பிள்ளையார் |
Muzhu Muthal Kadavul | Vinayagar Chathurthi
இந்த உலகத்தில் உள்ள பெரும்பாலான மக்களின் நம்பிக்கைக்கு உகந்த, அதிஷ்டமும், நல்லெண்ணத்தையும் வழங்கும் முழு முதற்கடவுளான விநாயக பெருமானின், அவதார தினமான விநாயகர் சதுர்த்தியை பற்றி, இந்த பதிவின் மூலமாக தெரிந்துக்கொள்ளலாம்.
விநாயகர் சதுர்த்தி
இவ்வுலகில் உள்ள பல்வேறு மதங்கள், தெய்வங்கள் என இருப்பினும், மதங்களை கடந்து, அனைத்து மக்களுக்கும் பிடித்தமான ஒரு தெய்வம் என்றால் விநாயகர் தான்.
அந்த விநாயகரின் பிறந்தநாளை கொண்டாடும் தினம் தான் விநாயகர் சதுர்த்தி ஆகும்.
விநாயகர் பிறந்தநாள் என்பது விநாயகரை வழிப்படும் முக்கிய விழாவாகும். இது இந்துக்கள் மற்றுமின்றி பல்வேறு மதத்தினர் கொண்டாடும் ஒரு விழா ஆகும்.
ஒவ்வோர் ஆண்டும், தமிழ் மாதம் ஆவணி, வளர்பிறை சதுர்த்தி அன்று, விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
விநாயகர் |
கணேசன் பிறந்தநாள்
விநாயகர் பிறந்த நாளென்று கருதப்படும், மற்றொரு நாள் கணேச ஜெயந்தி அல்லது மகா சுக்கில சதுர்த்தி ஆகும். இது தில் குந்த சதுர்த்தி என்றும், விரத சதுர்த்தி என்றும் அழைக்கப்படுகிறது.
இது ஒவ்வொரு வருடமும், மாசி மாதத்தில் வரும் சுக்கில பட்ச சதுர்த்தி தினத்தன்று கொண்டாடப்படுகிறது.
பெரும்பாலும், நமக்கு தெரிந்த விநாயகர் சதுர்த்தி தினமானது, ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி தினத்தன்று கொண்டப்படும். ஆனால், இது மாசி மாதத்தில் வரும் கொண்டப்படுகிறது.
கணபதி |
விநாயகரும், மராட்டியமும்
இந்திய மட்டுமல்லாது, ஏனைய பல நாடுகளில் விநாயகரை வழிப்பட்டாலும், இன்று மஹாராஷ்டிரா என்று அழைக்கப்படும் மராட்டியம் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது.
மக்களில் எவ்வித ஏற்றத்தாழ்வுகளும் இல்லாமல் கொண்டாடும் ஒரே பண்டிகையாகவே உள்ளதென்றால் மாற்றுக்கருத்தில்லை. இந்தியாவிலேயே மஹாராஷ்டிராவில் தான், விநாயகரை பிரதான கடவுளாக பெரும்பான்மையாக வழிபடுகின்றனர்.
தமிழகத்தில் எவ்வாறு முருகப்பெருமானுக்கு கோவில்கள் தனித்துவமாக உள்ளதோ, அந்த அளவிற்கு மஹாராஷ்டிராவில் விநாயகருக்கு கோவில்கள் அதிகம்.
அதுமற்றுமின்றி மகாராஷ்டிரத்தில் புனேவைச் சுற்றி விநாயகர் புராணத்துடன் சம்பந்தப்பட்ட, எட்டு விநாயகர் கோயில்கள் உள்ளது. இந்த கோவில்கள் அஷ்ட விநாயகர் கோயில்கள் என அழைக்கப்படுகின்றது.
இவற்றில் ரஞ்சன்காவ் ஸ்ரீ மகா கணபதி என்கின்ற மஹோத்கதா கோயில்தான் மிகவும் புராதனமானதும், பெரியதுமாகும்.
