தில்லை நடராஜர் கோவில் |
தில்லை நடராஜர் கோவில் என்றாலே எண்ணற்ற அற்புதங்கள் நிறைந்த தலம் ஆகும். அந்த தலத்தில் நிகழ்ந்த பல்வேறு அற்புதங்களில், ஒரு சிலவற்றை, இந்த பதிவின் மூலமாக தெரிந்துக்கொள்ளலாம்.
ஊமைப்பெண் பேசிய அற்புதம்
சிவத்தலங்கள் பலவற்றை வழிப்பட்டு வந்த மாணிக்க வாசகப்பெருமான், இறுதியாக தில்லை நடராஜர் கோவிலை வந்தடைந்தார். தில்லை வந்த பின்னர், மாணிக்கவாசகர் பல்வேறு பதிகங்களை பாடி வந்தார்.
அந்த சமயத்தில், தில்லை வந்த சிவனடியார் ஒருவர் தில்லையின் அற்புதங்களை கண்டு, அங்கிருந்து திரும்பியதும், "பொன்னம்பலம்" "பொன்னம்பலம்" என்ற வார்த்தையை கூறிக்கொண்டே சென்றார்.
அந்த காலத்தில் ஈழத்தில் பௌத்த மதம், இன்றைப்போல அல்லாமல் செழிப்பாக இருந்தது. அவர் ஈழத்திலும், பொன்னம்பலம் என்று கூறுவதை நிறுத்தவில்லை.
அவர் பொன்னம்பலம் என்று கூறுவதை கேட்ட பௌத்த துறவிகள் மனம் பொறாதவர்களாய், அவரை மன்னனிடம் கொண்டு சென்றனர். அங்கு, அந்த சிவனடியார் சிதம்பரத்தின் அருமைப்பெருமைகளை விவரித்தார்.
இதைக்கேட்ட மன்னனும், பௌத்த துறவிகளும் தில்லையில் புத்த சமயத்தை நிலைநாட்ட எண்ணினார்கள். அதனால் மன்னன், தன்னுடைய ஊமைப்பெண் மற்றும் பௌத்த குருக்களை அழைத்துக்கொண்டு தில்லை வந்தடைந்தனர்.
நடராஜர் ஆலயம், சிதம்பரம் |
அங்கு வந்தவுடன், பௌத்த குருக்கள் அனைவரையும் வாதுக்கு அழைத்தனர். அப்பொழுது தில்லை வாழ் அந்தணர்களின் கனவில் தோன்றிய எம்பெருமான், "மாணிக்கவாசகரை கொண்டு பௌத்தரை வாதில் வெல்க" என்று கூறினார்.
தில்லையில், திருசிற்றம்பலத்தில் அறிஞர்கள் முன்னிலையில் மாணிக்கவாசகர், பௌத்த குருவை நோக்கி, உன் வாதம் என்ன? என்று வினவ, அவர் பௌத்த சமயக் கொள்கைகளைக் கூறினார்.
அவற்றைக் கேட்ட மாணிக்கவாசகர், சைவ சமய உண்மைகளை சபைக்கு எடுத்துக் கூறி பௌத்த சமய வாதத்தை மறுத்தருளினார். ஆனால், அதை பௌத்த குருக்கள் ஏற்கவில்லை.
அதனால் மாணிக்கவாசகப்பெருமான் கலைமகளின் அருளைக்கொண்டு அவர்களை உமையாக்கினார். இதைக்கண்ட மன்னர், தன்னுடைய ஊமை பெண்ணை பேச வைக்குமாறு வேண்டினார்.
மாணிக்கவாசகப்பெருமான், அந்த ஊமை பெண்ணை பல கேள்விகள் கேட்க, அந்த பெண்ணும் பதில் பேசினாள்.
அதைக் கண்ட பௌத்த மன்னன் உடனே மாணிக்கவாசகரை நோக்கி பேசுபவர்களை ஊமர்களாக்கிய தாங்கள் ஊமையாகிய என் மகளைப் பேசச் செய்தால் நாங்கள் அனைவரும் சைவர்களாகிய விடுவோம் என்றான். இந்த நிகழ்வை மாணிக்கவாசகப்பெருமான் திருச்சாழல் என தொகுத்து அருளினார்.
