Ticker

6/recent/ticker-posts

ஆடி பதினெட்டாம் பெருக்கு | பகுதி 2 | தமிழர் வாழ்வியல்

ஆடிப்பெருக்கு சிறப்புகள்
ஆடிப்பெருக்கு சிறப்புகள் 

நாம் கொண்டாடும் அனைத்து விழாக்களும் ஏதேனும் ஒருவகையில், பண்பாட்டையும், நமது வரலாற்றையும், அறிவியலையும் கலந்த ஒன்றாக இருக்கும்.

அந்தவகையில், தமிழர்களின் விழாக்களில் ஒன்றான ஆடி பதினெட்டாம் பெருக்கு என்பது ஒரு தனி சிறப்பு வாய்ந்த விழாவாகும்.

பொருளடக்கம்

  • ஆடி பதினெட்டாம் பெருக்கு
  • ஆடிப்பட்டம் தேடி விதை
  • ஆற்றங்கரையில் விழா
  • ஆடிப்பெருக்கும், தாலிக்கயிறும்
  • ஆடி மாதமும், மஞ்சள் கயிறும்
  • ஆடியில் வாங்கலாம்

ஆடி பதினெட்டாம் பெருக்கு

ஆடி மாதம் பதினெட்டாம் நாள் கொண்டாடப்படும், ஆடி பதினெட்டாம் பெருக்கு என்பது, நமது மகிழ்ச்சியையும், வளங்களையும் பெருக்கி வாழ்வை சிறப்பாகும்.

நாம் கொண்டாடும் விழாக்கள் அனைத்தும், பொதுவாக விண்மீன்கள் தோன்றும் கிழமைகளை அடிப்படையாக கொண்டிருக்கும்.

ஆனால், நாட்களை அடிப்படையாக வைத்து கொண்டாடப்படும் ஒரே பண்டிகை ஆடி பதினெட்டாம் பெருக்காகும்.

பூஜை செய்யும் பெண்கள்
பூஜை செய்யும் பெண்கள்

இந்த நாளில் எந்த ஒரு நல்ல காரியங்களை செய்தாலும், அந்த காரியத்தின் பலனை பெருக்கும் என்பது ஐதீகம். 

இந்நாளில் கோடைக்காலத்தில் ஏற்படும் வறட்சி மெதுவாக மறைந்து, தென்மேற்கு பருவத்தினால் உண்டாகும் மழை காரணமாக, ஆற்றில் வரக்கூடிய புதுவெள்ள நீரை மக்கள் வரவேற்று, வணங்கி வழிபடுவார்கள்.

ஆடிப்பட்டம் தேடி விதை

"நீரின்றி அமையாது உலகு" என்பது வள்ளுவன் வாக்கு. மனிதனுக்கு நீர் மிகவும் அவசியமான ஓன்று. அந்த நீரை வணங்கி, வரவேற்று, மக்கள் விவசாயத்தை தொடங்குவார்கள்.

இதன் காரணமாகவே, "ஆடிப்பட்டம் தேடி விதை" என்ற பழமொழி தமிழர்களாகிய, நம்முடைய வழக்கத்தில் உள்ளது.

இந்த நாளில் வெள்ளம் கரைபுரண்டு வருவதால், குளம், குட்டைகள் என அனைத்திலும் நீரானது நிரப்பும். 

இதன் காரணமாக விவசாயிகள் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து, நெல், கரும்பு, வாழையென அனைத்து வகையான விவசாய தொழிலையும் தொடங்குவார்கள்.

விவசாயம்
விவசாயம்

இவ்வாறு விதைக்கப்படும் நெல்மணிகள், தைமாதத்தில் அறுவடைக்கு தயாராக இருக்கும். அப்பொழுது, அறுவடையால் ஏற்படும் இலாபமானது பல்வேறு வகைகளில் நன்மை அளிக்கும்.

இதன் காரணமாகவே, "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்கின்ற பழமொழிகளும், நம்முடைய முன்னோர்கள் மத்தியில் இருந்து வந்துள்ளது.