ஆனைமுகன் |
மஹாராஷ்டிரத்தின் பிரதான கடவுள்
மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜியின் ஆட்சிக்கு காலத்திலிருந்தே இந்த விழாவானது மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சத்ரபதி சிவாஜி அமைத்த மராத்திய சாம்ராஜ்ஜியத்தின் பிரதம மந்திரியாக மொரோபந்து பிங்களே (பெஷாவா) அவர்கள் நியமிக்கப்பட்டு இருந்தார்.
விநாயகரை வழிபடும் பழக்கம் கொண்ட பெஷாவாக்கள் தான். முதன் முதலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைத்தவர்கள். இவர்களால் தான் மகாராஷ்டிரம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்ட தொடங்கியது. பின்னர், விநாயகருக்கு பல கோவில்களும் நிறுவப்பட்டது.
விநாயகர் |
சுதந்திரமும், விநாயகர் ஊர்வலமும்
இந்தியா, ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருந்த காலத்தில், அன்றைய இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதரத்திலகர் (1856 - 1920) தகடுஷேத் ஹல்வாயி கணபதி கோவிலில், விநாயகர் சதுர்த்தியில் போராட்டத்தை தொடங்கினர்.
அன்று பெரிய பிளாஸ்தர் ஆப் பாரிஸ் விநாயகரை அமைத்து ஊர்வலத்தை தொடங்கினர். அதில் ஆங்கிலேயருக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு, மக்களிடம் தேசியம் வளர ஊக்குவித்தார்.
பிற்காலத்தில் மராட்டிய மக்கள், தங்களுடைய கலாச்சார விழாவாகவும், குடும்ப விழாவாகவும் கொண்டாடத்தொடங்கினர். விநாயகர் சதுர்த்தியன்று, அங்குள்ள மக்கள் தங்களுடைய வசதிக்கேற்ப விநாயகர் சிலைகளை வைத்து கொண்டாடுகின்றனர்.
விநாயகர் |
தமிழகமும், விநாயகர் சதுர்த்தி
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் பட்டித்தொட்டியெங்கும் பந்தல்கள் அமைத்து, விநாயகர் சிலைகளை நிறுவி பூஜைகளை செய்வார்கள்.
விநாயகர் பூஜைக்கு கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள், அருகம்புல் வைத்து சிறப்பிப்பார்கள்.
இந்துக்களின் எல்லாவிதமான தெய்வ வழிபாடுகளுக்கும் மற்றும் எந்தவொரு முக்கிய காரணமானாலும், சுபகாரியங்கள்ஆனாலும் விநாயகர் வழிபாடு தான் முதல் இடம் பெறுகிறது.
இது தமிழகத்திற்கு மற்றுமின்றி, உலகில் உள்ள எந்தவொரு மூலையில் வாழும், இந்து மக்கள் விநாயகர் வழிபாடே முதன்மையாக கொண்டார்கள்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தெய்வமான விநாயகரை வழிபடுவது மிகவும் எளிதானது. பூஜையை தொடங்கும்போது விநாயகரின் திருவுருவமோ, விக்கிரகமோ இல்லாமல் போனாலும் மஞ்சளில் ஒரு கூம்புபோல பிடித்து வைத்து அதையே பிள்ளையாராக நினைத்து பூஜையை தொடங்கலாம்.
விநாயகர்பெருமான் பூஜைக்கு சிறப்பான பொருட்கள் என்று எதுவுமில்லை. அருகம்புல் அபிஷேகம் மற்றும் நிவேதனம் செய்வதிலேயே, ஆனந்தப்பட்டு ஏற்றுக்கொள்வார்.
முழுமுதற்கடவுள் |
பெருமை வாய்ந்த பிள்ளையார் திருத்தலங்கள்
தமிழகத்தில் பல்வேறு சிறப்பு வாய்ந்த விநாயகர் திருத்தலங்கள் உள்ளன. அவைகள் அனைத்தும் வரலாற்று சிறப்புகள் வாய்ந்தவைகள். அந்தவகையில், தமிழகத்தில் உள்ள சில கோவில்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.