இதனால் மன்னன் சைவத்தை தழுவினான். அம்மன்னின் வேண்டுதலை ஏற்று புத்த துறவிகளை பேச வைத்தார். அவர்களும் சைவத்தை ஏற்றனர்.
இறைவன் எழுதிய ஏடுகள்
ஒருநாள் அந்தணர் வடிவில் வந்த இறைவன், தன்னை பாண்டிய நாட்டினர் எனக்கூறி மாணிக்கவாசகப்பெருமானிடம் திருவாசகம் கூறக்கேட்டு, திருவாசகத்தை ஏட்டில் எழுதினார். பின்னர், மாணிக்கவாசகப்பெருமானை பார்த்து "பாவைப்பாடிய வாயால் கோவையும் பாடுக" என்று கேட்டார்.
தில்லை நடராஜர் ஆலயம் |
அதைக்கேட்டு, மாணிக்கவாசகப்பெருமானும் திருச்சிற்றம்பலக்கோவையை பாட இறைவனும் அதை எழுதியருளினார். இறுதியாக, அந்த ஏட்டில் திருச்சிற்றம்பல உடையான் என கையெழுத்திட்டார்.
அந்த சுவடிகளை பஞ்சாட்சரப்படியில் வைத்து மறைந்தார். மாணிக்கவாசகப்பெருமான் பாடல்களை பாடும் பொழுது கண்களை மூடிக்கொண்டு பாடுவது வழக்கம். தில்லை வாழ் அந்தணர்கள், சுவடிகளை காட்டி, இதன் பொருளை விளக்கி கூற கேட்டனர்.
மாணிக்கவாசகப்பெருமானும், அவர்களை அழைத்து தில்லை கூத்தப்பெருமான் காட்டி, இவரே அதன் பொருள் எனக்காட்டி இறைவனுடன் ஒன்றாக கலந்தார்.
சம்பந்தர் கணநாதரைக் காணல்
தேனினும் இனிய தமிழையும், தெய்வீகத்தையும் ஒன்றாக வளர்த்த சைவக்குறவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் தில்லை நடராஜரை காண ஆவல் கொண்டார். அதன் காரணமாக, தில்லைக்கு புறப்பட்டு சென்றார்.
திருஞானசம்பந்தர் வருகையை அறிந்த தில்லை அந்தணர்கள், அவரை கோலாகலமாக வரவேற்றனர். தில்லை விழாக்கோலமாக காட்சியளித்தது. திருஞானசம்பந்தர், தெற்கு வாயிலாக கோவிலில் நுழைந்தார்.
தன்னுடைய கண்களில் நீர் ததும்ப, செந்தமிழால் தில்லை நாதனை வாழ்த்தி பல பதிகங்களை பாடியருளினார். நான்கு திரு வீதிகளையும் இறைஞ்சி, திருவேட்களம் சென்று அங்குள்ள இறைவன் மீது பதிகம் பாடிப் பணிந்து அங்குத் தங்கினார்.
தில்லை சிவகாமி அம்மன் ஆலயம் |
திருவேட்களத்தில் தங்கிய ஞானசம்பந்தர் நாள்தோறும் தில்லை வந்து அம்பலவாணர் திருவடிகளை வணங்கி வருவது வழக்கம். ஒருநாள் திருக்கழிப்பாலை என்னும் திருத்தலத்துக்குச் சென்று அங்கு எழுந்தருளிய இறைவனுக்கு அருந்தமிழ் மாலை சாத்தினார்.
நீலகண்ட யாழ்ப்பாணரும், அவரது திருப்பதிக இசையினை தமது யாழிலமைத்துப் பாடி வந்தார். அந்நிலையில் ஒருநாள் ஞானசம்பந்தர் தில்லைக்குச் செல்லும்போது தில்லைவாழ் அந்தணர்கள் அனைவரும் இறைவனருளால் கணநாதராகக் காட்சியளிக்கக் கண்டார்.
