திருவிழாக்களை தொடங்கி வைக்கக்கூடிய முதல் மாதம் ஆகும். இது நம் மாநிலத்தில் மட்டுமல்ல, எல்லா மாநிலங்களிலும்  சிறப்பு வாய்ந்த ஒரு மாதமாக கடை பிடிக்கப்படுகிறது.

இந்த மாதமே, கேரள மாநிலத்தில் இராமாயண மாதமாக போற்றப்படுகிறது. இம்மாதத்தில் இராமாயண பாராயணம் செய்து ஆடி மாத கடைசி நாளன்று ராமருக்கு பால் பாயசம் செய்து, படையல் செய்வது வழக்கம்.

இராமாயண நாடகம்
இராமாயண நாடகம்

மேலும் கேரளாவில் உள்ள திருப்பராயர், கூடல்மாணிக்கம், பாயம்மாள், மற்றும் லக்ஷ்மணன் போன்ற நான்கு கோவில்களுக்கும் மக்கள் சென்று வருவார்கள். இதனை நான்கு அம்பல தரிசனச்  சிறப்பு என்று   கூறுவார்கள்.

ஆடி முதல் நாள்

தமிழகத்தில் ஆடி முதல் நாளில் சேலம், நாமக்கல், கரூர் மற்றும் ஈரோடு போன்ற பகுதிகளில் தேங்காய் சுடும் விழா (நோம்பி) மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆடி முதல் நாளன்று, பாரதத்தில் பாண்டவர்கள் போருக்கு கிளம்பினார்கள் என்றும், அவர்கள் அன்று இறைவனை வணங்கி, அரவான் பலி கொடுத்தனர் என்றும் கதைகள் உள்ளன.

அரவான் பலிக்கு பதிலாக, தேங்காய் சுடும் வழக்கம் இடையில் தோன்றியது.

தேங்காய் சுடுவது எப்படி?

ஒரு முழு தேங்காயை எடுத்து, அதை சுற்றியுள்ள நார்களை அகற்றி விட்டு, அந்த ஓட்டு பகுதியை நன்கு வழவழப்பாக தேய்த்து எடுத்துக்கொள்ளவும்.

பிறகு அந்த ஓட்டின் மேல், சிறிது மஞ்சள் தடவி, குங்குமமிட்டு, பின்னர் தேங்காயின் மூன்று கண்களில், ஒரு கண்ணை மட்டும் துளையிட்டு எடுத்துக்கொள்ளவும்.

அதன் வழியாக, பொட்டுக்கடலை, வெல்லம், ஏலக்காய் போன்ற பொருட்களை எல்லாம்  உள்ளே போட்டு, அந்த துளையின் மீது சற்று நீளமான அழிஞ்சி மரக்குச்சியை கொண்டு இறுக்கமாக மூடி, அந்த தேங்காயை நெருப்பில் இட்டு சுடுவார்கள்.

தேங்காய் சுடுதல்
தேங்காய் சுடுதல்

தேங்காய் நன்கு கருப்பான நிலையில் எடுத்து தேங்காயை இரண்டாக உடைத்து பார்த்தால், உள்ளே இட்ட பொருட்கள் அனைத்தும் நன்றாக வெந்து இருக்கும். சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

அரவான் தலைக்கு பதிலாக, தேங்காயை பயன்படுத்தினார்கள் என்பது வரலாறு ஆகும்.

தலை ஆடி

திருமணம் முடிந்து வரும் முதல் ஆடி மாதத்தை, திருமண தம்பதியர்கள் தலை ஆடியாக சிறப்பிப்பார்கள். 

புதியதாக திருமணம் செய்து கொடுத்த பெற்றோர்கள், தங்கள் மகளையும், மருமகனையும் வீட்டிற்கு அழைத்து வந்து, அவர்களது குல வழக்கப்படி செய்முறைகள் செய்வது வழக்கம்.

அதாவது, புது துணிமணிகள், நகைகள் என எடுத்து வைத்து பலகாரங்கள் செய்து, கொடுத்து மகிழ்விப்பார்கள்.

திருமணம்
திருமணம்

பிறகு மகளை மட்டும் தங்கள் வீட்டில் வைத்துக்கொண்டு, மருமகனை மட்டும் அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துவிடுவார்கள்.

ஆடி மாதம் தம்பதியினர் சேர்ந்து வாழ்ந்தால், சித்திரை மாதத்தில் முதல் குழந்தை பிறக்கும். இது மகளுடைய உடல்நிலையை பாதிக்கும்.

இதைக்கருதியே, நமது முன்னோர்கள் இவ்வாறு வழக்கத்தை ஏற்படுத்தி வைத்திருந்தனர்.

ஆடி  அமாவாசை

நாம் இவ்வுலகிற்கு வருவதற்கு முக்கிய காரணம், நமது முன்னோர்கள் ஆவர். அவர்கள் வழி வந்த நாம் அவர்களை மறக்காமல், அவர்களுக்காக செய்யக்கூடிய ஒரு வழிபாடு தான் அமாவாசை விரதம் ஆகும்.

இந்நாளில், நம் முன்னோர்கள் நினைத்து வழிபாடு மேற்கொள்ளுதல் அல்லது தர்ப்பனம் செய்வார்கள்.

நம் முன்னோர்கள் பூமியில் வாழும் பொழுது பாவம், புண்ணியம் ஏதேனும் செய்திருப்பார்கள். இவர்கள்  மேலோகத்தில் .எந்த நிலையில் இருப்பார்கள் என்று தெரியாது.