1. ராமேஸ்வரம் கோயிலின் நுழைவாயிலில் தரிசனம் தரும் இரட்டை பிள்ளையாரை வழிபட்ட பிறகே கோவிலுக்குள் செல்லவேண்டும்.
2. திருப்பரங்குன்றத்தில் கற்பக விநாயகர், தாமரை மலரில் அமர்ந்த நிலையில் வழக்கத்துக்கு மாறாக கையில் கரும்புடன் காட்சி தருகிறார்.
3. திருவையாறு கோயிலில் ஓலமிட்ட விநாயகர், நள்ளிரவில் ஓலமிட்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதை உணர்த்துகிறார்.
விநாயகர் |
4. அரியலூர் - ஜெயங்கொண்டத்திற்கு அருகே 10 கி.மீ தொலைவில் உள்ள வைரவனீஸ்வரர் கோயிலில் அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரப்பயிற்சி தந்த வில்லேந்திய விநாயகரை தரிசிக்கலாம்.
5. வேலூர் கோட்டையில் புஷ்பக்கலை நிறைந்த கல்யாண மண்டபத்தில் நவநீத கிருஷ்ணரைப் போல அழகிய குழந்தை வடிவில் உள்ள விநாயகரை தரிசிக்கலாம்.
6. பிள்ளையார்பட்டி - இங்கு விநாயகருக்கு வெள்ளை ஆடை மட்டுமே அணிவிக்கின்றனர். சகஸ்கரநாம அர்ச்சனைக்காக, தினமும் 108 மோதகம் படைப்பது இந்த கோயிலின் தனிச்சிறப்பு ஆகும்.
ஐங்கரனான விநாயகர், மூன்று கரங்களுடன் காட்சி தரும் இடமாக பிள்ளையார்ப்பட்டி விளங்குகிறது.
7. கன்னியாகுமரி மாவட்டம் கேரளபுரம் மகாதேவர் என்ற கோயிலில் இருக்கும் விநாயகர் ஆவணி மாதம் முதல் தை மாதம் வரை வெள்ளை நிற மேனியுடனும், மாசி மாதம் முதல் ஆடி மாதம் வரை கருப்பு நிற மேனியுடனும் காட்சி தருவார்.
பிள்ளையார் |
8. மருதமலையில் ஆலமரம் முதலான ஐந்து விருட்சங்கள் பின்னி பிணைந்து இருக்கும் இடத்தில் விநாயகர் அருள் புரிகிறார். இவரை பஞ்சவிருட்ச கணபதி என்றழைக்கின்றனர். பஞ்ச விருட்சத்தின் அடியில் முனிவர்கள் அருவமாக தவம் இருப்பதாக ஐதீகம்.
9. மயிலாடுதுறை - திருவாரூர் இடையில் பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகே உள்ள திலதர்ப்பணபுரியில் ஆதிவிநாயகர் தும்பிக்கை இல்லாமல் காட்சி தருகிறார்.
10. சென்னை மீஞ்சூருக்கு அருகே உள்ள செட்டிப்பாளையத்தில் உள்ள வலஞ்சை விநாயகர் கோயிலில் வலப்புறம் சாய்ந்த நிலையில் அருள் தருகிறார்.
முடிவுரை
விநாயகர் பிறந்த நாளான, இந்த அற்புதமான நாளில் தும்பிக்கையானை நம்பிக்கையுடன், வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைத்து சிறப்பாக வாழலாம்.
கேட்டதையெல்லாம், கேட்டபடியே கொடுக்கும், விநாயகப்பெருமானின் பிறந்தநாளை கொண்டாடுவோம். அவரது அருளும், ஆசியும் பெற்று நலமுடன் வாழ்வோம்.
0 Comments