ஆற்றங்கரையில் விழா

ஆடி பதினெட்டாம் பெருக்கன்று, காவேரி ஆற்றையொட்டி வாழும் மக்கள் ஆற்றங்கரைக்கு சென்று, மஞ்சளினால் பிள்ளையார் பிடித்து வைத்து, வாழையிலையில் தேன், பன்னீர், தேங்காய், வெற்றிலைப்பாக்கு, கருகமணி, பச்சரிசி, வெல்லம், மற்றும் எள் கலந்து, மஞ்சள் தடவிய நூல்கயிற்றையும், அந்நாட்களில் விளையக்கூடிய பழங்களை வைப்பார்கள்.

பிறகு ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம், விபூதி, சந்தனம், மஞ்சள், குங்குமம்,  வாசனைப் பூக்கள் கொண்டு விநாயகரையும், காவேரித்தாயையும் வணங்குவார்கள்.

மஞ்சள் தடவிய கயிற்றை ஆண்கள் கைகளிலும், பெண்கள் கழுத்திலும் கட்டிக்கொள்வார்கள். சுமங்கலி பெண்கள், புதிதாக திருமணம் ஆன பெண்கள், தங்களுடைய தாலி கயிற்றை மாற்றி புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை கோர்த்து அணிந்துக்கொள்வார்கள்.

குடும்பமும் செழிப்பாக இருக்கணும் பயிர்களும் செழிப்பாக வளரனும் தடங்கல் இல்லாத தண்ணீர் வேண்டும் என காவிரித்தாயை வணங்கிகொண்டு  பெண்கள் தங்கள்  தாலிக்கயிற்றினை புதியதாக  மாற்றிக்கொள்வார்கள்.

இவ்வாறு வணங்குவதால், அந்தவருடம் விவசாயத்தில் பயிர்கள் செழித்து வளரும் என்றும், குடும்பதில் நல்ல மகிழ்ச்சி கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

தமிழகத்தில் மற்றப்பகுதில் வாழும் மக்கள் அவர்கள் வாழும் பகுதிக்கு அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு சென்று வணங்கி வரவேற்பார்கள்.

நீர்நிலை
நீர்நிலை

மக்கள் அருகில் நீர்நிலைகள் இல்லாத நிலையில், ஒரு சொம்பு நிறைய நீரை எடுத்து, அதில் மஞ்சள் கலந்து, பூக்களை வைத்து அப்பகுதியில் கிடைக்கப்பெறும் பழங்களை வைத்து அம்மனை வழிபடலாம்.

ஆடிப்பெருக்கும், தாலிக்கயிறும்

ஆடிப்பெருக்கன்று, சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதனால், கணவரின் ஆயுள் அதிகமாகும் என்பது நம்பிக்கை.

புது மணப்பெண்கள் புதிய மஞ்சள் கயிற்றை மாற்றிக்கொள்வார்கள். கன்னிப்பெண்கள், காவேரியில் நீராடி வழிபட்டால் சிறந்த கணவர் அமைவார் என்பது நம்பிக்கை.

மஞ்சள் கயிறு
மஞ்சள் கயிறு

ஆடி மாதமும், மஞ்சள் கயிறும்

ஆடி மாதத்தில் மாற்றப்படும் மஞ்சள் கயிற்றுக்கு ஒரு கதை உண்டு. இது வரலாற்று கதையாக மக்கள் மத்தில் இன்றளவும் கூறப்பட்டு வருகிறது.

புதியதாக திருமணம் ஆன ஒரு மன்னன், தன்னுடைய புது மனைவியை விட்டு, போருக்கு செல்லும் சூழல் ஏற்பட்டது. அப்பொழுது தன்னுடைய கணவன் குறித்து கவலைக்கொண்டாள்.

அப்பொழுது அவளுடைய கணவன், தன்னுடைய மனைவியிடம், எனக்கு ஏதேனும் நேரும்பட்சத்தில் வீட்டில் ஏற்றிய விளக்கு நின்றுவிடும்.

நான் தற்பொழுது உனது தலையில் சூட்டும் மலர் வாடும் என்று கூறினான்.