தாம் கண்ட அக்காட்சியினைப் பாணர்க்குக் காட்டிப் பரவசமுறச் செய்தார். பின்னர் அம்பலவாணர் திருமுன் சென்று "ஆடினாய் நறுசெய்" எனத் தொடங்கும் பதிகம் பாடி தாம் கண்ட காட்சியை அதில் வைத்துப் போற்றினர்.
அப்பரடிகளின் உழவாரப்பணி
அப்பரடிகள் என்னும் திருநாவுக்கரசர் சுவாமிகள் நிவா நதிக்கரையின் வழியாக நடந்து சென்று தில்லையம்பதியை அடைந்து பொன்னம்பலத்திலே எந்நாளும் இன்ப நடனம் புரிந்தருளும் கூத்தப் பெருமானைக்கண்டு கும்பிட்டு நலமுற வீழ்ந்து வணங்கி, "என் புருகப்" பதிகம் பாடி போற்றி பணிந்தார் .
எண்ணற்ற பல பாதிக்கங்களை, தமிழ் மணம் கமழ பாடிய திருநாவுக்கரசர், 'அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்' என்னும் திருக்குறுந்தொகை பாடியருளினார்.
மூவர் தேவாரம் கிடைத்தமை
சோழநாட்டு திருநரையூர் என்னும் தலத்தில் ஆதி சைவ மன்றயவர் குலத்தில் தோன்றிய நம்பியாண்டார் நம்பி. அத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பொல்லப் பிள்ளையாரைப் பூசிக்கும் குடியைச் சார்ந்தவர்.
இவர் வேதங்களையும், ஆக்கங்களையும் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் உரிய பருவத்தில் பயிலத் தொடங்கினார். ஒருநாள் இவரின் தந்தையார் வேற்று ஊருக்குச் செல்லவே தந்தையின் கட்டளைப்படியே பொல்லப் பிள்ளையாருக்குப் பூசை செய்ய சென்றார்.
தில்லை நடராஜர் ஆலயம் |
பிள்ளையாருக்கு திருமஞ்சனம் முதலியவற்றைச் செய்த பின் நிவேதனத்தை முன் வைத்து 'எம்பெருமானே அமுது செய்தருள வேண்டும்' என்று விண்ணப்பித்துக் கொண்டார்.
விநாயகர் உண்மையாகவே நிவேதனத்தை ஏற்றருள்வார் என்று இளஞ்சிறுவர் நம்பியாண்டார் நம்பி எண்ணியிருந்தார். விநாயகர் அமுது செய்யாது இருப்பதைக்கண்டு நாம் ஏதேனும் தவறு செய்து விட்டோமோ என்று எண்ணி உள்ளம் வருந்தினார்.
பின்னர் வருத்த மிகுதியால் தலையை சுவரில் மோதிக்கொள்ளப் புகுந்தார். அதைக் கண்டு இரங்கிய பொல்லப் பிள்ளையார் அச்சிறுவரைத் தடுத்து நிவேதித்த நிவேதனத்தை அமுது செய்தருளினார்.
பிறகு அப்பொல்லாப் பிள்ளையாரே நம்பியாண்டாருக்கு கல்வி கற்பித்தார். நாள்தோறும் இவ்வற்புதங்கள் நிகழ்ந்து வரவே இச்செய்தி எங்கும் பரவியது. அக்காலத்தில் தஞ்சையில் இருந்து அரசாண்டு வந்த சோழ மன்னன் மிக்க சிவபக்தன்.
அவனிடம் வந்த சிவ பக்தர்கள் தேவாரத்தில் சில பாசுரங்களைச் சொல்வது வழக்கம். அவற்றைக் கேட்ட சோழன் அவற்றின் இனிமையிலே உள்ளம் பறிகொடுத்து தேவாரம் முழுவதும் எங்கே கிடைக்கும் என்று ஆராய்ந்தான். எங்கும் கிடைக்காமல் போகவே வருந்தினான்.
அவ்வாறு இருந்த சோழன் நம்பியாண்டார் நம்பியின் செய்தியை அறிந்தான். உடனே அப்பெரியரைக் கொண்டு நம் குறையைப் போக்கிக் கொள்வோம் என்று எண்ணி பூசைக்குரிய பொருள்களோடு திருநாரையூர் வந்தடைந்தான்.