அமாவாசை
அமாவாசை

எனவேதான் அவர்களுக்கு ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து வழிபட்டால் மேலோகத்தில்  அவர்களுக்கு நல்லது நடக்கும். இதுவே, அவர்களுக்கு நம் செய்யும் நன்றியும், மரியாதையும் ஆகும்.

அனைத்து மாதமும் அமாவாசை வந்தாலும், ஆடி அமாவாசை சிறப்பானது ஆகும். மறந்தும், தெரிந்தும், தெரியாமலும் அமாவாசை அன்று விரதம் மேற்கொள்ளாமல் போனால், இந்த ஆடி அமாவாசை அன்று வழிப்பட்டு, அந்த பலனை பெறலாம்.

தாய், தந்தை இல்லாதவர்கள், குறிப்பாக ஆண் பிள்ளைகள் தான் அமாவாசை விரதத்தை மேற்கொள்ளவேண்டும். சுமங்கலி பெண்கள் மேற்கொள்ளக்கூடாது.

விரதம் மேற்கொள்ளும் முறை

அனைத்து மாதங்களிலும் வரும் அமாவாசை தினத்தன்று ஒரு ஆண் மகன் விரதத்தை மேற்கொள்ளவேண்டும்.

விரதத்தை தவறவிட்டவர்கள் ஆடி அமாவாசை அன்று கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும்.

காலை உணவு சாப்பிடாமல் உபவாசம் இருந்து, மதியம் வாழை  இலை போட்டு சாப்பிடவேண்டும். அன்றைய உணவானது, நம் முன்னோர்களுக்கு பிடித்தமான உணவாக இருக்கவேண்டும்.

நாம் சாப்பிடும் முன்பு காகத்திற்கு சாதம் வைத்துவிட்டு, பிறகு சாப்பிடவேண்டும். நமது முன்னோர்கள் காகத்தின் வடிவில் வந்து உணவு உண்டு செல்வார்கள் என்பது நம்பிக்கை.

இவ்வாறு ஆடி அமாவாசையை யார் முறையாக செய்கிறார்களோ, அவர்களது பிள்ளைகளுக்கும், அந்த பலன் கிடைக்கும். அமாவாசை தினத்தன்று பெண்கள் காலையில் சாப்பிடலாம்.

பௌர்ணமி
பௌர்ணமி

ஆடி பௌர்ணமி

ஆடி பௌர்ணமி எம்பெருமான் ஈசனுக்கும், அம்பாள் பார்வதிக்கும் சிறப்பான நாளாகும். இந்த தினத்தில் விரதம் மேற்கொண்டு, மாலையில் கோவிலில், அல்லது வீட்டில் அம்பாளுக்கு நெய்வைத்தியம் செய்து விரதத்தை முடிப்பார்கள்.

இவ்வாறு செய்வதால் அம்பாளின் அருளாலானது முழுமையாக கிடைக்கும்.

ஆடி பௌர்ணமி அன்று ஸ்ரீ ஹயக்ரீவர் அவதரித்த தினமாகும். அன்று ஸ்ரீ ஹயக்ரீவரை வழிப்பட்டால் கல்வியும், அறிவும் பெருகும். சங்கடங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

ஆடி கிருத்திகை

இது அம்மனுக்கு பிடித்த குமாரனான, தமிழ்க்கடவுள் முருகனை நினைத்து வழிப்படவும், கொண்டாடவும் செய்யும் தினமாகும்.

அந்த தினத்தில் செவ்வாய் தோஷத்தினால் கல்யாணத்தடை உள்ளவர்கள் விரதத்தை மேற்கொள்ளலாம்.

முருகப்பெருமான்
முருகப்பெருமான்

தோஷம் என்பது ஒன்றுமில்லை. ஒவ்வொரு கிரகமும், உடலில் உள்ள பாகங்களை குறிக்கும். உதாரணமாக, சூரியன்-வெப்பம், சந்திரன்-நீர், செவ்வாய்-இரத்தம் ஆகும்.

கிரகணத்தின் ஆற்றல் அதிகமாக இருக்கும் பொழுது, ஒரு குழந்தை பிறக்கும் பொழுது, அந்த பாகத்தின் ஆற்றல் அதிகமாக இருக்கும். இதனால் அவர்களின் துணையுடன் சேரும் பொழுது ஏதேனும் விளைவுகள் ஏற்படும்.

ஆடி பூரம்

ஆடி மாதத்தில் வருகின்ற பூர நட்சத்திரம் வருகின்ற தினத்தை ஆடி பூரம் என்கின்றோம். அன்றைய தினத்தில் வளையல் காப்பு செய்து அம்பாளை வழிபடுவது விசேஷம் ஆகும்.

லட்சுமிதேவி
லட்சுமிதேவி

வரலக்ஷ்மி விரதம்

ஆடி அல்லது ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமை அன்று வரலக்ஷ்மி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

இது பதினாறு வகையான செல்வத்திற்கும் அதிபதியாக விளங்கும் இலக்குமியை வழிப்படும் தினமாகும். இந்த விரதத்தை வீட்டில் உள்ள சுமங்கலி பெண்கள் மேற்கொள்ள வேண்டும். இதனால் இலக்குமி வீட்டில் வாசம் செய்வாள்.

இதனால் வீட்டில் அனைத்து வகையான செல்வமும் நிறையும், ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும் வாழ இலட்சுமி அருள் புரிவாள்.

முடிவுரை

ஆடி மாதத்தில் வருகின்ற எண்ணற்ற சிறப்புகளையும், நன்மைகளையும் தெரிந்துக்கொள்ள, இந்த பதிவு உதவியாக இருந்திருக்கும் என நம்புகிறேன். ஆடி மாதத்தில் அம்மனின் அருளை பெறுங்கள்.

Post a Comment

0 Comments