பின்னர், மேலும் அவள் மனநிம்மதிக்காக தான் வளர்க்கும் நாய் ஒன்றையும், அழைத்து செல்கின்றேன். எனக்கு ஏதேனும் நேர்ந்தால், நானின்றி இந்த நாயானது திரும்பி வரும் என்று கூறி போருக்கு புறப்பட்டு சென்றான்.

ஆற்று வெள்ளம்
ஆற்று வெள்ளம்

நாட்கள், மாதங்கள் ஓடின. போரில் வென்ற மன்னன் திரும்பும் சமயம் ஆடி மாதம் ஆகும். அவர்கள் செல்லும் வழியில் ஆறு ஒன்றை கடக்க நேர்ந்தது. குறைவான தண்ணீரில் நாயானது நீந்தி கடந்தது.

மன்னனும், வீரர்களும் கடக்கும் சமயம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓட தொடங்கியது. இதனால் மன்னனும் வீரர்களும் இக்கரையிலேயே தங்க நேர்ந்தது.

அக்கரைக்கு சென்ற நாயானது, நேராக வீட்டிற்கு சென்றது. கணவன் இல்லாமல் நாய் மட்டும் வீட்டிற்கு வருவதை கண்டு கவலை கொண்டாள்.

தன்னுடைய கணவன் சொன்னதை போல, விளக்கும் நிற்கவில்லை, பூவும் வாடவில்லை என்பதை எண்ணி குழப்பமும் அடைந்தாள். இதனால் கணவனுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்திருக்கும் என எண்ணினாள்.

கவலைக்கொண்ட பெண் (Sad Woman)
கவலைக்கொண்ட பெண் (Sad Woman)

இருந்தாலும், அவர் உயிருடன் இருப்பதாக கருதியே இருந்தாள், ஆனால், மக்கள் மன்னனுக்கு ஏதோ நேர்ந்திருப்பதாக கருதினார்கள்.

மக்களால், அரசியும் விதவைக்கோலம் கொண்டாள். நாட்கள் ஓடின. ஆற்று நீர் குறைந்ததும், கரைக்கடந்து மன்னன் நாட்டிற்கு வந்தான். அப்பொழுது அரசியின் நிலைக்கண்டு கலங்கினான்.

அன்றைய தினம் ஆடி பதினெட்டாம் நாள். அன்று இருவருக்கும் மறுபடியும் திருமணம் நடைபெற்றது. 

அந்த நாளை சிறப்பிக்கும் பொருட்டு, மக்களும் கயிற்றை மாற்றிக்கொண்டு விழாவாக கொண்டாட தொடங்கினார்கள்.

இவ்வாறே தான் ஆடி பதினெட்டாம் பெருக்கன்று, மஞ்சள் கயிறு மாற்றும் பழக்கம் ஏற்பட்டதாக கதை உண்டு.

கஸ்தூரி மஞ்சள்
கஸ்தூரி மஞ்சள்

ஆடியில் வாங்கலாம்

ஆடி பதினெட்டாம் நாளன்று வாங்கும் அனைத்து பொருட்களும், பெருக்கம் அடையும். அந்நாளில் வீட்டிற்கு வேண்டிய பொருட்கள் வாங்கும் பொழுது அவை பெருகும்.

இந்நாளில் தங்கம், வெள்ளி வாங்க முடியாதவர்கள், புதியதாக கல் உப்பு, கஸ்தூரி மஞ்சள் கிழங்கு வாங்கி வந்து, ஜாடியில் நிரப்பி வையுங்கள்.

கஸ்தூரி மஞ்சளில் மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். இவ்வாறு செய்வதால், நம் வீட்டில் இருக்கும் வறுமை நீங்கி, செல்வச்செழிப்பு பெருகும்.

முடிவுரை

சிறப்புகள் நிறைந்த ஆடி பதினெட்டாம் பெருக்கன்று, உங்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி, வீட்டில் வளமும், மகிழ்ச்சியையும் பெருக்குங்கள்.

Post a Comment

0 Comments