நம்பியைக்கண்டு வணங்கி, பொல்லாப் பிள்ளையாருக்கு பூசையும் நிவேதனமும் செய்யும்படி வேண்டினான். நம்பியும் அவ்வாறே செய்யக்கண்டு கழித்தான். சோழ மன்னன் நம்பியை அடிவணங்கி, "அடியேனுக்கு ஒரு குறை உள்ளது. மூவர் முதலிகள் அருளிச் செய்த தேவாரம் முழுவதும் எங்கும் கிடைக்கவில்லை. விநாயக மூர்த்தியின் திருவருள் துணைக் கொண்டு அவை கிடைக்கும்படிச் செய்யவேண்டும்" என்று வேண்டினான்.
நம்பியாண்டார் நம்பியும் பொல்லப் பிள்ளையாரை வணங்கி .அப்பெருமானுடைய திருவருளால் சிதம்பரத்தில் பொன்னம்பலத்தின் அருகே மூவர் திருக்கர முத்திரைகளோடு தேவார ஏடுகள் உள்ளன என்று அறிந்தார்.
அன்றியும் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் பாடிய பதிகங்கள் பதினாறாயிரம். திருநாவுக்கரசு நாயனார் பாடியவை நாற்பத்னொன்பதாயிரம் பதிகங்கள். சுந்தர மூர்த்தி நாயனார் பாடியவை முப்பத்தொண்ணாயிரம் பதிகங்கள் என்றும் உணர்ந்து இச்செய்திகளைச் சோழ மன்னனுக்குத் தெரிவித்தார்.
தில்லை நடராஜர் கோவில் |
அதன் பின்னர் நம்பியாண்டார் நம்பியும், சோழ மன்னனும் சிதம்பரம் சென்று அங்குள்ள தில்லை வாழ் அந்தணரை வணங்கி செய்தியைக் கூறினார்.
மூவர் முதலிகளுக்கு விழா நடத்தி அவர்களை எழுந்தருளச் செய்து, குறிப்பிட்ட இடத்தில் தேடும்பொழுது கறையான் புற்று மூடிக்கிடப்பது கண்டு திடுக்கிட்டனர்.
பின்னர் எண்ணெய் சொறிந்து புற்றினுள்ளே இருந்து சுவடுகளை எடுத்துப் பார்த்தபொழுது, பல பகுதிகள் கறையனுக்கு இரையாகிப்போயின என்று அறிந்தார்கள். நம்பியாண்டார் நம்பி, உள்ளவற்றை எடுத்துச் சோதித்து அடைவு படுத்தத் தொடங்கினார்.
இவரே மூவர் தேவாரம், மணிவாசகர் திருவாசகம் முதலிய நூல்களைத் தொகைப் படுத்திப் பன்னிரு சைவத் திருமுறைகளை வகுத்தவர் ஆவார்.
அம்பலவாணர் அளித்த பரிசில்
சேரமான் பெருமாள் நாயனார் என்னும் பெரியார் வன்றொண்டராகிய சுந்தரமூர்த்தி நயனரைக் காணவும், பொன்னம்பலத்தை இறைஞ்சவும், விரும்பியவராய் தில்லைக்கு வந்தார் .திருச்சிற்றம்பலத்தை அடைந்தார். இறைவனைப்போற்றி போன் வண்ணத் தந்தாதியைப் பாடினார். இறைவனாரும் அதற்குப் பரிசிலாக காற்சிலம்பொலியை கேட்பித் தருளினார்.
முடிவுரை
எம்பெருமான் ஈசன் குடிகொண்ட தில்லையில், எந்நாளும் இடைவிடாது ஆனந்த தாண்டவத்தை ஆடிக்கொண்டு இருக்கின்றான். எவன் ஒருவன் தில்லையில் ஈசனின் தரிசனத்தை காண்கின்றானோ, அவன் மனம் எப்பொழுதும் தில்லையில் குடிக்கொள்ளும்.
தில்லை நடராஜரின் அருளை அனைவரும் பெறுக!
0 Comments